இந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம் | தினகரன்

இந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்

ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள்

ந்தியாவின் பலம் வாய்ந்த பிரதமராகப் போற்றப்பட்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் 21.05.1991இல் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரம்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார் அவர்.இந்தியாவின் தலைமுறை மாற்றத்தை உணர்த்தும் தலைவராக ராஜீவ் காந்தி திகழ்ந்தார். தேசிய வரலாற்றில் ராஜீவ் காந்திக்கு முக்கிய பங்கு உண்டு. சுட்டுக் கொல்லப்பட்ட இந்திராவின் இறுதிச்சடங்கு முடிந்ததும் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது. 508 தொகுதிகளில் 401 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.

700 மில்லியன் இந்தியர்களுக்கு அவர் தலைவரானார். அதைவிட முக்கியமானது ராஜீவ்காந்தி அரசியலுக்கு வந்த கதை. சுதந்திரப் போராட்டத்திலும் சுதந்திர இந்தியாவிலும் இவரது குடும்பம் நான்கு தலைமுறையாக அரசியலில் ஈடுபட்டுள்ளது.என்றாலும் இவருக்கு அரசியலில் பெரும் நாட்டம் இல்லை. இவர் தாமதமாகதான் அரசியலுக்கு வந்தார்.

ராஜீவ்காந்தி 1944 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதி பம்பாயில் பிறந்தார். அவருக்கு 3 வயது நடக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்று அவரது பாட்டனார் பிரதமரானார். அவரது பெற்றோர் லக்னோவில் இருந்து புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர். அவரது தந்தை பெரோஸ் காந்தி நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது தந்தை மிகவும் துணிச்சலும், கடும் உழைப்பும் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற புகழ் பெற்றவர்.

ராஜீவ்காந்தி தனது குழந்தைப் பருவத்தில் தனது பாட்டனாருடன் தீன் மூர்த்தி இல்லத்தில் இருந்தார். அங்கு இந்திரா காந்தி பிரதமரின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். ராஜீவ் சிறிது காலம் டேராடூனில் உள்ள வெல்ஹாம் பிரப்பாடசாலையில் கல்வி பயின்றார். பின்னர் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள தங்கும் வசதி கொண்ட டூன் பாடசாலைக்கு மாற்றப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது இளைய சகோதரர் சஞ்சயும் இப்பாடசாலையில் சேர்க்கப்பட்டார்.

பாடசாலைப் படிப்பை முடித்தவுடன் ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், விரைவில் அவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அவர் இயந்திர பொறியியல் படித்தார்.

அரசியலை தனது வாழ்க்கையில் தொழிலாக எடுத்துக் கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. அவருடன் படித்தவர்களைப் பொறுத்தவரை அவரது புத்தக அலுமாரி முழுவதும் பல்வேறு அறிவியல், பொறியியல் சம்பந்தமான புத்தகங்கள்தான் இருந்தன. அரசியல், வரலாறு அல்லது தத்துவம் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை. இருப்பினும் அவருக்கு இசையில் நாட்டம் உண்டு. மேற்கத்திய இசை, இந்துஸ்தானி, நவீன இசையையும் அவர் விரும்பினார்.

அவருக்கு மிகவும் பிடித்தது விமானம் ஓட்டுவது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவுடனே டில்லி விமான ஓட்டுதல் கழகத்தின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். அங்கு அவர் வணிக விமான ஓட்டுநர் உரிமம் பெற்றார். பின்னர் இந்தியன் எயார்லைன்சில் விமானியாகச் சேர்ந்தார்.

அவர் கேம்பிரிட்ஜ்ஜில் இருந்த போது ஆங்கிலத்துறையில் படித்துக் கொண்டிருந்த இத்தாலி பெண் சோனியா மைனோவை சந்தித்தார். அவர்கள் 1968-இல் புதுடில்லியில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது இரு குழந்தைகள் ராகுல் மற்றும் பிரியங்காவுடன் புதுடில்லியில் உள்ள இந்திராகாந்தியின் இல்லத்தில் இருந்தனர். அவர்களைச் சுற்றி பல அரசியல் நிகழ்வுகள் நடந்தாலும் அவர்கள் தனிமையான வாழக்கையை வாழ்ந்து வந்தனர்.ஆனால், 1980-இல் விமான விபத்தில் உயிரிழந்த அவரது சகோதரர் சஞ்சயின் மரணம் அவர்களது தனிமை வாழ்க்கையை மாற்றியது.

அரசியலில் ராஜீவ்காந்தி இறங்கி அவரது தாயாருக்கு உதவ வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் இருந்த அவரது சகோதரரின் மரணத்தினால் ஏற்பட்ட நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

1984 ஒக்டோபர் 31 அன்று அவரது தாயார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராகவும் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்கும் திறனும் வேறுயாருக்கும் வராது. தனது சொந்த வாழ்க்கையில் உள்ள சிரமங்களை பொருட்படுத்தாமல் நாட்டிற்காக தனது கடமையைத் தெளிவாகவும் துல்லியமாகவும் சிறப்பான முறையிலும் செயல்படுத்தினார்.

நவீன எண்ணங்களும் அதிக தொழில்நுட்பமும் தெரிந்திருந்தாலும் அவர் எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார். அவர் அடிக்கடி கூறுவது ஒன்றுதான்.

இந்தியாவை பொறுத்தவரை அவரது முக்கிய நோக்கம் ஒற்றுமை. அதன் பிறகு நாட்டை 21-வது நூற்றாண்டிற்காக தயார் செய்வது.தற்கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதும் முழு இந்தியாவுமே நிலைகுலைந்தது.

28 வருடங்கள் கடந்த போதிலும் ராஜீவ் ஏற்படுத்திச் சென்ற இடைவெளியை இதுவரை எந்தவொரு தலைவராலுமே நிரப்ப முடியாதிருக்கிறது.


Add new comment

Or log in with...