பேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு | தினகரன்

பேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு

பேஸ்புக் சமூகதளம் தனது நேரடி ஒளிபரப்பில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளது. நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான நடவடிக்கையாகவே அந்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘பேஸ்புக் லைவ்’ நேரடி ஒளிபரப்பில் கொண்டுவரும் விதிகளை மீறுபவர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேரடி ஒளிபரப்பை பயன்படுத்துவதில் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டுப்பாடு கொண்டுவரப்படவுள்ளது. உதாரணத்திற்கு தனது முதல் விதி மீறலில் இருந்து 30 நாட்கள் என இருக்கலாம் என்று பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

இன்று தொடக்கம் வெறுப்புப் பேச்சு அல்லது பயங்கரவாத செயற்பாடுகள் போன்ற விதிகளை மீறும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும். இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் பயனர்களுக்கு பேஸ்புக் தடை விதிக்கும்.

விதிமீறலின் கடுமைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் பேஸ்புக் கூறியது.

கட்டுப்பாடுகள் கூடிய விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இணையத்தில் பகிரப்படும் வன்செயல் தொடர்பான வீடியோக்களை தடைசெய்வது குறித்து பாரிஸில் உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கும் வேளையில் பேஸ்புக் அதன் நேரடி ஒளிபரப்பு விதிமீறல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளது.

“எமது சேவையின் தடையற்ற அணுகல் மக்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்துவதை நாம் அடையாளம் கண்டுள்ளோம். பேஸ்புக்கில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு கட்டுப்பாடுகள் தேவையாக உள்ளது” என்று பேஸ்புக்கின் ஒருமைப்பாட்டுக்கான துணைத் தலைவர் கய் ரோசன் குறிப்பிட்டுள்ளார்.

“நாளாந்தம் மக்களால் சாதகமான முறையில் நேரடி ஒளிபரப்பை பயன்படுத்த முடியாத நிலையில் நேரடி ஒளிபரப்பை மோசமாக பயன்படுத்தும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது எமது நோக்காகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி பேஸ்புக் நேரடி ஒளிபரப்பை பயன்படுத்தியது அந்த நிறுவனம் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.


Add new comment

Or log in with...