Thursday, April 18, 2024
Home » பொருளாதாரத்தை சரியான திசையில் கொண்டு செல்ல பிரபலமல்லாத எந்த ஒரு முடிவையும் எடுக்கத் தயார்

பொருளாதாரத்தை சரியான திசையில் கொண்டு செல்ல பிரபலமல்லாத எந்த ஒரு முடிவையும் எடுக்கத் தயார்

யாழ்ப்பாணத்தில் ஐ. தே. க செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்தல்

by damith
January 9, 2024 9:14 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு பிரபலமல்லாத எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கையின் தமிழ் நாகரீகம் வட மாகாணம் என்றும், யாழ்ப்பாணம் இந்து மதத்தின் மையப்பகுதி என்றும் கூறிய ஜனாதிபதி, வடமாகாணத்தின் முக்கியத்துவத்தை அப்படியே பேணிக்காத்து, வடக்கின் பொருளாதாரத்தை நாட்டின் தேசிய பொருளாதாரத்துடன் துரிதமாக இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கின் விரைவான பொருளாதார அபிவிருத்தியுடன் எதிர்காலத்தில் புதிய தொழில் வாய்ப்புகளும் பல புதிய முதலீட்டு வாய்ப்புகளும் உருவாகும் எனவும் வடக்கை அபிவிருத்தி செய்து முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு வடக்கிலுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் சுமார் 600 கட்சி செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டதோடு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

வடமாகாண இளைஞர் கே. ரவியால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படம் கொண்ட ஓவியமும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:

“இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது தொடர்பில் விஜயகலா மகேஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வடமாகாண பிரச்சினைகளில் காணிப் பிரச்சினை மற்றும் காணாமற்போனோர் பிரச்சினை என்பன முதன்மைப்படுத்தப்பட்டிருந்தன. அரசாங்கம் என்ற வகையில், அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் வடக்கின் காணி பிரச்சினை மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம். அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி என்பவற்றை பயன்படுத்தி ஏற்றுமதிக்கான வலுசக்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தியிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் வளமான விவசாய நிலங்களில் நவீன தொழில்நுட்பத்தை சேர்த்து ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த தசாப்தத்தில் உலக மக்கள் தொகை இரட்டிப்பாகும் நிலையில், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி விவசாயத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நல்லூர் திருவிழாவை உலக இந்து பக்தர்களுக்கு காணும் வாய்ப்பை வழங்கும் வகையில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஓகஸ்ட் மாதம் எசல பெரஹெர மற்றும் கதிர்காமம் பெரஹெர மற்றும் யாழ் நல்லூர் திருவிழா ஆகியவற்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளன.

வடக்கில் சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தியில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்கான வாய்ப்புகளை புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான புதிய பொருளாதார மறுசீரமைப்புகளினால் வட மாகாணத்தில் புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும். இதனால் வடபகுதி இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முடிவுகள் பிரபலமானவையாக இல்லாதிருக்கலாம். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக எந்தவொரு பிரபலமற்ற முடிவையும் எடுப்பேன். நாம் அனைவரும் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து நாட்டை அபிவிருத்தி செய்வோம்”. இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ரஜித கீர்த்தி தென்னகோன், சுன்னாகம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT