மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை | தினகரன்

மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

Major General Janaka Perera Assasination-Life Sentence-மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை-

அனைத்து சொத்துகளும் அரசுடைமை

தற்கொலை தாக்குதல் மூலம் மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா உள்ளிட்ட 31 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகளில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட, தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதாகி, கடந்த ஐந்து வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மதவாச்சி, மஹசியம்பலாகஸ்கடவை சேர்ந்த உமர் ஹத்தாப் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான குறித்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, இன்றைய தினம் (21) அநுராதபுர விசேட மேல் நீதிமன்றில், முன்னாள் நீதிபதியும் கம்பஹா மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான கேமா சுவர்ணாதிபதியினால் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இக்குற்றத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்தமை மற்றும் திட்டமிட்டமை தொடர்பில், நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் முன்னாள் ஆயுதப்போராட்ட தலைவர்களில் ஒருவருக்கு இதற்கு முன்னர், வட மத்திய மாகாண மேல் நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த இரண்டாம் பிரதிவாதி மீது சுமத்தப்பட்ட 48 குற்றச்சாட்டுகளில் அவர் மீது 31 நிரூபிக்கப்பட்டதாக நீதவான் அறிவித்தார்.

அதன் அடிப்படையில், முதல் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில், பிரதிவாதிக்கு தலா 20 வருடங்கள் வீதம் 60 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, தண்டனைக் காலத்தை தனித்தனியாக கழிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதோடு, 4 ஆவது குற்றச்சாட்டு முதல் 31 ஆவது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதற்கு அமைய, அவை அனைத்திற்கும் ஆயுள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் பிரதிவாதியின் அனைத்து சொத்துகளும் அரசுடைமையாக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...