உறவுகள் பிளவடைந்து மயான அமைதியாகிப் போன வீடுகள் | தினகரன்

உறவுகள் பிளவடைந்து மயான அமைதியாகிப் போன வீடுகள்

உலக குடும்ப தினம் இன்று

சர்வதேச குடும்ப தினம் இன்று உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய நவீன உலகில் வாழ்வாதாரத்திற்காக சொந்த இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் தொழில் புரிவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்பக் கட்டமைப்பிலும் விரிசல் உருவாகிறது. ஒவ்வொருவரும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று வலியுறுத்தி வருடம் தோறும் மே மாதம் 15ம் திகதி சர்வதேச குடும்ப தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வெளியே இருப்பவர்கள் என்னதான் குடும்பத்திற்கு வருமானத்தை அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை.

ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

குடும்பங்களே கோயில்களாய் இருந்த தேசம் நம் தேசம். ஆனால் இன்றைக்கு அழிந்து போன சிட்டுக் குருவிகள் போல குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து போய் விட்டது.பாட்டன், பாட்டி, சித்தப்பா, சித்தி,மாமி, மாமா, பெரியப்பா, பெரியம்மா என்ற உறவுப் பெயர்கள் எல்லாம் மறைந்து கொண்டு இருக்கின்றன.

சித்தியோ,மாமியோ 'ஆன்ட்டி' என்பதுதான் உறவுப் பெயராகி விட்டது. சித்தப்பாவோ, மாமாவோ 'அங்கிள்' என்பதுதான் பெயர். சித்தியை சின்ன அன்னையாகப் பார்த்த தலைமுறைகள் கடந்து போய் விட்டன. பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளை அண்ணன் என்றழைத்த மரபுகளைக் கடந்து 'கஸின் பிரதர்' என்ற நாகரிக வார்த்தையில் அழைக்கும் நவீன யுகமாகிப் போனது இன்று.

நம் கிளைகள் எங்கெங்கு பரவினாலும் அதன் ஆணி வேர் குடும்பங்கள் ஆகும்.இயந்திர மயமாகிப்போன உலகில் இதயங்களுக்கு வேலை இல்லை.

'பதினாறு பெற்றுப் பெரு வாழ்வு' வாழ்ந்த வரை மகிழ்ச்சிக்கு குறைவில்லாமலே இருந்தது. பழமொழி மாறியது; 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்று. அடுத்து இன்னும் கொஞ்சம் மேலேறி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றானது. அதிலும் முன்னேற்றமான வளர்ச்சி கண்டு நாமே இருவர், நமக்கேன் ஒருவர்? என்பதே காலத்தின் கோலமாகி விட்டது. விளைவு மயான அமைதியாகிப் போய் விட்டன வீடுகள்.

கணவன் கைத்தொலைபேசியை பார்த்துக் கொண்டு, மனைவி தொலைக்காட்சி நாடகத்தைப் பார்த்தபடி வாழ்க்கை நகர்கிறது. இன்றைய நவீன யுகத்தில் விவாகரத்துகளும் அதிகரித்து விட்டன. 'என் அந்தரங்கத்தில் நீ தலையிடாதே... உன் அந்தரங்கத்தில் நான் தலையிட மாட்டேன்' என்ற நிபந்தனைகளோடு இன்றைய திருமணங்கள் நடந்தேடுகின்றன.

குடும்பத்தைக் கொண்டாட ​வேண்டிய சமுதாயத்தில் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. குடும்ப வன்முறைகள் அதிகரித்து விட்டன. மூடை சுமக்கும் அப்பாக்களை இதயத்தில் சுமக்கத் தயாராக இல்லை நாகரிக பிள்ளைகள்.குழந்தைகள் தினத்தையும், அன்னையர் தினத்தையும், தந்தையர் தினத்தையும் கொண்டாடும் நாம் இதன் அஸ்திவாரமான குடும்பத்தை கொண்டாட மறந்து விட்டோம்.

இன்பத்திலும், துன்பத்திலும் நம் உடன் இருப்பவை குடும்பம்தான். எத்தனை மைல் துாரத்தில் இருந்தாலும் கூட பேசும் குரலை வைத்து "என்ன மகன் சுகமில்லையா?" என்று கேட்கும் அம்மாக்கள் இருக்கும் வரை, "மகனுக்கு இந்தக் கறியை வைத்து விடு.நான் சமாளிப்பேன்" என்று சொல்லும் அப்பாக்கள் இருக்கும் வரை, 'தங்கச்சி படிக்கட்டும்.

நான் வேலைக்குப் போய் குடும்பத்தைக் கவனிக்கிறேன்' எனச் சொல்லும் அண்ணன்கள் இருக்கும் வரை, கணவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை தனக்கும் பிடிக்காது என்று கூறும் மனைவிகள் இருக்கும் வரை, மனைவிக்காக தனக்கான சுகங்களை இழந்து கஷ்டப்படும் கணவன்கள் இருக்கும் வரை, 'ஆயிரம் சொன்னாலும் அது என் உறவுதானே, அவங்களை விட்டுத் தர முடியுமா' எனச் சொல்கின்ற மருமகள்கள் இருக்கும் வரை இந்த மண்ணில் குடும்பம் என்ற அமைப்பு செழித்து வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

குடும்பங்களே நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கின்றன.மாலையில் கூடு வந்தடையும் பறவைகள் போல,வீடு வந்தடையும் மனிதர்களின் வாழ்க்கையே மகிழ்ச்சிகரமானதாக உள்ளது. குடும்பங்களே வாழ்விற்கு அர்த்தங்களைத் தருகின்றன. மனிதன் தொடர்ந்து இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப அமைப்புதான். தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ஊக்க சக்தியாக இருப்பதும் அவைதான்.குடும்பங்கள் தரும் ஆறுதலையும்,ஆதரவையும் வேறு எவராலும் தர முடியாது. தடம்மாறிப் போகாமலும், தடுமாறிப் போகாமலும் இருப்பதற்கான பின்னணி குடும்பங்கள்தான்.

குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தியே மே 15ம் திகதியை சர்வதேச குடும்ப தினமாக ஐ.நா அறிவித்துள்ளது. குடும்பங்களைக் கொண்டாட தினங்கள் தேவையில்லை. தினமும் கொண்டாடுவோம் குடும்பங்களை!

 

ம.ஜெயமேரி

 


Add new comment

Or log in with...