தேனீக்கள் இல்லையென்றால் மனித வாழ்வும் முடிந்து விடும் | தினகரன்

தேனீக்கள் இல்லையென்றால் மனித வாழ்வும் முடிந்து விடும்

அழியும் உயிரினங்கள் பட்டியலில் தேனீக்கள். உலகின் பல நாடுகளில் விவசாயம் பாதிப்பு. அதற்குக் காரணம் தேனீக்களின் அழிவு

உலக தேனீக்கள் தினம் இன்று

உலக தேனீக்கள் தினமான இன்றாகும். தேனீக்களின் அவசியம் பற்றியும், மனித குலத்திற்கு தேனீக்கள் செய்யும் சேவை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். சுறுசுறுப்பு, தேடல், கூட்டு முயற்சி என தன்னுடைய வாழ்க்கைமுறையின் மூலம் மனிதர்களுக்கு பாடம் சொல்கின்றன தேனீக்கள்.

தேனீக்கள் சிறுபூச்சி இனத்தைச் சேர்ந்தவை. ஆண்டுக்கு 1 இலட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக பூக்களில் இருந்து அவை தேனை எடுக்கின்றன.ஆனால் அதன் மூலம் அதிகம் பயனடைவது மனிதகுலம்தான்.

தேன் மூலம், ஒவ்வொரு நாடும், பல கோடி ரூபா அளவிற்கு வருவாய் ஈட்டுகின்றன. அது மருத்துவப் பொருளாகவும் திகழ்கிறது.

பூக்களிலிருந்து தேனை எடுக்கும் நேரத்தில் அவற்றின் காலில் ஒட்டிக் கொள்ளும் மகரந்தம், வெவ்வேறு பூக்களில் அவை மாறி மாறி அமரும் போது பரவுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இதனால் பூக்கள் பிஞ்சாகி, காயாகி,கனிகின்றன.அதன் மூலம் வித்துக்கள் பரவுகின்றன.தாவரங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. உயிரினங்களுக்கு உணவு கிடைக்கின்றது.தாவரங்களால் உலகில் உயிர் வாழ்க்கை நிலைத்து நிற்கிறது.

அந்த வகையில் தேனீ பசுமையின் பாதுகாவலனாகத் திகழ்கிறது. இப்படி மனித குலத்தின் நண்பனான தேனீக்கள் தற்போது அழிந்து வரும் உயிரினமாக மாறி விட்டன.அதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகள் , செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்!

உணவுச் சங்கிலியில் பெரும்பங்கு வகிக்கும் நிலையில், தேனீக்களை நாம் காப்பாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்.

செயற்கை உரத்தில் உள்ள இரசாயனப் பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத் திறனை மழுங்கடித்து விடும். இதனால் தேன் சேகரிக்கச் சென்ற தேனீ கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்து போய் அலைந்து திரிந்து இறுதியில் இறந்து விடுகிறது.

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு தேனீக்கள் உதாரணம்.அவ்வாறான தேனீக்கள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. அப்படி அழிந்து வரும் தேனிக்களைப் பாதுகாக்கவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் இன்றைய தினம் 'உலக தேனீக்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.

உலகின் மிகச் சிறந்த இயற்கை மருத்துவப் பொருளாகக் கருதப்படுவது தேன். ஒரு தேன் கூட்டில் குறைந்தபட்சமாக 80,000 தேனீக்கள் இருக்கும். அதில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டும்தான் இருக்கும். 250-க்கும் அதிகமான ஆண் தேனீக்கள் இருக்கும். இதில் ஆண் தேனீக்கள் 90 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால், ராணித் தேனீ 2 இலிருந்து 7 வருடம் வரை உயிருடன் இருக்கும். வேலைக்கார தேனீக்கள் அதிகபட்சமாக 42 நாள்கள் உயிருடன் இருக்கும். இராணித் தேனீ ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 முட்டைகள் வரை இடும். வருடத்துக்கு 5 இலட்சம் முதல் 7 இலட்சம் வரை முட்டைகள் இடும். தன் மொத்த வாழ்நாளில் ஏறத்தாழ 1 மில்லியன் முட்டைகள் வரை உருவாக்கும்.

