உயிரன்பின் சினிமா Balthazar | தினகரன்

உயிரன்பின் சினிமா Balthazar

இயக்குனர் ப்ரெஸ்ஸோனின் படைப்பான பால்தசார் ஒரு கழுதையின் வாழ்வினைக் கூறும் புதிய அலை சினிமாவாகும். இத்திரைப்படத்தில் இரண்டு முக்கியமான விடயங்களை புகுத்தியிருக்கிறார் இயக்குனர். முதலாவது கழுதையின் வாழ்வு ரீதியான போராட்டங்களையும், கழுதையின் வாழ்வோடு மனித அவலங்களையும் பல கோணங்களில் சுட்டுகின்ற பால்தசார்| சமூகத்தில் இருக்கின்ற மேலாதிக்க ஆக்கிரமிப்பினைப் பற்றி பேசுகின்ற ஒரு சிறந்த படைப்பு எனலாம். படத்தில் பிரதான கதாப்பாத்திரத்தினை வகிக்கின்ற கழுதையின் பெயரே பால்தசார்.

இயல்பான கிராமிய மிருகங்களுடன் தன்னுடைய வாழ்வினைப் போக்கும் பால்தசார் கழுதையானது மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்ற சர்க்கஸ் மிருகங்களை ஒரு கட்டத்தில் காண நேர்கின்றபோது பல நுட்பமான விடயங்களை முன்வைத்து கதையினை நகர்த்துகிறார் இயக்குனர் ப்ரெஸ்ஸோன்.

தன்னுடைய கிராமிய இனம் சார்ந்த மிருகங்களுடனான வாழ்வு, மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்ட மிருகங்களுடனான வாழ்வு, மனித அதிகார செயற்பாட்டாளர்கள் உடனான வாழ்வு என மூன்று வகைப் பரிமாணங்களை நிகழ்த்தியிருக்கும் பால்தசார் சினிமாவின் மொழிக் கட்டமைப்பினை விளக்கிய திரைக்களம்.

இத்திரைப்படத்தினை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகி பலர் பல கருத்துக்களை முன்வைத்து பெரும் கதைக்களத்தினை உருவாக்கினர். சினிமா விமர்சகரான க்லேர் க்லூ கூறுகின்ற போது, பல எஜமானர்களின் கைகளில் மாறித் திரிகின்ற இக்கழுதையின் நிலைப்பாடானது இன்று சமூகத்தில் பல அதிகாரமிக்க எஜமானர்களின் சதி வலைகளில் சிக்கித் தவிக்கின்ற அவலப் பெண்ணின் நிலையினை தனக்கு ஞாபகப்படுத்துவதாக கூறுகிறார்.

1966ல் வெளியான பால்தசார் அக்கால பிரான்ஸினதும் மேலைத்தேய மக்களினதும் வாழ்வியல் பண்பாட்டு முறையினை சில நடைமுறைக் காட்சிகளினூடே எமக்கு காண்பிக்கிறது எனலாம்.

பால்தசார் திரைப்படத்தின் பல காட்சிகள் ஏராளமான துன்பியல் நிகழ்வுகளையும் சினிமாவின் பொருள் சார்ந்த கருத்தினையும் வெளிப்படையாக சொல்லிவிடுகிறது. பிச்சைக்காரனாய் இருந்து செல்வந்தனாகும் ஒருவனின் மரணம், சுதந்திரமாக உலாவிய கழுதையின் மரணம் போன்றவை மனித மனதினில் மறக்க முடியாத ரணத்தினை தந்துவிடுகிறது.

ஒரு சினிமாவின் பார்வைக்குப் பின் அது தருகின்ற சிந்தனைத் தாக்கமே அச்சினிமாவின் வெற்றி எனலாம்.

எவ்வித சலனமும் இல்லாமல் மனதின் ரணத்தினை சீண்டிய பால்தசார் மனிதரைக் குடைந்த மிருகம் என்று கூறவதே மிகப் பொறுத்தமாகும்...   


Add new comment

Or log in with...