ஜனாதிபதி பொது மன்னிப்பு; ஞானசார தேரர் விடுதலை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து நேற்று மாலை 5.30 மணியளவில் அவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.

அவரது விடுதலையை எதிர்பார்த்து நேற்று நண்பகல் முதல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் பெருந்திரளான ஆதரவாளர்களும் ஊடகவியலாளர்களும் திரண்டிருந்தனர். ஞானசார தேரரின் தாயார் உள்ளிட்ட உறவினர்களும் சிறைச்சாலைக்கு முன்பு காத்திருந்தனர்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் நேற்று மாலை 3 மணியளவில் விடுதலை செய்யப்படுவாரென பரவலாக செய்திகள் வெ ளியாகியிருந்தமையடுத்து மக்கள் அவரது விடுதலையை எதிர்பார்த்து பெரும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். இதனையடுத்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் ஞானசார தேரரை விடுவிப்பதற்கான அறிவித்தல் கடிதம் நேற்று பிற்பகல் 4 மணியளவிலேயே சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கிடைத்துள்ளது. அதனால் அவர் மாலை 5.30 மணியளவிலேயே விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் சிறைச்சாலையின் முன்வாயில் வழியாக வராமல் பின்விழியாக வெளியேறி வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அவருக்காக காத்திருந்த அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் ஊடகவியலாளர்களும் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.

கடந்த வெசாக் போயா தினத்தன்று(18) ஜனாதிபதி பொது மன்னிப்பின்கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வையடுத்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள ஞானசார தேரரை சந்தித்து சுமார் 45 நிமிடங்களாக உரையாடினார். இதன் பிரதிபலிப்பாகவே ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த 21 ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தார்.

ஞானசார தேரரை விடுவிக்கும் கட்டளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டிருந்தபோதும் அவரை விடுவிக்குமாறு வழங்கும் உத்தரவு நேற்று மாலை 4.30 மணியளவிலேயே சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கிடைத்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தி காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2016 ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கின்போது எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்காக ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டார் என்று அவருக்கு மேலும் தண்டனை வழங்கப்பட்டது.

இதுதொடர்பில் ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தபோதும் அவை நிராகரிக்கப்பட்டன. அதன் பின்னர் அவர் சுகயீனமுற்ற நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையிலேயே அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு நேற்று வழங்கினார்.

 லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...