மீண்டெழட்டும் எம் தேசம்! | தினகரன்

மீண்டெழட்டும் எம் தேசம்!

இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எமது நாட்டில் அப்பாவி மக்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தி இன்றுடன் ஒரு மாதம் கடந்து விட்டது. துயரமும் அச்சமும் பதற்றமும் இன்னுமே முற்றாக நீங்கி விடவில்லை.

உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் மனஅதிர்ச்சியிலும் வேதனையிலும் இருந்து சற்றும் மீளவில்லை. குடும்பத்தில் பலரைப் பறிகொடுத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களது துயரத்தை காலம்தான் மாற்ற வேண்டும்!

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளும் இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊறிய பயங்கரவாதக் கும்பலொன்றும் இணைந்தபடி நடத்திய காட்டுமிராண்டித்தனமானதும் மனித குலத்துக்கு எதிரானதுமான கொலைவெறித் தாக்குதலினால் எமது தேசத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டு விட்டது என்பதுதான் உண்மை.

கடந்த 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்திலிருந்து இன்று வரையான ஒருமாத காலப் பகுதி துயரத்திலும் பதற்றத்திலும் அச்சத்திலுமே கழிந்திருக்கிறது. இந்த ஒருமாத காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சாதாரணமானதன்று!

கல்வி,தொழில்துறை, அபிவிருத்தி,விவசாயம் என்றெல்லாம் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு வகையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. சிறு பெட்டிக்கடை வைத்திருக்கும் சாதாரண வியாபாரிகளில் இருந்து பெரும் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகின்ற தொழிலதிபர் வரை அனைவரும் “வருமானம் வீழ்ந்து விட்டது” என்றுதான் சலித்துக் கொள்கிறார்கள்.

அன்றாடம் கூலித்தொழில் செய்து வருகின்ற ஏழைக் குடியானவனையும் இன்றைய சூழல் வெகுவாகப் பாதித்திருக்கிறது. கூலித் தொழிலாளர்கள் பலருக்கு அன்றாடத் தொழிலே இப்போது இல்லாமல் போய் விட்டது.

“காலையில் கடையைத் திறந்தால் வியாபாரமே கிடையாது. கடந்த வாரம் வரை அவ்வப்போது அமுலில் இருந்த ஊரடங்கு உத்தரவினாலும், குண்டுத் தாக்குதல் அச்சத்தினாலும் வெளியூர் மக்கள் கொழும்புக்கு வருவதையே தவிர்த்து விட்டனர்” என்கிறார்கள் கொழும்பு, புறக்கோட்டை வியாபாரிகள்.

இவ்வாறான அசாதாரண நிலைமையினால் வியாபாரிகளில் தங்கியிருக்கும் வண்டியிழுக்கும் தொழிலாளர்களுக்கும் இப்போது அன்றாட வருமானம் சரிந்து விட்டது.

உள்ளூர் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே சரிவடையச் செய்து விட்டது. சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புதான் மிகப் பெரியது. கடந்த 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வந்தது. முன்னைய அச்சம் நிறைந்த சூழல் முற்றாக நீங்கி, சுமுகமான நிலைமையொன்று நிலவியதன் காரணமாக இலங்கையை நோக்கி சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் படையெடுக்கத் தொடங்கியிருந்தனர். இந்த வளர்ச்சிப் போக்கு வேகமாக அதிகரித்துச் செல்லும் வேளையிலேயே பயங்கரவாதிகள் இலங்கையை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தினர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையே சரிந்து விட்டது! இதனால் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு அதிகம். உலக நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தயங்குவதில் நியாயம் உண்டு. காரணம் இப்போது நடந்திருப்பது வெறுமனே உள்ளூர்ப் பயங்கரவாதத்தின் வெறியாட்டம் அல்ல.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்திருந்த காலப் பகுதியில் கூட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒருபோதுமே இலக்கு வைக்கப்பட்டதில்லை. அவ்வேளையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நோக்கமாக இருந்த போதிலும், அவ்வியக்கம் வெளிநாட்டுப் பிரஜைகளை தங்களது தாக்குதல் இலக்காகக் கொண்டது கிடையாது.

ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கத்தின் கோட்பாடுகள் வேறுபட்டவை. அவர்களது நேரடி இலக்கு இஸ்லாம் தவிர்ந்த மாற்று மதத்தினராவர்.இஸ்லாம் மதத்தைச் சாராத அனைவருமே எதிரிகள் என்பதுதான் அவர்களது கோட்பாடு. உலகின் பல்வேறு நாடுகளிலும் சுற்றுலாத்தலங்கள் மீது அப்பயங்கரவாதிகள் கடந்த காலத்தில் நடத்தியிருக்கும் தாக்குதல்கள் மூலம் அவ்வியக்கத்தின் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று அவர்கள் நடத்திய தாக்குதலும் இதனையே தெளிவுபடுத்துகின்றது. மட்டக்களப்பில் மழலைகளையே இலக்கு வைத்த காட்டுமிராண்டிகள் அவர்கள். எனவேதான் உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர்.

ஐ.எஸ் பயங்கரவாதம் எமது நாட்டுக்குள் ஊடுருவியதையடுத்து பொருளாதாரத் துறை சரிந்து விட்டமை பாதகமான விடயம் என்பது உண்மைதான்.

ஆனாலும் எமது நாடு எப்போதுமே இவ்வாறு வீழ்ச்சியில் வீழ்ந்து கிடக்க முடியாது. பயங்கரவாதத்தின் வேர்கள் முற்றாக அகற்றப்பட்டு, சுமுகமான நிலைமை ஏற்படுத்தப்படுவது அவசரத் தேவையாகும். மூன்றுநாள் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகள் இனிமேல் சீராக இயங்க வேண்டியது அவசியம்.

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மீண்டெழுந்த நாடு என்ற பெருமை இலங்கைக்கு உண்டு. இப்போது தோன்றியிருப்பதும் பயங்கரவாத இயக்கமொன்றின் நாசகார வெளிப்பாடுகளாகும். தீவிரமானதும், கண்டிப்பானதுமான நடவடிக்கைகள் மூலமே இன்றைய அச்சுறுத்தலை முற்றாகக் களைய முடியும்.

எமது தேசம் மீண்டெழுவதுதான் இன்று முக்கியம். ஒருபுறம் பயங்கரவாத எச்சங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் செயற்பாடுகளை பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் தொடரட்டும்! மறுபுறத்தில் சுமுக நிலைமையை மீண்டும் கொண்டுவருவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பது அவசியம்.

பல வாரங்களாக நீடித்த அச்சம் தணிந்திருப்பதால் பாடசாலைகளில் இன்றைய தினம் மாணவர்களின் வரவு அதிகரிக்குமென எதிர்பார்க்க முடியும். மாணவர்களின் பெற்றோர் கொண்டுள்ள அச்சத்தில் தவறில்லை. ஆனால் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது. பாடசாலைகளின் பாதுகாப்பில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. பெற்றோரும் இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இவ்வாறான விழிப்புணர்வை ஒருபோதுமே கைவிட்டு விடலாகாது. அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் இறுதி வேர் இம்மண்ணிலிருந்து பிடுங்கியழிக்கப்படும் வரை விழிப்புணர்வில் அலட்சியம் காட்டக் கூடாது.

பயங்கரவாதத்தின் நிழல் கூட எமது தேசத்தில் இனிமேல் விழலாகாது என்ற தீர்க்கமான இலட்சியத்துடன் செயற்பட்டு, இலங்கை மீண்டெழ வேண்டும்!


Add new comment

Or log in with...