Wednesday, April 24, 2024
Home » கறைபடியாத அரசியல்வாதியாக விளங்கியவர் பொத்துவில் முன்னாள் முதல்வர் உதுமாலெவ்வை

கறைபடியாத அரசியல்வாதியாக விளங்கியவர் பொத்துவில் முன்னாள் முதல்வர் உதுமாலெவ்வை

by damith
January 8, 2024 10:36 am 0 comment

அம்பாறை மாவட்டம் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த எம்.ஐ. உதுமாலெவ்வை காலமாகி இன்றோடு (08.01.2024) ஒன்பது வருடங்கள் நிறைவு பெறுகின்றன.

அக்கரைப்பற்று மண்ணில் 13.03.1935 ஆம் ஆண்டு பிறந்த மர்ஹூம் உதுமாலெவ்வை ஆரம்பக் கல்வியை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் பின்னர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் பயின்றார். பணிசெய்யும் ஆசிரியத் தொழிலை தேர்ந்தெடுத்த இவர், இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் இப்பணியை மேற்கொண்டார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபராக 1979 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய காலம் இக்கல்லூரியின் ஒரு பொற்காலமாகும். அரசியல்வாதிகளுடன் நட்புறவு பேணி தனது பாடசாலைத் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றி வந்தார். அத்தோடு மாத்திரம் நின்றுவிடாது ஊர் தேவைகளையும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்துவந்தார்.

அக்காலகட்டத்திலேயே அவருக்கு நியமனப்பட்டியல் மூலம் 31.03.1983 இல் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

1989 ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த இவர், கிழக்கிலேயே முதலாவது தேசிய பாடசாலையாக தான் கடமையாற்றிய பாடசாலைய தரம் உயர்த்த அயராது உழைத்தார். அக்கரைப்பற்று கல்விப்பணிமனையை ஸ்தாபித்தமை, ஆண்கள் பாடசாலையை வளவு வாங்கி விஸ்தரித்தமை, ஆறு பாடசாலைகளை புதிதாக உருவாக்கியமை, நான்கு பாடசாலைகளை தரமுயர்த்தியமை, மின்சாரதிட்டங்களை விஸ்த்தரித்தமை, நீதிமன்றக்கடிடமொன்றை ஸ்தாபித்தமை, வாசிகசாலை ஒன்ற உருவாக்கியமை, பிரதேச செயலகம் போன்ற அரச நிறுவனங்களுக்கு நிரந்தரமான கட்டடங்களை நிர்மாணித்துக் கொடுத்தமை போன்ற பணிகளையும் மேற்கொண்டதோடு விவசாய, நீர்ப்பாசன அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டார்.

மக்களின் பல்வேறு குறைகளை தெரிந்து கொள்வதிலும், அவற்றுக்குத் தீர்வு காண்திலும் அவர் பாடுபட்டார்.

தனது தேவைகளை நிவர்த்தி செய்ய வரும் ஒவ்வொருவரினது ஆதங்கங்களையும் மிகவும் பொறுமையோடு செவிமடுப்பார். தொலைபேசியில் முடிக்கக்கூடியவற்றை அவ்வப்போதே செய்துகொடுப்பார். பெரிய விடயங்களாயின் காரியலயங்களுக்கு அழைத்துச் செல்வார். அமைச்சு மட்டங்களிலான விடயங்களாயின் கடிதங்கள் மூலம் தொடர்புகளை மேற்கொள்வார். பின்னர் அமைச்சுகளுக்கும் செல்வார்.

அக்கரைப்பற்றில் முதன் முதலாவதாக பாலர் பாடசாலை ஒன்றை அக்கரைப்பற்று மூன்றாம் குறிச்சியில் ஆரம்பித்தார். இப்பிரதேசத்தில் முதன்முதலாக ஜனாஸா நலன்புரிச்சங்கமொன்றை ஸ்தாபித்து இயங்கவைத்த பெருமையும் அவரையே சாரும்.

மர்ஹூம் உதுமாலெவ்வை அடக்கமான அமைதியான கறைபடியாத அரசியல்வாதி ஆவார்.

கலாபூசணம் எம்.எ.பகுர்தீன் (அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT