உள்நாட்டு யுத்தத்தின் ஒரு தசாப்த நிறைவு | தினகரன்

உள்நாட்டு யுத்தத்தின் ஒரு தசாப்த நிறைவு

உயிரிழந்த அனைவரையும் நினைவு கூரும் உலகத் தலைவர்கள்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் நிறைவடைந்தமை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தினதி வரை சுமார் 26 ஆண்டுகள் உள்நாட்டுப் போர் நடைபெற்றது.

குறிப்பாக, போர் முடிவடைந்ததாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட மே 18ஆம் திகதி மற்றும் அதற்கு முந்திய நாட்களில் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிக்கும் வகையில் உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரேசா மே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இலங்கையில் மோதல் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்த அனைவரையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இலங்கையுடனான எமது உறவு முக்கியமானது, குறிப்பாக ஈஸ்டர் துயர நிகழ்வுகளுக்குப் பின்னர், அமைதியான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவது முக்கியமான ஒன்றாகியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட பல தமிழ் கனேடியர்களை நான் சந்தித்து உரையாடியுள்ளேன். கணக்கிட முடியாத இழப்பு, மிகப் பெரிய சிரமம் மற்றும் தொடர்ச்சியான பின்னடைவை அவர்கள் சந்தித்துள்ளார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

"போரில் உயிர் பிழைத்தவர்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதியை அளிக்கும் ஒரு அர்த்தமுள்ள செயல்முறையை உருவாக்க இலங்கை அரசாங்கத்தை நான் வலியுறுத்துகிறேன். இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமின்றி பொறுப்புணர்வு, நீதி, சமாதானம் மற்றும் சமரசத்திற்காக செயல்படும் அனைவருக்கும் கனடா தனது முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது.போரின்போது பிரியமானவர்களை இழந்த தமிழ்- கனேடியர்கள் உள்பட அனைவருக்கும் கனேடிய அரசின் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்-கனேடியர்கள் நாட்டிற்கு செய்துள்ள பல பங்களிப்புகளையும் அவர்கள் கடந்து வந்த துன்பங்களையும் அங்கீகரிக்க இன்றைய தினம் அனைத்து கனேடிய மக்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜஸ்டின் ட்ரூடோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள், காணாமல் போனவர்கள் போன்வற்றால் உடல் மற்றும் உணர்வு ரீதியிலான வடுக்களை கொண்டிருக்கும் அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம்.

அந்த வகையில், சமாதானம், நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் முன்னெடுப்புகளை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...