தேனீக்களுக்கு 6 கால்கள் உள்ளன. தன்னுடைய இறக்கைகளை ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை வேகமாக அடிக்கும். அதாவது ஒரு செக்கனுக்கு 190 முறை அடிக்கும். ஒரு மணி நேரத்தில் 25 கி.மீ வேகத்தில் பறந்து செல்லும்.பல்வேறு உயிரினங்களில் தலைவனாக இருப்பது ஆண்கள்தான். ஆனால், இங்கு பெண் அதாவது ராணித் தேனீதான் தலைமை. அனைத்து தேனீக்களும் இதன் கட்டுப்பாட்டுக்குள்தான். பல்வேறு கட்டளைகளை இட்டு மற்ற தேனீக்களை வேலை வாங்குவதே ராணித்தேனீயின் முக்கிய வேலை. வேலைக்காரத் தேனீக்கள் காலம் முழுவதும் ராணித்தேனீக்கு அடிமையாக வேலை செய்யும். அது மட்டுமல்லாமல் ஆண் தேனீக்களும் ராணித் தேனீக்களுக்கு அடிபணியும்.

பார்ப்பதற்குக் கூட ஆண் தேனீயை விட ராணித் தேனீ பெரியதாகவே இருக்கும். ஒரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றரை தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கும். ஒரு கோடிக்கும் அதிகமான இடங்களுக்குப் பயணம் செய்து தேன் சேகரிக்கும். தேனீக்கள் தன்னுடைய கூடு இருக்கின்ற இடத்திலிருந்து 12 கி.மீ தூரம் வரை சென்று தேனைச் சேகரிக்கும். உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளராக தேனீக்கள் இருக்கின்றன. உயிரினங்களின் யானை, ஆமைதான் அதிக ஞாபகசக்தி கொண்டவை. ஆனால் அவற்றைக் காட்டிலும் கூர்மையான ஞாபகசக்தியைக் கொண்டவை தேனீக்கள். தேனீக்கள் மிக அதிகமாகச் சுத்தம் பார்ப்பவை.

உலகம் முழுவதும் தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் தேனீயும் சேர்ந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்து விட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு 42% அதிகரித்திருக்கிறது. தேனீக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது செயற்கை உரம், பூச்சிகொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவை.

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரதம் தேனீக்களிடம் சமிபாட்டுக் கோளாறுகளை உண்டாக்குவதால் தேனீக்கள் இறந்து விடுகின்றன. தேனீக்களை அழிக்காமலே தேன் எடுக்கும் எத்தனையோ நவீன முறைகள் வந்து விட்டன. ஆனாலும், நெருப்பு மூட்டித் தேன் எடுக்கும் பழங்கால முறையையே இன்றைக்கும் பலர் பின்பற்றி வருவது தேனீக்கள் அழிய ஒரு காரணமாக இருக்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன.சில நாடுகளில் வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து வயல்களில் மகரந்தச் சேர்க்கை உண்டாக்கவும் முயல்கிறார்கள். தேனீக்கள் மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன.

நம் வாழ்வின் உணவு உற்பத்திக்குப் பெரும்பங்கு வகிப்பதுடன் நம் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்களைப் பாதுகாப்பதாயின் நாம் தேனீக்களை வளர்க்க வேண்டும் என்பதில்லை. இருக்கும் சிறிதளவு தேனீக்களையும் அழிக்காமல் இருக்க, அவற்றின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவற்றின் பயன்பாடுகளை முடிந்தளவு குறைக்கலாம். இயற்கைக்குத் துரோகம் இழைக்காமல் இருந்தாலே போதும்.உலகில் தேனீக்கள் இல்லையென்றால், நான்கு வருடத்தில் மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் -என்று விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது நினைவிருக்கட்டும்!


Add new comment

Or log in with...