அலட்சியத்துக்கு இனிமேல் இடமளிக்க முடியாது! | தினகரன்

அலட்சியத்துக்கு இனிமேல் இடமளிக்க முடியாது!

இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எமது நாட்டில் காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தி நாளையுடன் ஒரு மாதம் பூர்த்தியாகப் போகின்றது. ஒரே வேளையில் நாட்டின் எட்டு இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புக்களை நடத்தியதும், எமது தேசமே கதிகலங்கிப் போனது. மக்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள். உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் திடீர் அதிர்ச்சியிலும், பிரிவுத் துயரிலும் இருந்து இன்னுமே மீளவில்லை

மரணம் சம்பவித்த ஒவ்வொரு வீட்டிலும் துயரம் படிந்து போய் இருக்கிறது. சிறு குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர் நடந்து முடிந்த சம்பவத்தின் பேரதிர்ச்சியில் இருந்து இன்னுமே மீள முடியாதவர்களாக மனம் பேதலித்துப் போய் இருக்கிறார்கள்.சிறு குழந்தையைக் கூட மத அடிப்படைவாத வெறி பிடித்த, காட்டுமிராண்டிகள் கொன்றொழிப்பார்களென்று அந்தப் பெற்றோர் நினைத்தே இருக்க மாட்டார்கள்.

“கண்களை மூடி உறங்குவதற்கு முயற்சித்தால் எனது பிள்ளை முன்னால் வந்து நின்று ‘அம்மா’ என்று அழைப்பது கேட்கிறது” என்று திக்பிரமையில் இருந்து இன்னுமே மீளாதிருக்கும் தாய் ஒருவர் கூறுகிறார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த இந்த ஆங்கில ஆசிரியை ஏழாம் தரத்தில் கற்கும் தனது பன்னிரண்டு வயது மகனை, சியோன் தேவாலய குண்டுவெடிப்பில் பறிகொடுத்து விட்டு நிலைகுலைந்து போய் நிற்கிறார்.

உடல் சிதறிப் போய்க் கிடந்த இம்மாணவனை உறவினர்கள்தான் அடையாளம் கண்டதாகக் கூறுகிறார்கள். அதுவும் அம்மாணவன் இறுதியாக அணிந்து சென்ற ஈஸ்டர் பண்டிகை புத்தாடையை ஆதாரமாக வைத்தபடி... அந்த உடலை பெற்றோர் பார்க்கவேயில்லை.

இன்னொருவர் மட்டக்களப்பில் முடிதிருத்தும் சலூனில் வேலை செய்பவர்.

“எனது பிள்ளையை நான்தான் கொன்று விட்டேன்! அவனுக்கு புத்தாடை அணிவித்து, காலையுணவும் இனிப்புகளும் ஊட்டி நானேதான் அழைத்துச் சென்று தேவாலயத்தில் விட்டுத் திரும்பி வந்தேன். நான் எனது பிள்ளையை அங்கு அழைத்துச் சென்றிருக்காவிட்டால் அவனுக்கு இக்கதி நேர்ந்திருக்காது” என்று தலையில் அடித்தபடி இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார் அந்தத் தந்தை.

இந்த வேதனையை அப்பெற்றோர் எவ்வாறுதான் தாங்கிக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உறவுகளைப் பறிகொடுத்து நிற்கும் நூற்றுக்கணக்கானோரின் வேதனைக்கு இரு உதாரணங்கள் இவை.

குண்டுத் தாக்குதல்களில் தமது அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர்களெல்லாம் இவ்வாறுதான் மனம் பேதலித்துப் போய் நடைப்பிணமாகத் திரிகிறார்கள்.

இது ஆறுதல்படுத்தக் கூடிய துயரமல்ல. இயற்கை மரணம் போலல்ல இது! இறுதி நிமிடம் வரை கண்முன்னால் நடமாடித் திரிந்த உறவுகள், கணநேரத்தில் உடல் சிதறி பலியாகிப் போயிருக்கிறார்கள். உறவுகளைப் பறிகொடுத்தவர்களுக்கு இந்த இழப்பானது வேதனையை மட்டுமன்றி, ஆழமான உளப்பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. துயரச் சம்பவம் நடந்து நாளையுடன் ஒரு மாதமாகின்றது. அச்ச நிலைமை ஓரளவு தணிந்து விட்டது. குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதும் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிஸார், பாதுகாப்புப் படையினர் மற்றும் தொண்டர்களின் மனிதாபிமானப் பணிகளை இத்தேசம் ஒருபோதுமே மறந்து விட முடியாது.

