ஹுவாவியில் கூகிள் செயலிகள் இடைநிறுத்தம் | தினகரன்

ஹுவாவியில் கூகிள் செயலிகள் இடைநிறுத்தம்

ஹுவாவியில் கூகிள் செயலிகள் இடைநிறுத்தம்-US Ban Huawei-Android Block Huawei

Android Update கிடைக்காது எனவும் அறிவிப்பு
சிறந்த மென்பொருள் தொகுதியை கட்டியெழுப்புவோம் என Huawei தெரிவிப்பு

கூகிள் நிறுவன அன்ட்ரொய்ட் இயங்குதளத்தின் (Operating System ஒபரேடிங் சிஸ்டத்தில்) மேம்படுத்தல்கள் (Updates) மற்றும் அதன் செயலிகள் உள்ளிட்டவற்றை,  ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட சாதனங்கள் பெறமுடியாதவாறு கூகிள் அதனை நிறுத்தியுள்ளது.

அதற்கமைய தற்போதுள்ள ஹுவாவி தொலைபேசிகளுக்கு Android Update மற்றும் Google Play Protect (Play Store) இனால் வழங்கப்படும்  Google Play மற்றும் Google Security ஆகியன புதிய ஸ்மார்ட்போன்களில் கிடைக்கப் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் நிறுவனத்தின் Android இதனை தனது ட்விற்றர் கணக்கின் ஊடாக இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்காவை மையமாகக் கொண்ட கூகிள் நிறுவனத்தின் Google Play உள்ளிட்ட அதன் செயலிகளான YouTube, Gmail, Google Maps உள்ளிட்ட செயலிகளுக்கான அனுமதி ஹுவாவி சாதனங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதோடு, அவை ஏற்கனவே பாவனையில் உள்ள சாதனங்களில் மாத்திரம் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று (15), அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவியின் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூகிள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அரசின் ஆணையுடன் இணைந்து செயல்படுவதாகவும், இதன் விளைவுகள் குறித்து மறு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கூகிள் அன்ட்ரொய்டின் அடுத்த பாகத்தை இவ்வாண்டின் இறுதியில் வெளிடவுள்ளது. அது ஹுவாவி சாதனங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

கூகுளின் இந்த நடவடிக்கை குறித்து முதலில் செய்தி வெளியிட்ட ரோய்டர்ஸ் நிறுவனம், கூகுளின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை ஹுவாவி இழக்கிறது என்றும், மேலும் புதிய கைபேசிகளில் யூடியுப் மற்றும் மேப்ஸ் போன்ற வசதிகள் காணப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

ஹுவாவி வாடிக்கையாளர் வர்த்தகத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

5ஜி மொபைல் வலையமைப்புகளில் ஹுவாவியின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என பல நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளது.

இதுவரை இதுகுறித்து பிரிட்டன் எந்த ஒரு அதிகாரபூர்வ தடையும் அறிவிக்கவில்லை. ஹுவாவி தனக்கு சொந்தமான செயலிகளை உருவாக்க முயன்று வருகிறது.

இது அந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுவதோடு, இந்நடவடிக்கை மேற்கத்திய நாடுகளில் ஹுவாவி வர்த்தகத்தை பாதிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் கூகிள் செயலிகளின் பயன்பாடு இல்லை என்பதால், கூகிள் நிறுவனத்தின் நடவடிக்கை சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும் சர்வதேச ரீதியில் ஏனைய சந்தைகளைப் பாதிக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும் தாம் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும பொருட்டான பாதுகாப்பான மென்பொருள் தொகுதியொன்றை விரைவில் கட்டியெழுப்புவோம் என இது தொடர்பில் ஹுவாவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"Huawei நிறுவனம், உலகளாவிய ரீதியில் Android இன் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. Android இன் மிக முக்கியமான சர்வதேசப் பங்காளர்களில் ஒருவர் எனும் வகையில் நாம் அவர்களது திறந்த இயங்குதளமான (இலவச இயங்குதளமான Open Source) Android தளத்தை பயன்படுத்தி வந்தோம். பாவனையாளர்கள் மற்றும் தொழிற்துறை ஆகிய இரு பிரிவினருக்கும் நன்மையளிக்கும் வகையிலான சூழலை உருவாக்கும் நோக்கில் அவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம்.

இது வரை விற்பனை செய்யப்பட்டுள்ள Huawei மற்றும் Honor ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட் சாதனங்கள் ஆகிய உற்பத்திகள் மற்றும்  உலகளாவிய ரீதியில் கையிருப்பிலுள்ள சாதனங்கள் அனைத்திற்கும், அதற்கு அவசியமான பாதுகாப்பு மேம்பாடுகள் (Security Updates) மற்றும்  விற்பனைக்குப் பின்னரான சேவைகளை Huawei தொடர்ந்தும் வழங்கும்.

அத்துடன் உலகாளவிய ரீதியில் அனைத்து பாவனையாளர்களும் விரும்பும் வகையிலான சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையிலான, பாதுகாப்பு மற்றும் நிலைபேறான தன்மை கொண்ட மென்பொருள் தொகுதியொன்றை நாம் கட்டியெழுப்புவோம்.

இலங்கையில் தற்போது சந்தையிலுள்ள மற்றும் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள Huawei ஸ்மார்ட்போன் மற்றும் சாதனங்களுக்கும் தொடர்ந்தும் அனைத்து விதமான சேவைகளும் வழங்கப்படும் எனும் உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம்.


Add new comment

Or log in with...