சிங்கராஜ வனத்தை பார்வையிடும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி | தினகரன்


சிங்கராஜ வனத்தை பார்வையிடும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை  தொடர்ந்து, சிங்கராஜ வனத்தை பார்வையிட வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிங்கராஜ வன பரிபாலன காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, சிங்கராஜ வனத்திற்கு  வருகை தந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை  165  எனவும், இதற்கு முன்னர்  வேறு தினங்களில் மாதமொன்றுக்கு 1,500 -2,000 வரையான உல்லாசப் பயணிகள் சிங்கராஜ வனத்திற்கு வருகை தருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். 

சிங்கராஜ வனத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளிடமிருந்தே அதிகளவான  வருமானம் இதுவரை காலமும் ஈட்டப்பட்டு வந்தது. உல்லாசப் பயணி ஒருவரிடமிருந்து இவ்வனத்துக்கு செல்லும் நுழைவாயில் பிரவேசக் கட்டணம் 575 ரூபா அறவிடப்படுகின்றது. 

உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்தமையால், சிங்கராஜ வனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடமும் தற்போது வெறிச்சோடிக் காணப்படுவதாகவும், குறித்த அதிகாரிகள்  தெரிவித்தனர்.

(அப்துல் சலாம் -பலாங்கொடை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...