Home » டெங்கு பரவும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

டெங்கு பரவும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி

by damith
January 9, 2024 10:19 am 0 comment

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு மேற்பார்வை மற்றும் சிரமதான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீனின் பணிப்புரைக்கு அமைய நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் ஒருவார காலத்திற்கு டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் இதுவரை 80 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50ற்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பொதுமக்களாகிய உங்கள் ஒவ்வொருவருடைய வாசல் கதவுகளையும் டெங்கு மரணம் தட்டும் போது இதன் உண்மையான பாதிப்பை உணரக்கூடியதாகவிருக்கும். டெங்கு மரணமொன்று இடம்பெறுவதாகவிருந்தால் அதற்கு சுகாதாரத் தரப்பும் பொதுமக்களும் பொறுப்பு கூற வேண்டும். இரு தரப்பினரதும் ஒத்துழைப்பு இல்லாத போதே டெங்கு மரணம் நிகழ்கிறது. எனவே வீடு வீடாக சென்று டெங்கு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளோம். டெங்கு நோய் பரவுவதற்கான சூழல்கள் அடையாளங்கள் காணும் பட்சத்தில் உரிய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் டெங்கு நோய் பரவுவதற்கான சூழலை இல்லாமல் செய்யும் சிரமதான பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று சமூகத்தில் உள்ள மதஸ்தலங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக சேவை நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறான அமைப்புகள் கடந்த காலங்களில் எமக்கு பாரியளவிலான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. அவர்களுடைய ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் எமக்கு கிடைக்க வேண்டுமென தெரிவித்தார்.

ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT