Friday, April 19, 2024
Home » திருக்காட்சிப் பெருவிழா
இறைவனைத் தேடும் ஆவலைத் தூண்டும்

திருக்காட்சிப் பெருவிழா

by damith
January 9, 2024 6:00 am 0 comment

புது வருடம் பிறந்து முதலாவது ஞாயிற்றுக்கிழமையில் கத்தோலிக்கத் திருச்சபையானது மூன்று ராஜாக்கள் திருவிழா அல்லது திருக்காட்சி பெருவிழா என்ற பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது.

இயேசு பாலகன் பிறந்ததை அறிந்து அவரை தரிசித்து, வணங்கி, பரிசுப் பொருட்களை வழங்குவதற்காக கிழக்குத் திசையிலிருந்து மூன்று ஞானிகள் அல்லது ராஜாக்கள் பெத்லகேமுக்கு சென்று இயேசு பாலனை தரிசித்ததாக வரலாறு தெரிவிக்கின்றன.

மூன்று ராஜாக்கள், மூன்று சாஸ்திரிகள் அல்லது மூன்று ஞானியர் என்று பலவாறு அழைக்கப்படும் இந்த மூவரும் யார்? இயேசு ஒரு குழந்தையாக பெத்லஹேமில் பிறந்திருந்தபோது கிழக்கிலே தோன்றிய வால் நட்சத்திரம் வழிகாட்ட, அவர்கள் பலநூறு மைல்கள் அந்த நட்சத்திரம் காட்டிய வழியைப் பின்பற்றி பெத்லஹேம் வந்து சேர்ந்தார்கள்.

குழந்தை இயேசுவைக் கண்டு, பொன்னையும் வெள்ளைப் போளத்தையும் தெய்வக் குழந்தைக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு நிறைவோடு திரும்பிச் சென்றார்கள்.

டிரெஸ், ரேயெஸ், மேகோஸ் என்ற பெயர்களைக் கொண்ட அந்த மூன்று ராஜாக்களைப் பற்றி இயேசுவின் முதன்மைச் சீடரான மத்தேயு தனது நற்செய்தியில் குறிப்பிடுகின்றார்.

இந்த மூவரும் கடந்த இருபது நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களின் மனங்களில் இறைவனைத் தேடும் தாகத்தை உண்டாக்கியிருக்கின்றார்கள். இந்த காரணத்துகாகவே உலகின் பல்வேறு பிரிவு கிறிஸ்தவ மக்களும் ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தை இவர்களின் பெயரால் திருக் காட்சித் திருவிழாவாகக் கொண்டாடுகின்றார்கள்.

கடவுள் தங்களுக்கு மட்டுமே தோன்றுவார் என்று எண்ணிவந்த யூத இனமக்களுக்கு இந்தத் திருவிழாவில் பொதிந்திருக்கும் உண்மை அதிர்ச்சியைத் தரக்கூடியாது. காரணம் வான தூதர் வழியாகவும், எரியும் புதர் வழியாகவும் தங்களுக்கு மட்டுமே இறைவன் தோன்றினார் தங்களுக்கு மட்டுமே பத்துக் கட்டளைகள் எனும் மகத்தான வாழும் வழிமுறையைக் கொடுத்தார் என்ற கர்வத்தோடு தங்களை ‘இறைமக்கள்’ என்று அழைத்துக் கொண்டனர்.

தங்களுக்காகவே தங்கள் இனத்தில் இறைமகனை கடவுள் பிறக்கச் செய்வார். அவர் தங்களுக்கானவர் மட்டுமே என்று கருதினார்கள். ஆனால் யூதமக்களின் இந்த அகந்தையை மூன்று ஞானியர் வழியாகக் கடவுள் சுக்குநூறாக நொறுக்கினார் என்றே சொல்ல வேண்டும்.

இறைவன் மனித உருவில் யூத இனத்தில் இயேசுவாக அவதரித்தபோது கீழை நாடுகளில் தர்ம பரிபாலன ஆட்சியை நல்கி வந்த மூன்று தேசங்களின் ராஜாக்களுக்கு இறைமகன் பிறந்திருப்பதை குறிப்பால் உணரச் செய்து யூதர் அல்லாத புற இனத்தாருக்கும் கடவுள் தன்னை வெளிப்படுத்தினார்.

அந்த மூவரில் ஒருவர் ஆதிக்குடிகளாய் வாழ்ந்த கருப்பின மக்களின் தேச அதிபதி என்பதும் குறிப்பிடத் தக்கது.

தன்னை எந்தவொரு மனிதக் குழுவும் தனித்து சொந்தம் கொண்டாட முடியாது, அதேபோல் யாராலும் தன்னை ஒளித்து வைக்க முடியாது என்பதை கீழைத் தேசங்களைச் சேர்ந்த மூன்று ராஜாக்களுக்கு இறைவன் வெளிச்சம்போட்டுக் காட்டினார்.

