Home » தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானது

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானது

by damith
January 9, 2024 6:00 am 0 comment

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். அக்கோரிக்கை சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்களிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது, சம்பள அதிகரிப்பு தொடர்பில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அறியத் தருமாறு பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டிருந்தார். இருந்த போதிலும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்கள் நிலைப்பாட்டை இதுவரை ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இன்று (09ஆம் திகதி) தொழில் அமைச்சில் நடைபெற உள்ளது. நாளொன்றிக்கு ரூ. 1700.00 ஐ பெற்றுக்கொடுக்கும் வகையில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளை நிறுவனமொன்றை நேற்றுமுன்தினம் திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயக்கார, ‘பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு இம்மாத முடிவுக்குள் தீர்வு கிடைக்கப்பெறும்’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரினதும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரினதும் இந்த அறிவிப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நிச்சயம் நம்பிக்கையை ஏற்படுத்தும். அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களதும் எதிர்பார்ப்பு சம்பள உயர்வே ஆகும்.

இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை நல்கி வருபவர்களில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் முக்கியமானவர்களாவர். அவர்கள் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக சுமார் 200 வருடங்களாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அளித்துவரும் பங்களிப்பு வரலாற்றில் அழியாத்தடம் பதித்தவையாக உள்ளது.

இருந்த போதிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் இன்னும் இந்நாட்டில் நிலத்திற்கான உரிமை பெற்றவர்களாக இல்லை. அவர்கள் போதிய வசதிகள் அற்ற லயக்காம்பறாக்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். நாடொன்றின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப இம்மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் மேம்பாடு அடைந்திருப்பதாக இல்லை. பல தரப்பினரதும் கருத்தும் அதுவேயாகும்.

அப்படியிருந்தும் இத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் கூடிய கவனம் செலுத்தத் தவறி விடுகின்றன. இது நியாயம் காண முடியாத விடயமாகும். அதிலும் இம்முறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தமக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கேட்டிருந்தும் இற்றைவரையும் இந்த நிறுவனங்கள் அறிவிக்காதிருக்கின்றன. இது நியாயப்படுத்தக் கூடிய விடயம் அல்ல.

இவ்வாறான சூழலில்தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளவென நியமிக்கப்பட்டுள்ள குழு இன்று தொழில் அமைச்சில் கூடுகின்றது. இக்குழுவில் தொழில் அமைச்சு, பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் என்பவற்றின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். அதனால் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். அதுவே அனைத்துத் தரப்பினரதும் விருப்பமாகும். கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களைப் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் எதிர்கொண்டார்கள். குறிப்பாக பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களது விலைகளும் பெரிதும் அதிகரித்தன. அதன் தாக்கங்களுக்கும் அவர்களும் முகம்கொடுத்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துவரும் பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களின் பயனாக அந்தப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புக்களும் அசௌகரியங்களும் தற்போது பெரும்பாலும் நீங்கியுள்ளன. ஆனாலும் அந்நெருக்கடியின் தாக்கங்கள் நிலவவே செய்கின்றன. அவற்றில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. அதனால் அந்தத் தாக்கத்திற்கு சம்பள உயர்வு குறிப்பிடத்தக்களவு நிவாரணமாக அமைய முடியும். ஆகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானது என்பதே பெரும்பாலானவர்களின் அபிப்பிராயமாக உள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படுவது அவசியம். அதுவே மக்களின் கருத்தாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT