பாதுகாப்பைப் பலப்படுத்துவதில்சீனா வழங்கும் ஒத்துழைப்புகள் | தினகரன்

பாதுகாப்பைப் பலப்படுத்துவதில்சீனா வழங்கும் ஒத்துழைப்புகள்

ஆசிய நாகரிகங்கள் தொடர்பான பீஜிங் மாநாடு சீனாவில் நேற்று (15ம் திகதி) ஆரம்பமானது. 47 நாடுகளைச் சேர்ந்த 2000 பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ள இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாட்டுக்காக கடந்த 13ஆம் திகதி சீனாவுக்கு பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 14ஆம் திகதி சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார். சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலம் நீடித்து வரும் தோழமையுடனான இராஜதந்திர உறவில் ஓர் முக்கிய திருப்புமுனையாகவும் வரலாற்று மைல்கல்லாகவும் விளங்குகின்றது.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று உலகளாவிய பயங்கரவாதம் இலங்கையின் 8 இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டு 257 பேரைப் பலியெடுத்ததோடு சுமார் 500 பேரை காயங்களுக்கு உட்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நாட்டில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்த நிலையில் சீன ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தமது கடும் அதிருப்தியை வெளியிட்ட சீன ஜனாதிபதி, இத்தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.

அதேநேரம், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகளுக்காக 260 கோடி ரூபாவை அன்பளிப்பாகவும், 150 கோடி ரூபா பெறுமதியான 100 ஜீப் வண்டிகளை இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்கென வழங்கவும் சீன ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையிலும் இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தமும் இச்சமயம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சீன ஜனாதிபதி, 'பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து வேரறுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து வழிகளிலும் உதவி நல்கத் தயார்' என உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, இரு நாட்டுப் பாதுகாப்புத் துறைகளுக்கும் இடையில் புரிந்துணர்வு வேலைத் திட்டங்களை வலுவூட்டுதல் மற்றும் புலனாய்வு பிரிவுகளுக்கிடையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேலைத் திட்டங்களை விரிவுபடுத்துதல் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இச்சமயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'பயங்கரவாதத்தை ஒழிப்பதைப் போன்று இணையதளம் மற்றும் சமூய வலைத்தளங்கள் ஊடாக போலிப்பிரசாரங்களைப் பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அக்குற்றங்க​ைளத் தடுப்பதற்கும் தேவையான அறிவும், தொழில்நுட்ப உபகரண வசதிகளும் இலங்கையிடம் இல்லாதிருப்பதாக எடுத்துக் கூறினார்.

அதற்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை விரைவாகப் பெற்றுக் கொடுத்து ஒத்துழைப்பு நல்கவும் அதன் நிமித்தம் விசேட நிபுணத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கவும் சீன தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை மேற்கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சீன ஜனாதிபதியின் இந்த அறிவிப்பும், இணக்கப்பாடுகளும் வரவேற்கத்தக்கதும் பாராட்டப்பட வேண்டியவையுமாகும்.

உண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு மேற்கொண்ட இந்த விஜயத்தின் மூலமாக நாடு பெற்றுக் கொண்டிருக்கும் இப்பிரதிபலன்கள் விலைமதிக்க முடியாதவை. நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி வலுப்படுத்துவதற்கு அடித்தளமாக அமையும்.

தற்போது பயங்கரவாத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கு சீன உதவிகள் பக்கபலமாக இருக்கும்.

பயங்கரவாதமானது, எந்த வடிவில் தோற்றம் பெற்றாலும் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதுதான் அமைதி, சமாதானம், மனித நேயத்தை விரும்பும் அனைத்து மக்களதும் விருப்பமும் எதிர்பார்ப்புமாக உள்ளது-. பயங்கரவாதத்துக்கு இனமோ, மதமோ, மனித நேயமோ, மனிதாபிமானமோ கிடையாது. குரூரமும் கோரமும்தான் அதன் உண்மை முகம்.

அதனால் எந்த வடிவில் பயங்கரவாதம் தோற்றம் பெற்றாலும் அதனை முளையிலேயே கிள்ளியெறியத் தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் தோழமை நாடுகளது ஒத்துழைப்புகளோடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக நாட்டின் சட்ட ரீதியான பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் தவிர்ந்த வேறு எவரும் சட்டத்தை கையிலெடுக்க சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது. அதற்கு நாட்டின் பாதுகாப்புத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகள் பெரும் பக்கபலமாக அமையும்.

ஆகவே பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு அச்சம் பீதி இல்லாத சுதந்திர ஜனநாயக சூழலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் பொலிஸாரும், முப்படையினரும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதுவே வளமானதும் பலமானதுமான நாட்டைக் கட்டியெழுப்ப அடித்தளமாக அமையும்.

 


Add new comment

Or log in with...