பத்தாண்டு காலம் அனுபவித்த நிம்மதி மீண்டும் எப்போது? | தினகரன்

பத்தாண்டு காலம் அனுபவித்த நிம்மதி மீண்டும் எப்போது?

எங்கும் படையினர் நடமாட்டம்; தேடுதல், சோதனைகள் தீவிரம்; இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திலும் திடீர் விரிசல்

வீதியெங்கும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லா இடங்களிலும் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் தேசிய பாதுகாப்பு குறித்த நெருக்கடியின் அடையாளங்களே.

தேசியப் பாதுகாப்பு நெருக்கடிக்குள்ளாகும் போது முதலில் பாதிப்படைவது இயல்பு வாழ்க்கை. தொடர்ந்து பொருளாதரம். அதைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடி. இப்போது ஒன்றன்பின் ஒன்றாக இரண்டுமே நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

2009 மே மாதத்திற்குப் பிறகு இலங்கையில் ஒரு அமைதிச் சூழல்...போரற்ற நிலை - உருவாகியது. அது 2019 ஏப்ரல் 21 வரை நீடித்தது.

அரசியல் திருப்தியின்மைகளும் பொருளாதார நிறைவின்மைகளும் இருந்தாலும் நாடு மெல்லிய முன்னேற்றத்தைக் கண்டு வந்தது. நீண்ட போரினால் பாதிக்கப்பட்டிருந்த நாடு மெல்ல மெல்ல மீண்டெழுந்து கொண்டிருந்தது.

இந்த அமைதிச் சூழலும் மீளெழுச்சியும் நீடிக்கவில்லை. ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் எல்லாமே தலைகீழாகி விட்டன. அதற்குப் பிறகு நிலைமை குழப்பத்திற்குள்ளாகியே இருக்கிறது. சமூகங்களுக்கிடையிலான பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதன் எல்லைக்கோடு எங்கே என்று தெரியவில்லை.

இதை எப்படி சுமுக நிலைக்குக் கொண்டு வரலாம் என்பதே இன்று நாட்டின் முதலாவது கேள்வியும், முதல் நடவடிக்கைக்கான பணியுமாகும்.

முப்பதாண்டு காலமாக இனமுரணிலும் அதன் விளைவான போரிலும் சிக்கியிருந்த நாட்டில் இப்படியொரு நெருக்கடி வந்திருக்கவே கூடாது. கிடைத்திருந்த பத்தாண்டு கால இடைவெளி என்பது, அமைதி என்பது மாற்றங்களுக்குரியதே. ஆனால், அந்த மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது கவலைக்குரியது.

இடையில் கிடைத்த பத்தாண்டு காலமும் ஒரு நொடியில் இல்லாமலாகி விட்டது.

அமைதிக்காலப் பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் நாட்டின் அமைதியிலும் வளர்ச்சியிலும் பல பாதிப்புகளை உண்டாக்கியுள்ளன.அமைதிக் காலப் பணிகள் மிகவும் பெறுமதியானவை. எதிர்காலத்துக்கான அத்திவாரம் அது.ஆனால் இலங்கையர்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை.

யுத்தம் முடிந்த பிறகும் கூட இந்தத் தவறு சீர் செய்யப்படவில்லை.யுத்தம் முடிந்த பிறகு உருவாகிய அமைதிச் சூழல் காலத்தில் எதிர்காலத்துக்குரிய அத்திவாரத்தைப் போடுவதற்குப் பதிலாக அவரவர் தமக்கிசைவான வழிகளில் அரசியலை முன்னெடுத்தனர்.

அதன் விளைவுகள் நாட்டில் அரசியல் நெருக்கடியாக உருவாகியது. இந்த அரசியல் நெருக்கடி 2018 ஒக்ரோபரில் உருவாகியது. இந்த நெருக்கடி நாட்டைக் கலக்கியது. பின்னர் இது ஒருவாறு சீராக மீள்வதற்கிடையில் (ஆறு மாதத்திற்குள்) மறுபடி இன்னொரு நெருக்கடி ஈஸ்டர் தாக்குதல்களாக உருவெடுத்துள்ளது. இப்பொழுது அதன் தொடர்ச்சியான ஏனைய நடவடிக்கைகள். இது மக்களின் மனதில் பெருங்கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

எவரைப் பார்த்தாலும் கலக்கம் நிறைந்த முகத்தோடுதான் நிற்கிறார்கள். நாட்டு நிலைமை குறித்துச் சலித்துக் கொள்கிறார்கள். எதையும் உறுதியாகவும் நம்பிக்கையோடும் செய்ய முடியாது என்று கவலைப்படுகிறார்கள். 'இலங்கைக்கு என்ன சாபம் இது' என்று வாய்விட்டே புலம்புகிறார்கள்.

ஒரு கூட்டுத் துக்கம் இது. அனைவருக்கும் பொதுவான கூட்டுத் துக்கம்.

கடந்த பத்தாண்டு காலமாக அனுபவித்த அமைதியின் சுவையை இழப்பதற்குப் பலரும் விரும்பவில்லை. அதில் குறைபாடுகளும் நிறைவின்மைகளும் அரசியல் அதிருப்திகளும் இருந்தாலும் அந்த அமைதி எல்லோருக்கும் தேவையானதாக இருந்தது.

குறிப்பாக நாட்டின் எந்தப் பகுதிக்கும் எவரும் எந்த வேளையிலும் செல்ல முடியும் என்பதே மிகப் பெரிய கொடையாக இருந்தது. ஏனென்றால் யுத்தம் ஒரு அடி தூரம் கூட நகர முடியாத அளவுக்கு எல்லோருடைய கால்களிலும் விலங்குகளை மாட்டியிருந்தது. அந்த விலங்கை உடைத்து விட்டு விரும்பிய மாதிரி, விரும்பிய இடங்களுக்கு, விரும்பிய நேரத்தில் செல்ல முடியும் என்பது கொடையன்றி வேறென்ன?

