Tuesday, April 16, 2024
Home » யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை அகற்ற கோரி முறைப்பாடு

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை அகற்ற கோரி முறைப்பாடு

by mahesh
October 18, 2023 7:50 am 0 comment

யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு பொதுமகன்கள் ஆகியோர் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, தூபியை அமைக்க பெறப்பட்ட, செலவழிக்கப்பட்ட நிதி விபரங்கள், தூபிக்கான அனுமதிகள் தொடர்பிலான ஆவணங்களுடன் நாளைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி இரவு இடித்து அழிக்கப்பட்டது.

அதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து மீண்டும் 10ஆம் திகதி துணைவேந்தர் சிறிசற்குணராஜாவினால் அடிக்கல் நாட்டப்பட்டு புதிய தூபி நிர்மாணிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து வருடந்தோறும், ‘மே 18’ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் இப்பகுதியிலேயே இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தூபிக்கு உரிய அனுமதிகள் பெறப்படவில்லை என்றும், அவ்வாறு அனுமதி பெறப்படாத தூபியை உடைத்து அகற்றுமாறும் கோரியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

(யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT