Friday, April 26, 2024
Home » டெங்கு ஒழிப்பு விசேட திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்

டெங்கு ஒழிப்பு விசேட திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்

புதிய 011 7966366 தொலைபேசி இலக்கம் அறிமுகம்

by damith
January 8, 2024 7:00 am 0 comment

டெங்கு கட்டுப்படுத்தலுக்கான விசேட வாரம் அறிவிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் இதற்கான வேலைத் திட்டம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விஷேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, டெங்கு ஒழிப்பு மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பதற்காக அவசர தொலைபேசி இலக்கமொன்றையும் சுகாதார அமைச்சு நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கிணங்க பொதுமக்கள் 011 7966366 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, டெங்கு கட்டுப்பாட்டு வேலைத் திட்டம் தொடர்பில் அறிவிக்க முடியும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில், விசேட கரும பீடம் ஒன்றும் சுகாதார அமைச்சில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை பலமானதாக முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விசேட வழிகாட்டலை வழங்கியுள்ளதுடன் இதற்கான பணிப்புரைகளை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண சம்பந்தப்பட்ட துறையினருக்கு வழங்கியுள்ளார்.

‘உங்கள் சுற்றாடலை நுளம்புகள் உருவாகாத வகையில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத் திட்டம் நேற்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த வகையில் இவ்வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று, மேல் மாகாணத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் பாலித மஹிபாலவின் தலைமையில் நடைபெற்றுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக் கோனின் வழிகாட்டலில், இதற்கான செயற் திட்டம் நேற்று கொழும்பு கொம்பனி வீதி, வெள்ளவத்தை மற்றும் விஜேராம பிரதேசங்களில் சம காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார், முப்படையினர், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அனைத்து சுகாதார மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இத்தேசிய வேலைத் திட்டத்தில் இணைந்து செயல்பட்டனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT