மாணவர் வரவில் இன்னுமே வீழ்ச்சி | தினகரன்

மாணவர் வரவில் இன்னுமே வீழ்ச்சி

வதந்திகளால் உருவான அச்சம் தணியவில்லை

இரண்டாம் தவணைக்காக அரசாங்கப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் எதிர்பார்த்த அளவுக்கு மாணவர்களின் வரவு காணப்படவில்லை.பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், பாடசாலைகளை ஆரம்பிப்பது இப்போதைக்குப் பொருத்தமில்லையென இன்னொரு தரப்பினரும் கூறுவதால் பாடசாலைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.

பாடசாலைப் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் அடைய வேண்டுமா? பாடசாலைப் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

இது பற்றி பலரும் தெரிவித்த கருத்துகளை இங்கு தருகிறோம்.

"பொய்களுக்கு ஏமாறாமல் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புங்கள்" என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர.

"ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சில நாட்கள் பாடசாலைகளை மூடிவிட அரசு முடிவு செய்தது. அவ்வாறு முடிவு எடுத்ததற்குக் காரணம் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகும். அதன் பின்னர் கல்வியமைச்சின் அதிகாரிகளும் பாதுகாப்புப் பிரிவினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் 06ந் திகதி தொடக்கம் மீண்டும் பாடசாலகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 6ம் தரம் தொடக்கம் 13ம் தரம் வரை மாணவர்களுக்கான பாடசாலைகள் திறக்கப்பட்டன. தரம் ஒன்று தொடக்கமுள்ள வகுப்புகள் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறு பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்னர் முப்படைகள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் இணைந்து நாடு பூராவும் பாடசாலைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சோதனைகளை மேற்கொண்டார்கள். அதேபோல் அனைத்து பாடசாலைகளுக்கும் பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். கொழும்பு நகரில் பிரதான பாடசாலைகளுக்காக விசேட பாதுகாப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் பாடசாலைகளில் பெற்றோர் சங்கங்களின் ஒத்துழைப்பையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்" என்கிறார் ருவன் குணசேகர.

"நாம் பெற்றோரிடமும் பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து சேவைகளிடமும் விசேட வேண்டுகோளொன்றை விடுக்க வேண்டியுள்ளது. பிள்ளைகளை பாடசாலை கேற் அருகில் இறக்கி விடும் போது துரிதமாக இறக்கி விடுங்கள். ஏனென்றால் தாமதம் ஏற்படும்போது அந்த இடத்தில் சனநெரிசல் ஏற்படும்.

அதனால் பாதுகாப்புப் பிரிவின் நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படலாம். விரைவாக பிள்ளைகளை இறக்கி விட்ட பின்னர் பாதுகாப்பு பிரிவினரால் ஏனைய தேவையான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படும். சில இடங்களில் பாடசாலை வாகனங்களுக்காக பிரத்தியேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து நடவடிக்கைகளும் பாதுகாப்பை உறுதி செய்யவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காக ஒத்துழைப்பை வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன். அதேபோல் சில விஷமிகள் மக்களை தவறான வழியில் வழிநடத்த வதந்திகளை பரப்புகின்றார்கள்.

யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரியொன்றின் மீது தாக்குதல் நடத்தப்படுமென கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது. விஷமிகளின் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஏமாறவேண்டாமென கேட்டுக் கொள்கின்றேன். வதந்தி பரப்புவோர் தண்டிக்கப்படுவார்கள்.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்களோ, நபர்களோ அடையாளம் காணப்பட்டால் உடனடியாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுங்கள். அதனால் நாம் அனைத்துப் பெற்றோரிடமும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம். பிள்ளைகள் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பை வழங்க முப்படைகள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்.

இதேவேளை "பாடசாலை மாணவர்களின் வரவு அதிகரித்துள்ளது" என்று மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனின் கூறுகிறார்.

"அனைத்துப் பாடசாலைகளினதும் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அவ்விடயத்தில் தேசிய பாடசாலையா அல்லது மாகாண பாடசாலையா என எந்த பாகுபாடும் காட்டப்பட மாட்டாது. எல்லாப் பாடசாலைகளிலும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனாலும் நடந்த சம்பவங்களினால் ஏற்பட்ட பயம் இன்னும் பெற்றோர் மனதில் காணப்படுவதால் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. தற்போது மெல்ல மெல்ல அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆசிரியர்களின் வருகை குறையவில்லை.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராமைக்கு வதந்திகளே முக்கிய காரணமாகும். அத்துடன் பாடசாலை வான்கள் வராமையும் மாணவர்களின் வருகை குறைந்ததற்கு காரணமாகும். ஒருசில மாணவர்களுக்காக போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களுக்கு நட்டமாகும்.

கல்வியமைச்சின் ஆலோசனைக்கு அமைய அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெற்றோர் பயம், சந்தேகமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பலாமென பாடசாலை பாதுகாப்பு குழுக்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்கிறார் அவர்.

"மாணவர்கள் வருகை குறைவாக இருந்தாலும், கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் எதிர்வரும் நாட்களில் மாணவர்களின் வரவில் முன்னேற்றம் ஏற்படுமென நம்புகின்றோம்" என்று மேலமாகாண கல்விப் பணிப்பாளர் கூறுகிறார்.

 

சிதாரா சேனானி

(தினமின)


Add new comment

Or log in with...