உண்மையில் இறைவன் இந்த உலகத்தின் பொது சொந்தம். எனவேதான் இயேசு பிறந்து குழந்தையாய் இருக்கும்போது அவரைக் காண வந்த இந்த மூன்று ராஜாக்களின் வருகையை எல்லோருக்குமான திருக்காட்சித் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

இறைவனைப் பங்கு போட்டுப் பிரித்து அதன் மூலம் மக்களையும் பிரிக்கும் எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழாவாக இது அடையாளம் பெற்று வருகிறது.

தன்னைச் சிரத்தையுடன் தேடும் அனைவருக்கும் கடவுள் தன்னை வெளிப்படுத்தும் அழகு தன்னிகரற்றது. அதேநேரம் தன்னைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி வரத் தேவையில்லை. “நான் எப்போதும் எங்கும் உங்களைச் சூழ்ந்தே இருக்கிறேன்” என்பதையே இயேசு இதன் மூலம் தெரிவிக்கின்றார்.அவரைக் காண நாம் மறுத்து, நம் அகக் கண்களை மூடிக் கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப் போல் நாம் உணர்கிறோம்.

ஞானமே வடிவான இந்த மூன்று ராஜாக்கள் இயேசுவைச் சந்திக்க வந்த இந்த நிகழ்வைப் பல கோணங்களில் சிந்திக்கலாம். அவர்கள் விண்மீன்களின் ஒளியில் நடந்தனர். இறைவனை மனிதக் குழந்தையாகச் சந்தித்த பின் அவர்கள் ரோமாபுரியின் அரசன் எரோதுவுக்கு பயந்து வேறு வழியாகத் திரும்பிச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது.

இவர்கள் இறைவனைச் சந்திக்கும் போதும், சந்தித்த பின்பும் ஏற்பட்ட மாற்றங்களை நாம் சிந்திப்பது சிறந்தது.

விண்மீன் காட்டும் வெளிச்சம்

விண்மீனைக் கண்டு பயணம் மேற்கொண்ட இந்த ஞானிகளைப் பற்றி விவிலியம் தரும் மற்றுமொரு விபரம்: “கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்.” விவிலிய ஆராய்ச்சியாளர்கள் இந்த ஞானிகள் இந்தியாவிலிருந்தும் ஆசியாவிலிருந்தும் வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்து வந்தவர்கள். வானில் புதிய நட்சத்திரம் தோன்றியதும் வியப்புற்று அதன் மூலம் நடந்துவற்றை அறிய விரும்பினார்கள்.

கோள்களையும், நட்சத்திரங்களையும் வைத்து வாழ்வில் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப் பார்க்கலாம்.

ஒருவர் பிறந்த திகதியால், பிறந்த நேரத்தால் அவருக்குக் குறிக்கப்படும் நட்சத்திரம் அவரது வாழ்க்கையில் பல நேரங்களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் அறிவோம்.

இப்படிக் கோள்களையும், நட்சத்திரங்களையும் நம் வாழ்க்கையை நடத்திச் செல்ல விட்டுவிட்டு, பல நேரங்களில் நம்மையும், நம் குடும்பங்களையும் வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நாம் விலகிப் போகிறோம் என்பதை நாம் உணர்வதே இல்லை. இந்தக் கோள்களும் நட்சத்திரங்களும் கடவுளின் கைப்பிடிக்குள் இருப்பவை என்பதையே மறந்து கடவுளுக்கு பயப்படுவதற்குப் பதிலாக நாம் கோள்களுக்குப் பயப்படும் பரிதாபகரமான குழந்தைகளாகிவிடுகிறோம்

இந்த அவசர உலகில் நாம் விண்மீன்கள் நிறைந்த நிர்மல நீலவானத்தை ஆபூர்வமாகவே பார்க்கிறோம். நம்மில் பலர் நகரங்களில் வாழ்க்கிறோம். அங்கு இரவும் பகலும் எரியும் செயற்கை விளக்குகளின் ஒளியில் நாம் வானத்தையே மறந்து போகிறோம். வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. கருமேகங்கள் திரண்டு வரும்போது, “ஒருவேளை மழை வருமோ?” என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தை நிமிர்ந்து நோக்குகிறோம்.

கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள நாம் வானத்தை நோக்கிப் பார்ப்பதும் இல்லை. பிரார்த்திப்பதும் இல்லை. சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண் சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் கண்சிமிட்டி அழைக்கும் தெய்வீக அழகும் நமக்குத் தெரியாது.

நாம் சிந்திக்கும் இந்த ஞானிகள் எத்தனை இரவுகள் விண்மீன்களை வானில் தொலைத்துவிட்டு வேதனைப் பட்டிருப்பார்கள்? இருந்தாலும் இறுதிவரை மனம் தளராமல் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இலக்கை அடைந்தார்கள். கடவுளைக் கண்டார்கள். அந்த ஞானிகளைப் போல் கடவுளை சிரத்தையுடன் நாமும் தேடுவோம்.

அனிதா அசிசி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT