வாழ்க்ைகயில் ஒழுக்கம் இல்லாதவர் மக்களுக்கு உபதேசம் செய்வது எவ்வாறு? | தினகரன்

வாழ்க்ைகயில் ஒழுக்கம் இல்லாதவர் மக்களுக்கு உபதேசம் செய்வது எவ்வாறு?

வாக்குகளை கவர்ந்திழுப்பதற்காக இந்துக்களை இழிவுபடுத்துவதா?

வறுத்தெடுக்கப்படும் கமல்!

'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து ஆவார்' என்று நேற்றுமுன்தினம் கமல்ஹாசன் கூறிய கருத்தொன்று தமிழ்நாட்டில் மட்டுமன்றி முழு இந்தியாவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சியில் நேற்றுமுன்தினம் கமல் பேசும்போது, "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ண கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன்" என்றார்.

கமலின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பா.ஜ.க தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கமலை கிழித்து விளாசித் தள்ளி வருகிறது. கமல் பேசியது சரியா, தவறா என்ற வாதத்துக்குள் சென்றால், அதற்கு விடை கிடைக்காது. ஆனால் இஸ்லாமியர்கள் நிறைந்திருக்கும் பள்ளப்பட்டியில் நின்று கொண்டு கமல் பேசிய இப்பேச்சு இப்போதைக்கு தேவையா, தேவையில்லையா என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாம்.

சிறுபான்மையினர் வாக்குகளை பெற கமல் இப்படிப் பேசியிருந்தால் அது முற்றிலும் தவறு.இலங்கைக் குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை கமல் என்ன கருத்து சொல்லி உள்ளார் என்று சீமான் அன்று கேள்வி எழுப்பியது இப்போது நினைவுக்கு வருகிறது. இப்போது நடந்த குண்டுவெடிப்புகளுக்கு கருத்துச் சொல்லாமல், என்றைக்கோ நடந்த சம்பவத்தை நினைவுபடுத்திப் பேசுவது எதற்காக என்ற கேள்வியும் எழுகிறது.

அதேசமயத்தில் கமல் இன்றைக்கு இப்படி பேச காரணம் யார்? இதே பா.ஜ.கவேதான். எதற்கெடுத்தாலும் நேரு, இந்திரா, ராஜீவை குறை சொல்லி வருவது பிரதமர் மோடியின் பேச்சில் தெரிகிறது. இன்னொரு பக்கம், காந்தியை சுட்ட கோட்சேவுக்கு கோயில் கட்டி கும்பிடும் வேலையும் நடக்கிறது.

இதே இந்து மகா சபையைச் சேர்ந்த ஒரு பெண் சாமியார், காந்தியை பொம்மை துப்பாக்கியால் சுட்டு, இனிப்புகள் வழங்கியதன் உள்அர்த்தம் என்ன? இதனை பா.ஜ.க இன்றுவரை கண்டிக்காதது ஏன்? என்று தெரியவில்லை.

மொத்தத்தில் அவர்கள் சொன்னார்கள்,பதிலுக்கு இவரும் சொன்னார் என்ற வகையில்தான் கமல்ஹாசனின் கருத்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நடிகர் கமல்ஹாசனுக்கு எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"கமல்ஹாசனை அடையாளம் காண்போம். பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு ரயிலில் இந்து உடல்களை ஜின்னா 1947 ஓகஸ்ட் 15 அன்றே அனுப்பி வைத்ததும் நவகாளி சம்பவங்களும் இந்த ஜின்னாவின் பேரனுக்கு எப்படி நினைவிருக்கும். முஸ்லிம் வாக்குக்காக இப்படியா? வெட்கம்...முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம். முஸ்லிம் வாக்குகளுக்காக இந்துக்களை இழிவுபடுத்தும் செயலைப் பாருங்கள். விஸ்வரூபம் படத்திற்கு இவர் பயங்கரவாதிகள் முன்னால் கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை.

அரவக்குறிச்சியில் பணக்கார முஸ்லிம் பெண்கள் மாலை 6மணிக்குமேல் கடைக்கு வருவார்கள். எனவே மாலையில் இந்து ஆண்கள் கடைத்தெருவில் நடமாடக் கூடாது என்ற ஜமாஅத் உத்தரவை எதிர்த்து 1999இல் அரவக்குறிச்சியில் போராட்டம் நடத்தியவன் நான். ஆனால் வாக்குக்காக அங்கு சென்றுள்ள கமலுக்கு அது எப்படி தெரியும்?

இவ்வாறு எச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"வாழ்க்கையில் ஒழுக்கமே இல்லாதவர்தான் கமல். இதில் ஊருக்கு என்ன உபதேசமா? மதவிஷத்தை கமல் பரப்பி வருவது வாக்குக்காகத்தான்" என்று அடுத்தடுத்து 3 ட்வீட்களை போட்டு தாக்கி உள்ளார் தமிழிசை சவுந்தராஜன்.

தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரனாக தன்னைச் சொல்லிக் கொள்கிறார் கமல்.அப்படிச் சொல்லிக் கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர் அவர். ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை.ஊருக்கு உபதேசிக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது? புதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கமல் பழையதை கையில் எடுப்பது வாக்குக்காகத்தானே?அது அரசியல்வேஷம்" என்று தாக்கிப் பேசியிருக்கிறார் தமிழிசை.

 


Add new comment

Or log in with...