திருகோணமலையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது | தினகரன்

திருகோணமலையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

திருகோணமலையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் கைது-Arrested with Heroin-Trincomalee

திருகோணமலை, சங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவரை இன்று (20) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவருவதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.எம்.ஐ.ஆர். பண்டாரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய  தகவலையடுத்து அவரும் அவரது குழுவினரும் சென்று சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 927 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- சங்கமம் பகுதியைச் சேர்ந்த விக்ரமசிங்க முதியன்சேலாகே சுஜித் குமார் (35 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் ஏற்கனவே திருகோணமலை தலைமையக பொலிசாரினால் ஹெரோயின் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டவர் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.

927 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேக்கரி ஒன்றை நடத்தி வந்ததாகவும் அதனூடாக ஹெரோயின் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...