பின்நவீன உலகின் பிரதி மஜீத் கவிதைகள் | தினகரன்

பின்நவீன உலகின் பிரதி மஜீத் கவிதைகள்

பின்நவீன கோட்பாட்டில் தமிழகச் சூழலில் பலர் எழுத முற்பட்டாலும், ஈழத்து படைப்பாளிகள் பின்நவீனத்துவத்தினை கதையாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். அதன் வரிசையில் மாறுபட்டு பின்நவீனத்துவ சிந்தனைகளுடன் மஜீதின் எழுத்துக்கள் இலக்கியப் பரப்பினை ஆக்கிரமித்துக் கொண்டன. ஒரு இலையின் மரணம், சுள்ளிக்காடும் செம்பொடையனும், கதை ஆண்டி, ஏறுவெயில், புலி பாய்ந்த போது, இரவுகள் கோடையில் அலைந்தன, மஜீத் கவிதைகள், யாரோ ஒருத்தியின் டைரி, மஜீதின் பின்நவீன கதையாடல் மூன்று என மஜீத் தனக்கான விசித்திர உலகினை வகுத்துக் கொண்டார். எப்பொழுதும் வெளிப்படை வாதமாக இயங்கும் மஜீதினுடைய எழுத்துக்கள் பின்நவீனத்துவ கோட்பாட்டினை அலசி அலுப்படைய வைக்காமல் பின்நவீனத்துவ கோட்பாட்டிற்கு உள்ளாக ஆக்க இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டன. இதன் விளைவே அவரை தனித்துவமிக்க படைப்பாளியாக மாற்றியிருக்கிறது எனலாம். 

இவ்வாறான சூழ் நிலையினில் இன்று பெரும் கதையாடலினை தோற்றுவித்திருக்கும் மஜீதின் பின்நவீன கதையாடல் மூன்று எனும் விளிம்புநிலைப் பிரதியானது இலக்கிய உலகிற்கு மிகவும் புதுமையான வாசிப்பினைத் தருகிறது. ஆயிரம் காத்திரமற்ற எழுத்தாளர்கள் பேசப்படாமல் இருக்கலாம் ஆனால் காத்திரமான ஒரு படைப்பாளி இருட்டடிப்பு செய்யப்படுவதென்பது பெரும் அபத்தமாகும். இன்று விளிம்பு நிலை வாதிகளாக தங்களுடைய வாழ்வியலை நகர்த்துகின்ற பல சமூகங்களின் கட்டமைப்பிற்காக மஜீதினுடைய எழுத்துக்கள் போராடுகின்றன. மஜீத் காதலை தன்னுடைய கவிதைகளில் பாடுகிறான் என்றால் அது தேசம் பற்றிய காதலாகத்தான் இருக்கும், மஜீத் பெண்ணுடலை பாடுகிறான் என்றால் அது அதிகாரத்தின் மீதான குறியீடாகத்தான் இருக்கும் என்பதினை ஒரு தேர்ந்த வாசகன் புரிந்து கொள்வான். நீட்சியான வாசிப்பின் தேடலினை மேற்கொள்ளாத எந்த வாசகனுக்கும் மஜீதின் பிரதிகளை புரிந்து கொள்வதென்பது வைக்கோல் போரில் குண்டூசி தேடுவது போன்று மிகவும் சிரத்தையானது... 

எந்தப் பதிலுக்குப் பின்னேயும் ஒரு கேள்விக்குறியைப் போட்டுவிட்டால் அது கேள்வியாகவே மாறிவிடும். ஆகவே பதில்கள் கூட கேள்வியை உற்பத்தி செய்வதற்கான ஒரு முயற்சிதான் என்று கூறும் மஜீத் அற்புத மொழிகளின் கூட்டுக்காரன். இன்று நம்மோடு அவன் இல்லை. ஆயினும் அவனது சொற்கள் எம்மோடே பயணிக்கின்றன. 


Add new comment

Or log in with...