அன்னை மரியாளின் அருளை நாடுவோம் | தினகரன்

அன்னை மரியாளின் அருளை நாடுவோம்

கத்தோலிக்கத் திருச்சபை திருச்சபையின் தாயாம் அன்னை மரியாளுக்கு வருடந்தோறும் மே மாதத்தை அர்ப்பணித்து அதனை மாதாவின் வணக்க மாதமாகக் கொண்டாடி வருகிறது. 

இம்மாதத்தில் ஆலயங்களில் விசேட வழிபாடுகள், திருப்பலிகள் இடம்பெறுவதுடன் மாதாவின் திருச்சொரூபம் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு செபமாலை மற்றும்  தியானங்களுடன் விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அன்னை மரியாள் ஆண்டவர் இயேசுவின் தாயாக மட்டுமின்றி திருச்சபையின் இராக்கினியாகவும் அனைவரதும் தாயாகவும் போற்றப்பட்டுவருபவர். தம்மை இறை சித்தத்திற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து வாழ்ந்தவர். அன்னையின் அடைக்கலத்தை தேடுவோருக்கு அருள் மாரி பொழிபவர். அதனால்தான் உலகெங்கிலும் பல்வேறு பெயர்களில் அவரது ஆலயங்கள் உருவாக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

இந்த வகையில் மே மாதம் செபமாலை மாதாவின் மாதமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

மாதாவின் புதுமைகள்: 

வட அமெரிக்காவில் தியாகோ என்னும் பக்தியுள்ள ஒருவர் இருந்தார். அவர் செலவந்தவராக இல்லாவிட்டாலும் தான் இருக்கும் அந்த நிலையிலும் கடவுளை மகிழ்ச்சியுடன் வழிபட்டு வந்தார். அவர் மாதா மேல் வைத்த பக்தியின் காரணமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் நீண்ட தூரம் பயணம் செய்து மெக்சிக்கோ நகருக்குச் சென்று திருப்பலியில் பங்குகொள்வார்.  அந்நகருக்குச் செல்லும் வழியில் ஒரு சிறு மலை இருந்தது. அந்த மலையில் “தாகி” என்னும் பெயர்கொண்ட தேவதையை பிற சமயத்தார் பழங்காலம் தொட்டு வழிபட்டு வந்தனர்.

ஆனால் தேவ தாய் அந்த மலையிலேயே தனக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுவித்து, தன்னுடைய இரக்கத்தின் வல்லமையைக் காண்பிக்கத் திருவுளங் கொண்டார். 

1531ஆம் ஆண்டில் ஒரு சனிக்கிழமை தியாகோ வழமைபோல் திருப்பலியில் பங்குபற்ற அதிகாலையில் புறப்பட்டுச்சென்று, மேற்சொன்ன சிறு மலையருகாமையை சேர்ந்தவுடனேயே ஓர் இனிய குரலொலி கேட்கவே திருப்பிப் பார்த்தார்.

 அப்பொழுது மிகுந்த சத்தத்தை எழுப்பும் ஒரு சிறு மேகத்தையும், அதைச் சுற்றி மிகவும் பிரகாசமான ஒரு பச்சை வில்லையும் கண்டார். இந்நிகழ்வினை மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது மேகத்தில் நின்று யாரோ தன்னை அழைப்பதைக்கேட்டு, மலைமீது ஏறிச் சென்றார். அங்கே ஓர் உன்னத அரியணையில் மிகுந்த அழகுள்ள ஒரு கன்னிகை அமர்ந்திருப்பதைக் கண்டார்.  அன்னையின் திருமுகம் சூரியனுக்கு இணையாக இருந்ததையும் அன்னையுடைய உடைகளிலிருந்து புறப்பட்ட ஒளிக்கதிர்கள் சுற்றியிருந்த கற்பாறைகளின் மேல் பட்டு, அவற்றை இரத்தினக்கற்கைகளைப் போன்று ஒளிரச் செய்ததையும் கண்ட தியாகோ வியப்புற்று, மகிழ்ச்சியில் திளைத்தார்.

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்த கன்னிகை மிகுந்த அன்புடன் அவரை நோக்கி “நீ எங்கே போகின்றாய்?” என்றார். அதற்கு கன்னிகை “உனது பக்தியும் மனத் தாழ்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. நான் மெய்யான கடவுளின் தாயானதால் இவ்விடத்தில் எனக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும். நான் எனது வரங்களை உனக்கும் உன் நாட்டினருக்கும் ஏனைய பக்தியுள்ள விசுவாசிகளுக்கும் அருளி அன்புள்ள தாயைப்போல இருப்பேன். நீ கண்டதையும், கேட்டதையும் நான் கூறியதாக ஆயரிடம் சொல்” என்றார்.

