வன்முறைகளுக்கு ஐ.நா கவலை தெரிவிப்பு | தினகரன்

வன்முறைகளுக்கு ஐ.நா கவலை தெரிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தற்கொலை குண்டுத் தாக்குலையடுத்து நாட்டில் இன வன்முறை சம்பவங்கள் மற்றும் பதற்ற நிலை இடம்பெறுவதையிட்டு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 

ஒரு சிலரினால் மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் வெறுப்புணர்வு தொடர்பாக அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்களினால் பல நேரங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஐக்கிய நாடுகள் வரவேற்கிறது. அமைதியை பேணும் முக்கியத்துவத்துக்காக வெறுப்புணர்வை ஒன்றணைந்து நிராகரிக்க வேண்டிய நிலையில் இலங்கை இப்போது இருந்து வருகிறது.

பாதுகாப்பின்மை அல்லது வன்முறையை ஏற்படுத்தக்கூடிய வகையிலான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அவசர கால நிலையின் கீழ் அனைத்து சமூகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் உரிமைகளை மதிக்கும் வகையிலான செயற்பாடுகளை பாதுகாப்பு அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, வன்முறைகளை தூண்டுபவர்களை அதிகார தரப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளது. 

சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப இப்போது நேரம் வந்துள்ளது. இதற்கு அரசியல்வாதிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் சமூகத் தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் . ஒவ்வொரு இலங்கையினரதும் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதிப்படுத்த நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...