உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெருவெற்றி! | தினகரன்

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெருவெற்றி!

காங்கிரஸ் மீண்டெழும் காலம் வெகுதொலைவில்

இந்தியாவின் 17வது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பா.ஜ.க மீண்டும் பெருவெற்றி பெற்றுள்ளது. அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்றதையடுத்து நரேந்திரமோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 3 இலட்சத்து 85ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வேலூர் தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 340 இடங்களில் நேற்று மாலை முன்னிலை வகித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து எதிர்வரும் 26ஆம் திகதி பிரதமர் மோடி குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். அன்றைய தினமே மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

நாட்டுக்குத் தேவை இளவரசனல்ல... அடித்தட்டு மக்களின் வலியை உணர்ந்த வலிமையான தலைவர்தான் என்பதை மக்கள் உணர்ந்து மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு

வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ளனர். இந்த வெற்றி சாதாரணமானதல்ல. மோடிக்கு

எதிரான எத்தனையோ பிரசாரங்களை பின்தள்ளி செல்வாக்ைக நிரூபித்திருக்கிறார் மோடி.

2014ஆம் ஆண்டு மோடி பிரதமரானது முதல் இப்போது வரை ஏழை, நடுத்தர மக்களுக்கும், கிராமே மக்களுக்கும் செய்த நலத்திட்டங்கள் இந்த வெற்றியை தேடித்தந்திருக்கின்றன. கிராமங்களை வீதிகள் மூலம் இணைத்த மோடி மக்களை கவர்ந்தார்.மானிய விலையில் வீடு கட்டும் திட்டம் மோடிக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது. நடுத்தர மக்கள் பலரும் இன்றைக்கு சொந்த வீட்டுக்கு சொந்தக்காரர்கள் ஆனதுக்குக் காரணம் மோடியின் இந்த திட்டம்தான்.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டியால் பாதிப்பு என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினாலும் கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் அவற்றை மறந்து விட்டனர் என்றே கூற வேண்டும். கூட்டணி ஆட்சியில் எதுவும் சாதிக்க முடியாது என்று நினைத்துத்தான் மக்கள் பாஜகவிற்கு மீண்டும் பெரும்பான்மை கிடைக்கும் அளவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை வரப்போகும் 5 ஆண்டுகளில் அவரது ஆட்சியின் மூலம் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.

தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் "ஒன்றாக நாம் வளர வேண்டும். நாம் ஒன்றிணைந்து வளமாக வேண்டும். நாம் ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியா மீண்டும் வெற்றி" என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதாவால் ஒரு இடத்தைக் கூட பெற முடியாது என்று கர்ஜித்த

மம்தாவுக்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் பேரிடியாக அமைந்துள்ளது. ஏனெனில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களிலும், பாஜக 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தலைவர்களும்,, தொண்டர்களும்குவிந்து வருவதுடன், அங்கு கொண்டாட்டங்களும் களை கட்டி இருக்கின்றன. நேற்று மாலை 20,000 தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இத்தேர்தலில் காங்கிரஸ் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது.கேரளாவில் உள்ள வயநாடு பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி குடும்பத்தினரின் ஆஸ்தான தொகுதியாக உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி பாராளுமன்றத் தொகுதி கருதப்படுகிறது.அங்கும் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.

தனது குடும்பத்தாரின் ஆஸ்தான தொகுதியான அமேதியில், ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி ராணியிடம் ராகுல் தோல்வியடைந்தார்.இது காந்தி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமேதி தொகுதியில் தோல்வி பயம் காரணமாகவே, வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார் என்று பாஜகவினர் தேர்தலின் போது விமர்சனம் செய்து வந்தனர்.

வட இந்திய மக்கள், இந்தியாவின் பழம் பெரும் கட்சியான, காங்கிரஸையும், அதன் தற்போதைய

தலைமையையும் புறக்கணித்துவிட்டதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. 17வது லோக்சபா

தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கசப்பு மருந்தை கொடுத்துள்ளன.

பெரும்பான்மைக்கு தேவையான எம்பிக்கள் பலத்திற்கான முன்னிலையை நேற்றுக் காலை 9.15 மணிக்கே பெற்று விட்டது பாஜக கூட்டணி.

நேரு குடும்பத்திலிருந்து வந்து, அடுத்த பிரதமர் கனவில் இருந்த ராகுல் காந்திக்கு அமேதியில்

கிடைத்த அடி என்பது, ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை

நினைவுபடுத்துகிறது. ராகுல் காந்தி தலைமையையும், காங்கிரசையும், வட இந்தியாவின்

பெரும்பான்மை மக்கள் ஏற்கவில்லை என்பதை இது காட்டுகிறது.


Add new comment

Or log in with...