வன்முறை தீர்வைத் தராது! | தினகரன்

வன்முறை தீர்வைத் தராது!

பெரும் பூகம்பமொன்றையடுத்து சிறுசிறு நிலஅதிர்வுகள் தொடர்வதைப் போன்று, இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து ஆங்காங்கே இனரீதியான வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இயேசு நாதர் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 250 இற்கு மேற்பட்ட அப்பாவிகளைப் பலியெடுத்த காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதல்களையடுத்து, அதன் எதிர்வினையாக வன்முறை வெடிக்கக் கூடிய அபாயமொன்று நாட்டின் சில இடங்களில் அவ்வேளையில் நிலவியது.

அவ்வாறான வன்முறை அறிகுறியொன்று நீர்கொழும்பு பிரதேசத்திலேயே கூடுதலாகத் தென்பட்டது. நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் மிகக் கூடுதலான பொதுமக்கள் கொல்லப்பட்டதன் காரணமாகவே அங்கு பதற்றமான நிலைமையொன்று உருவெடுத்தது.

ஆனாலும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் நீர்கொழும்பில் உள்ள கிறிஸ்தவ மதத் தலைவர்கள் விரைந்து செயற்பட்டதன் காரணமாக, இனமத ரீதியிலான மோதல்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இடம்பெறவில்லை. கிறிஸ்தவ மக்கள் தரப்பில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட போதிலும், அம்மக்கள் சீற்றத்துக்கும்,மனஉணர்ச்சிகளுக்கும் இடமளிக்காமல் அமைதி காத்தனர்.

அதேசமயம், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் தினமும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக ஏனைய இடங்களிலும் இனங்களுக்கிடையேயான மோதல்கள் தவிர்க்கப்பட்டன.

எனினும் இந்த அமைதி நிலைமை தொடர்ந்தும் நீடிக்கவில்லை. சிலாபத்தில் கடந்த ஞாயிறன்று இனரீதியான வன்முறையொன்று இடம்பெற்றதையடுத்து பல இடங்களில் பதற்ற நிலைமை பரவியது. குளியாப்பிட்டி, மினுவாங்கொடை, ஹெட்டிப்பொல, நாரமல்ல, நாத்தாண்டி உட்பட பல இடங்களுக்கும் இனங்களுக்கிடையிலான வன்முறை பரவியது.

இனவன்முறை தலையெடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டு உடனடியாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போதிலும் ஆங்காங்கே வேண்டத்தகாத வகையில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளமை கவலை தருகின்றது.

கடைகள், வீடுகள் மற்றும் வணக்கத் தலங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், இத்தாக்குதலின் போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைக் கும்பல்கள் மேற்கொண்ட இச்சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும். இன ஐக்கியத்தை நேசிக்கும் மக்கள் மத்தியில் இச்சம்பவங்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன.

அதேசமயம், இதுபோன்ற அமைதிக்குப் பங்கமேற்படுத்தும் சம்பவங்கள் மேலும் இடம்பெறாமலிருப்பதற்காக அரசாங்கம் கடுமையான நடவடிக்ைககளை மேற்கொண்டுள்ளது. பதற்றம் நிலவும் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டு வருகின்றது. மேலதிக பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் அப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் எவராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்ைக மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பதற்ற நிலைமை முற்றாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்பதே சமாதான விரும்பிகளின் வேண்டுதலாக உள்ளது.

நாட்டில் இன்று தேசிய நெருக்கடி நிலவுகிறது. சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இங்குள்ள அடிப்படைவாத இளைஞர்கள் சிலரைப் பயன்படுத்தி, 250இற்கு மேற்பட்ட அப்பாவிகளைப் பலியெடுத்துள்ள குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றது.

இது சர்வதேச பயங்கரவாதிகளின் மனிதகுல அழிப்பான காட்டுமிராண்டித்தனம்! இந்த அச்சுறுத்தலானது சாதாரணமான விவகாரமல்ல. இப்பிரச்சினையானது அவதானமாகக் கையாளப்பட்டு, பயங்கரவாதம் முற்றாகவே துடைத்தெறியப்பட வேண்டும்.

எமது தாயகத்தை உண்மையாகவே நேசிக்கின்ற அனைவரும் ஒன்றுபட்டு நின்று ஆதரவளிப்பதன் மூலமே இம்மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாகத் துடைத்தெறிய முடியும்.

அவ்வாறிருக்ைகயில், இனரீதியான வன்முறையில் ஈடுபடுவது இன்றைய நெருக்கடிக்குத் தீர்வைத் தந்துவிடப் போவதில்லை. எமது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தவே இது போன்ற வேண்டத்தகாத சம்பவங்கள் வழியேற்படுத்தி விடக் கூடும். அதேசமயம், அடிப்படைவாதக் கும்பலொன்று மேற்கொண்ட உயிர்ப்பலிகளுக்காக அப்பாவி மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதை எவருமே நியாயப்படுத்தி விடவும் முடியாது.

இவ்வன்முறை இனிமேலும் தொடருவதற்கு இடமளிக்கலாகாது. பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்ைகயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறைக் கும்பல்களை முற்றாகக் கட்டுப்படுத்தி, நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டியதே இன்றுள்ள அவசர நடவடிக்ைகயாகும்.வன்முறைகள் இனிமேலும் இடம்பெறுமானால் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்ைகயை மேற்கொள்வதில் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

எமது தாயக மண்ணில் பயங்கரவாதத்தை முற்றாக அழித்தொழிக்க தீவிர நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் போன்று, இனரீதியான வன்முறைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்படுவது அவசியம். இலங்கையர்கள் ஒவ்வொருவரும் இதற்காக திடசங்கற்பம் பூண வேண்டியது அவசியம்.


Add new comment

Or log in with...