இதைப் போல இந்த அமைதிச் சூழலில் எவ்வளவோ விடயங்கள் செய்யக் கூடியதாக இருந்தன. யுத்தத்தின் போது நினைத்தே பார்க்க முடியாதவையெல்லாம் அமைதிச் சூழலில் இயல்பாக நிகழ்ந்தேறின. முக்கியமாக வணிகம் மற்றும் தொழிற்துறைகளில் எவரும் எங்கும் சென்று அவற்றை மேற்கொள்ளலாம் என்பது.

இப்படியெல்லாம் இருந்த நிலையில் இப்பொழுது இந்த அமைதியின் மீது வெடித்த குண்டினை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இதுதான் எல்லோருடைய கவலையுமாகும்.

சமூகங்களுக்கிடையே அடிநெருப்பாக நீறு பூத்துக் கிடந்த பகையும், முரண்களும் இன்று ஏதோ வடிவில் வெடித்திருக்கின்றன. குண்டு வெடிப்புக்குப் பிறகான நிலைமையும் இதையே காட்டுகிறது. அரசாங்கம் இடையிடையே சமூக வலைத்தளங்களை முடக்கினாலும் அவற்றில் பகிரப்படும் கருத்துகளில் 60 வீதமானவை பகைமை உணர்வின் வெளிப்பாடுகளாகவே உள்ளன.

உண்மையில் இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் சமூக ஒருமைப்பாட்டுக்குமாக சமூக வலைத்தளங்களின் பதிவுகள் இருந்திருக்குமாக இருந்தால் அவற்றை முடக்க வேண்டிய அவசியமே எழுந்திருக்காது. இன்னும் அதை ஊக்கப்படுத்துவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

இதேவேளை எதையும் கட்டுப்படுத்துவதாலும் முடக்குவதாலும் மட்டும் தீர்வோ அமைதியோ கிட்டி விடும் என்றுமில்லை. அது இன்னொரு வடிவில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

ஆகவே நாம் நிரந்தர அமைதிக்கான வழிகளைக் காண வேண்டுமென்றால் அமைதிக் காலப் பணிகளை பன்மைச் சமூகங்கள் வாழ்கின்ற நாடு என்ற அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு அவரவர் தாம் சார்ந்த பிரதேசம், தாம் சார்ந்த மதம், தாம் சார்ந்த இனம், தாம் சார்ந்த மொழி என்ற வரையறைக்குள் நின்று சிந்திக்க முடியாது. அப்படிச் சிந்தித்தால் இன்னும் விலகல்களுக்கே இடமளிப்பதாக அமையும்.

பன்மைத்தன்மையோடு சிந்திப்பதென்பது தனித்துவங்களை இழப்பது என்று அர்த்தமல்ல. மற்றவர்களையும் நம்மைப் போல உணர்தல். நாம் அவர்களாக இருக்க முற்படுதல்.இன்றைய உலகம் அவ்வாறுதான் உள்ளது. அதையே நிர்ப்பந்திக்கிறது.

இன்று ஒவ்வொரு நாட்டிலும் பல நாட்டினர், பல சமூகத்தினர் வாழ்கின்றனர். அந்த நாட்டுக்குரியவர்களைத் தவிர்த்து பிற நாடுகளைச் சேர்ந்த பலரும் வாழ்கின்றனர். உலகத்தின் பல திசைகளிலும் ஈழத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற இலங்கைச் சமூகங்கள் பலவும் பல நாடுகளில் வாழ்கின்றன. இதைப் போல பிற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அந்த நாடுகள் தமது குடிமக்களாக ஏற்றுள்ளன. அவர்களுக்கும் அந்த நாட்டின் குடிமக்களுக்கும் இடையில் எந்த உரிமை வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் அவை காட்டவில்லை. ஜனநாயகத்தின் முன்னே அனைவரும் சமம் என்றே அவை கருதுகின்றன. ஜனநாயகமே அழகு என்று கருதியதன் வெளிப்பாடே இது. எல்லோரையும் மதிப்பதும் எல்லோருடைய உரிமைகளையும் அங்கீகரிப்பதுமே சிறப்பு என்பதே அவற்றின் மதிப்பாகும். இதையே அவை தமது அடையாளமாகவும் பண்பாடாகவும் கொள்கின்றன. இதனால்தான் சொந்த நாட்டிலே இருக்க முடியாது என்று கிளம்புவோரெல்லாம் மேற்கு நாடுகளில் தஞ்சம் கோருகிறார்கள்.

அதாவது சொந்த நாட்டிலே கிடைக்காத பாதுகாப்பும் மதிப்பும் உரிமைகளும் இன்னொரு நாட்டில், இரவல் தாய் நாட்டில் கிடைப்பதையிட்ட நம்பிக்கைதான் அகதிகளாகப் புலம்பெயர வைக்கிறது. நாட்டிலிருந்து புலம்பெயர முற்படும் ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் இந்த நாடு தோற்றுப் போனது, நாங்கள் வாழத்தகுதியற்றது என்ற மனப்பதிவைத்தானே உண்டாக்குகிறது.

ஆகவே அமைதிக்குத் திரும்புதல், அமைதியைப் பராமரித்தல், அந்த அமைதியில் எதிர்காலத்துக்கான திட்டமிடல்களைச் செய்தல் என்பதெல்லாம் உடனடியாகவே செய்ய வேண்டியவை.

கருணாகரன்...

 


Add new comment

Or log in with...