வட்ஸ்சப் செயலி மீது ஊடுருவிகள் தாக்குதல் | தினகரன்

வட்ஸ்சப் செயலி மீது ஊடுருவிகள் தாக்குதல்

புதிய பதிப்பை நிறுவ கோரிக்கை

குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக வட்ஸ்சப் தெரிவித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் ஊடுருவல் சம்பவங்கள் நடந்தன. பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு, ஊடுருவல்காரர்கள் கண்காணிப்பு மென்பொருளைப் பொருத்தியதை வட்ஸ்சப் சமூகதளம் உறுதிப்படுத்தியது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனீட்டாளர்களே குறிவைக்கப்பட்டனர் என்றும், அந்த ஊடுருவல் நடவடிக்கை மிகவும் திறமையாகக் கையாளப்பட்டது என்றும் அந்த செயலி கூறியது.

இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமத்தால் இந்த தாக்குதல் மேம்படுத்தப்பட்டிருந்தாக பினான்ஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஊடுருவல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, வடஸ்சப் செயலியின் ஒரு குறைபாடு சரிசெய்யப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வட்ஸ்சப் செயலியின் புதிய பதிப்பை உடனடியாக நிறுவுமாறு தனது 1.5 பில்லியன் பயன்பாட்டாளர்களையும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

வட்ஸ்சப்பின் வொயிஸ் கோல் செயற்பாட்டை ஊடுருவிகள் பயன்படுத்தியுள்ளனர். இதில் அழைப்பு வந்து எடுக்கப்படாமல் இருந்தாலும் கண்காணிப்பு மென்பொருள் நிறுவப்படும் வகையில் அது உருவாக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றான என்.எஸ்.ஓ இணைய ஆயுத வர்த்தகராக கடந்த காலங்களில் அறியப்பட்டுள்ளது. என்.எஸ்.ஓ பெயர் கொண்ட மென்பொருளால் இலக்குவைத்த சாதனங்களால் ஒலிவாங்கி, கெமராக்கள் மூலம் தரவுகளை சேகரிக்கும் திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

குற்றச்செயல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் ஒரே நோக்கம் கொண்டதாக அரச முகவர்களின் தொழில்நுட்ப அனுமதி பெற்ற நிறுவனமாக என்.எஸ்.ஓ தம்மை குறிப்பிட்டுள்ளது.

மிக ஆரம்பக் கட்டம் என்பதால் இதனால் எத்தனை பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறமுடியாதிருப்பதாக வட்ஸ்சப் குறிப்பிட்டுள்ளது.

எனினும் என்.எஸ்.ஓ குழுமம் மூலம் உருவாக்கப்பட்ட சாதனங்கள் மூலம் தாம் இலக்கு வைக்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...