அதுமாத்திரமன்றி, பயங்கரவாதிகளின் வலைப் பின்னலை துரிதமாகக் கண்டறிந்து மிக விரைவாகவே அவர்களில் பலரை கைது செய்துள்ளனர் புலனாய்வுப் பிரிவினர். ஆயுதங்களை மீட்பதிலும், பயங்கரவாதிகளுடன் நெருக்கத்தைப் பேணியோரைக் கைது செய்வதிலும் முப்படையினர் பெருமளவில் களத்தில் இறங்கிப் பணியாற்றியுள்ளனர்.

பொலிஸாரினதும் முப்படையினரதும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளாலேயே இந்த ஒரு மாத காலத்துக்குள் நாட்டில் ஓரளவாவது அச்சம் தணிந்திருக்கிறது.

ஆனாலும் இரு விடயங்களில் எமது நாடு அலட்சியமாக இருந்து விட முடியாது. முதலாவது விடயம் தேசத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள். மற்றையது குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோரை ஆற்றுப்படுத்துவதற்கான செயற்பாடுகள்.

மூன்று தேவாலயங்களிலும் பலியானவர்களின் குடும்பங்களுக்காக 119.3 மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட்டிருக்கிறது. எத்தனை தொகைப் பணத்தை வழங்கினாலும் உறவினர்களின் மனத்துயர் தீரப் போவதில்லை. ஆனாலும் நஷ்டஈடு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

பலியானவர்களில் சிறு எண்ணிக்கையானோரைத் தவிர ஏனைய அனைவருமே கிறிஸ்தவ சமயத்தவர்கள். இவர்களின் வீடுகளுக்கு கிறிஸ்தவ மதப் பிரமுகர்கள் அவ்வப்போது சென்று, மன ஆறுதல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இத்தனை கொடுமை நடந்த போதிலும் எமது அரசியல் தலைவர்களின் முக்கியமாவர்கள் இன்னுமே வீடு தேடி வரவில்லையென்ற ஆதங்கம் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட பலரிடம் நிலவுகின்றது.

“250 இற்கு மேற்பட்டோரை பலிகொண்டு விட்ட சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான உறவினர்களின் மனத்துயரத்தையும்,பயங்கரவாத அச்சுறுத்தலையும் பொருட்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் வேறு சம்பவங்களிலேயே எமது அரசியல்வாதிகள் கரிசனை செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்” என்று அதிருப்தியுடன் கூறுகின்றனர் பலர்.

“இத்தனை உயிர்களின் இழப்புகளைப் பார்க்கிலும் வேறு விடயங்கள்தானா இவர்களுக்கு முன்னிலையாகத் தெரிகின்றன” என்று அவர்கள் கேட்பதில் நியாயம் இல்லாமலில்லை.

நாட்டில் தோன்றிய பயங்கரவாதம் முற்றாக நசுக்கப்பட வேண்டும். இது போன்ற குரூரத்தனமான தாக்குதல் இனியொரு தடவை நிகழாதவாறு நாட்டின் பாதுகாப்பு முழுமையாகப் பலப்படுத்தப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்துடன் இனிமேலும் எவராவது தொடர்புகளை ஏற்படுத்துகிறார்களா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்படுவது அவசியம். அசமந்தப் போக்குதான் இத்தனை அழிவுகளுக்கும் காரணமென பலரும் கூறுவதை மறந்து விடலாகாது. பயங்கரவாதத்தின் வேர்கள் ஆங்காங்கே இன்னும் ஒன்றிரண்டு எங்காவது உள்ளதா என்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளோரை ஆறுதல்படுத்தி அவர்களுக்கு மனஉறுதியை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவது முக்கியம்.அலட்சியத்துக்கு இனிமேல் இடமளித்தலாகாது!


Add new comment

Or log in with...