விவசாயத்துறை நவீன மயமாகும் நாள் எப்போது? | தினகரன்

விவசாயத்துறை நவீன மயமாகும் நாள் எப்போது?

விளைச்சலைப் பெருக்குவதாயின் வினைத்திறனுள்ள முறைகளே தேவை

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்திற்குப் பெயர் பெற்றது. இங்கு நீர்வளம், நிலவளம் நிறைந்திருக்கின்றன. அத்தோடு இயற்கைச் சூழலும் சாதகமாகவே இருக்கிறது. இங்கு காணப்படுகின்ற விவசாயத் துறையோடு சம்பந்தப்பட்டவர்களில் சிலர் இன்னமும் பாரம்பரிய விவசாயச் செய்கையிலிருந்து முற்றுமுழுதாக மாறவில்லை.ஆனால் ஏராளமானோர் நவீன இயந்திரமயமாக்கலை நோக்கி நகர்கிறார்கள். இது காலத்திற்கு ஏற்றமாற்றம்,வருமானத்தை நோக்கிய நகர்வு. ஆனாலும் இம்மாற்றத்தின் வேகம் போதாதிருக்கிறது என கிழக்கு மாகாண விவசாய விரிவாக்கல் துறை பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா கூறுகிறார்.

விவசாயத்தில் பாரிய விளைச்சலைப் பெறுவதற்கும் உடல் பிரயத்தனத்தைக் குறைப்பதற்கும் விவசாயத்துறையோடு சம்பந்தப்பட்ட இயந்திர சாதனங்களை பாவிப்பது அவசியம் என்று விவசாயிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

உயர்விளைச்சலைப் பெறும் போதுதான் விவசாயி அதிக இலாபத்தை எதிர்பார்க்கலாம். அது அவனை விவசாயச் செய்கையில் மனமார நிலைகொள்ளச் செய்யும். இதனை யாரும் மறுக்க முடியாது.

உயர் விளைச்சலைப் பெறுவதற்காக விஞ்ஞான ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இயந்திர சாதனங்களை விவசாயச் செய்கையில் உள்வாங்கிக் கொள்வதற்கான வழிவகைகளை விவசாய விரிவாக்கல் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டம் பூராவும் செய்கை முறையோடு கூடிய பயிற்சியை நடத்தி வருகிறது. அதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்போதைய விவசாயிகளின் உடல் உறுதியை அன்றைய காலத்தில் இருந்தவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இன்றைய விவசாயிகள் உடல் உறுதி குறைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். போசாக்கற்ற,சுவையூட்டப்பட்ட,இரசாயனம் கலந்த உணவுகளை உட்கொள்ளுதல் இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விவசாயி தனது விவசாயத்தை நேர்த்தியாகச் செய்வதற்கு உடல் உழைப்பு முதலில் அவசியம். பாரிய அளவில் விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளால் உடல் உழைப்பை வழங்குவது முடியாத காரியம். ஆகவேதான் மனிதர்கள் பலர் ஒன்று கூடி நாட்கணக்கில் செய்யும் வேலைகளை இயந்திரங்களைக் கொண்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் செய்து முடிக்கும் வழியைத் தேட வேண்டியுள்ளது.

அதற்காக விவசாயத் திணைக்களம் வகைவகையான இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் வேலைகளை இலகுவாக,கச்சிதமாக உரிய காலத்தினுள் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

வேளாண்மைச் செய்கையை எடுத்துக் கொண்டால் நிலத்தை உழுவதற்கு,வரம்பு கட்டுவதற்கு, நாற்று நடுகைக்கு, நாற்றை பதியமிடுவதற்கு,களை பிடுங்குவதற்கு, வரம்பில் வளரும் களையை அகற்றுவதற்கு, களையை வயலில் கட்டுப்படுத்தவதற்கு,நெல்அறுவடைக்கு,பதரை பிரிப்பதற்கு என்று பற்பல வகையான இயந்திரங்கள் இப்பொது பாவனையிலுள்ளன. இதனால் தனிமனிதன் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெற்செய்கையில் ஈடுபட முடியும். அதிக விளைச்சலைப் பெற முடியும் என்பது திண்ணம்.

அதேபோல நிலக்கடலைச் செய்கையை எடுத்துக் கொண்டால் அங்கேயும் அதிக எண்ணிக்கையிலான, வகைவகையான இயந்திரங்கள் வந்து விட்டன. ஒவ்வொரு வகையான செயற்பாட்டுக்கும் ஏற்றாற் போல இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் விவசாயிகளில் பலர் தங்களது பாரம்பரிய முறையிலிருந்து இன்னும் நவீனத்திற்கு வரவில்லை. விவசாயிகள் தங்கள் பாரம்பரிய முறையில் இருந்து மாற்றம் பெற வேண்டுமென விவசாயத்துறை எதிர்பார்க்கிறது.

 

எஸ்.தவபாலன்
புளியந்தீவு தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...