ரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி | தினகரன்

ரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி

வட கிழக்கு சிரியாவில் ஜிஹாதிக்களின் கோட்டை மீது சிரிய அரசின் கூட்டணியான ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறு இரவு இடம்பெற்ற வான் தாக்குதல்களை அடுத்து முன்னாள் அல் கொய்தா கிளையாக இயங்கிய குழுவுக்கும் சிரிய படைக்கும் இடையில் கடும் மோதம் இடம்பெற்றதாகவும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் இத்லிப் பிராந்தியம் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு கடந்த செப்டெம்பரில் இடம்பெற்ற உடன்படிக்கையின் கீழ் அரச படையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டு வந்தது. எனினும் கடந்த ஏப்ரல் தொடக்கம் இங்கு அரச படை மற்றும் ரஷ்யாவின் வான் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இத்லிப் மாகாணத்தின் கப்ரன்பல் நகரில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் ஐந்து சிறுவர்கள், நான்கு பெண் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வான் தாக்குதலுக்குப் பின் எல்லை நகரில் ஐந்து வீடுகள் தரைமட்டமாகி இருப்பதாக அங்கிருக்கும் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...