விஜயகாந்துக்கு மாற்று சக்தியாக உருவெடுத்த கமல் | தினகரன்

விஜயகாந்துக்கு மாற்று சக்தியாக உருவெடுத்த கமல்

கட்சி தொடங்கி ஒரு வருடத்தில் தமிழக மூன்றாம் சக்தியாக மக்கள் நீதி மய்யம்

விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அந்த இடத்தைப் பிடிக்கும் மகத்தான சக்தியாக கமல்ஹாசன் உருவெடுத்துள்ளார். 2006ம் ஆண்டு தே.மு.தி.க தொடங்கப்பட்டதும், முதல் முறையாக தனித்து நின்று, அந்த சட்டசபைத் தேர்தலில், 8.4 வீதம் வாக்குகளை பெற்றது அக்கட்சி. விஜயகாந்த் மட்டும் விருதாச்சலத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வாக்கு வங்கி பெரும் ஆச்சரியம் தந்தது உண்மை.

இதற்கு அடுத்த லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10.3 சதவீதம் வாக்குகளை பெற்றது அக்கட்சி. ஆனால் எங்கும் வெற்றி பெற முடியவில்லை.

வாக்கு சதவீதத்தை வெற்றியாக மாற்றும் நோக்கில் 2011இல் அ.தி.மு.கவோடு தே.மு.தி.க கூட்டணி வைத்தது. அதில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வென்றது. வாக்கு சதவீதம் 7.9 ஆகும். குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டதால் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தபோதிலும், அதன் வெற்றி வீதம் அதிகம் எனச் சொல்லும் அளவுக்கு இருந்தது. ரிஷிவந்தியம் தொகுதியில் வென்ற விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவரானார்.

அ.தி.மு.கவோடு கூட்டணி வைத்து பிறகு ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் சட்டசபையில் மோதலில் ஈடுபட்டு கூட்டணி பிரிந்த பிறகு, தே.மு.தி.கவுக்கு இறங்குமுகம்தான். கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாமல் 2.4 சதவீதம் வாக்குகளைத்தான் பெற்றது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை துணிச்சலுடன் எதிர்த்த விஜயகாந்த்தை மக்கள் உச்சத்தில் வைத்து கொண்டாடியதன் விளைவுதான் அவருக்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி. அதுவும் கட்சி ஆரம்பித்த ஐந்தே வருடங்களில் இதை சாதித்தார்.

தற்போது விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அவரது மனைவி பிரேமலதாவின் பிரசாரங்களை மக்கள் ரசிக்கவில்லை. எனவே படுபாதாளத்திற்கு தே.மு.தி.க சென்று விட்டது.

ஆனால், கட்சி தொடங்கி ஒரே வருடம் ஆகியுள்ள குட்டிக் குழந்தை மக்கள் நீதி மய்யம், இம்முறை லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது. உண்மையான அ.தி.மு.க நாங்கள்தான் என்று மார்தட்டிய அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யத்தை விட வயதில் மூத்த நாம் தமிழர் ஆகியோரை விடவும் பல தொகுதிகளில் கமல் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

குறிப்பாக சென்னை போன்ற நகர்ப்புற மக்களிடம் கமல்ஹாசன் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் போன்றவை பெண்கள் மத்தியில் முன்பை விடவும் இப்போது அதிக கவர்ச்சியைக் கொடுத்துள்ளது. சென்னையின் 3 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 3வது இடத்தை பிடித்துள்ளது. தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு அடுத்ததாக ம.நீ.ம 3வது இடம் என்பது உண்மை.

முன்னணி நி​ைலவரத்தை வைத்பை் பார்த்தால், கணிசமான வாக்கு வங்கியை ம.நீ.ம உருவாக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

விஜயகாந்த்துக்கு மாற்று சக்தி என்ற அந்தஸ்தை மக்கள் கமலுக்குக் கொடுத்துள்ளனர். இது தினகரன் போன்றோருக்கெல்லாம் கிட்டாதது. தனித்துப் போட்டி என்ற முடிவில் கமல்ஹாசன் உறுதியாக இருந்தால், வருங்காலத்தில் இவர் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து கட்சி வளர்ச்சிக்கு அது உரமாகும்.


There is 1 Comment

Add new comment

Or log in with...