 தியாகோ எளிய மனிதனாக இருந்த போதிலும் தான் கண்டதையும், கேட்டதையும் ஆயரிடம் அறிவித்தார். ஆயர் அதனைக் கேட்டு சந்தேகப்படாதிருந்த போதிலும் இறை சித்தத்தின் ஓர் அடையாளம் தமக்கு வேண்டும் என்று கூறி மௌனமாக இருந்து விட்டார்.

தயாகோ தன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் பொழுது சிறு மலையில் முன்சொன்ன படியே பரிசுத்த கன்னிகையை மீண்டும் கண்டார். அவர் அன்னையிடம் ஆயர் கூறியதை எடுத்துரைத்த போது அவள், “நல்லது, அந்த அடையாளத்தைக் கொடுப்போம்’ என்றாள். 

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தயாகோ மீண்டும் மலையருகில் வந்தபோது தேவ தாய் அவருக்குத் தன்னைக் காண்பித்து “நீ இந்த மலையிலிருந்து சில மலர்களைப் பறித்துக்கொண்டு வா” என்றாள். அப்போது மலர்கள் மலர்கின்ற காலமில்லாதிருந்தாலும் அவர் பரிசுத்த கன்னிகையின் வார்த்தையை நம்பி, மலைமீது ஏறிச் சென்றார். அங்கே சிறந்த மணமுள்ள மலர்கள் இருப்பதைக் கண்டு, அவற்றில் சிலவற்றைப் பறித்து அன்னையிடம் கொடுத்தார்.

அவள் அம் மலர்களை வாங்கி  மீண்டும் அவற்றை அவரிடம் கொடுத்து, “நீ இவற்றை ஆயரிடம் கொண்டு போ” என்றாள். அம்மலர்களைத்தான் அணிந்திருந்த நீண்ட சட்டைக்குள் மறைத்துக்கொண்டு அவர் ஆயரிடம் சென்றார். 

ஆயரிடம் பணிபுரிவோர் மலர்களின் மணத்தை முகர்ந்து, தியாகோவின் சட்டையைத் திறந்து, சட்டைக்குள் உன்னதமான மலர்களைக் கண்டார்கள்.

ஆயரின் அருகில் வந்தவுடன் தியாகோ மலர்களைக் கொடுப்பபதற்காக சட்டையைத் திறந்தபோது, அனைவருடைய கண்களுக்கும் மிகவும் அழகான கன்னி மரியாளின் திரு உருவம் அவருடைய சட்டையில் இருப்பதாகத் தோன்றியது.

உடனே ஆயரும் மற்றவர்களும் ஆச்சரியமடைந்து சாஷ்மாங்கமாய் விழுந்து வணங்கி அந்த அற்புதமான படத்தை ஆராய்ந்து பார்த்தார்கள். பின்பு ஆயர் தியாகோவின் சட்டையைக் கழற்றி அதில் பதிக்கப்பட்டிருந்த படத்தை தம் அரண்மனையில் இருக்கும் ஆலயத்தில் வைத்தார். அத்திருப்படத்தை வணங்க அநேகர் திரண்டு வந்தார்கள்.  

அடுத்த நாள் ஆயர் திரளான மக்களோடு கன்னி மரியாள் தம்மைக் காண்பித்த சிறு மலையைப் பார்க்கச் சென்றார். அவர் தேவ மாதாவின் பாதம் பதிந்த இடத்தைக் காண்பிக்குமாறு தியாகோவைக் கேட்டபோது அவர் பயத்தினால் அதைக் காண்பிக்க முடியாதிருக்கையில் பூமியினின்று அற்புதமாய் ஒரு நீரூற்று புறப்பட்டது. அந்த ஊற்று இன்றும் அவ்விடத்தில் இருக்கின்றது. அந்த அற்பதங்களால் இறை சித்தத்தை அறிந்து கொண்ட ஆயர் அந்தப் புனித தலத்திலேயே ஓர் ஆலயத்தைக் கட்டி ஆடையில் பதிக்கப்பட்டிருந்த படத்தை அதில் வைத்தார். சில வருடங்களின் பின் இவ்வாலயம் பெரிதாக அமைக்கப்பட்டது.  இந்த வரலாற்றை கேட்கின்ற நாமும் கன்னி மரியாளின் வல்லமையையும் அன்பையும் தயாள குணத்தையும்  அவளுடைய அடைக்கலத்தையும் மிகுந்த நம்பிக்கையுடன் நாடிச் செல்வோம்.            -


Add new comment

Or log in with...