வேண்டாம் வெறுப்பூட்டும் கருத்துகள்! | தினகரன்

வேண்டாம் வெறுப்பூட்டும் கருத்துகள்!

அப்பாவி மக்களை இலக்கு வைத்து பயங்கரவாதக் கும்பலொன்று காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி மூன்று வாரங்கள் கடந்து விட்ட போதிலும், நாட்டில் பதற்றமும் அச்சமும் கொண்ட சூழல் இன்னுமே நீங்கவில்லை.

மக்கள் மத்தியில் இவ்வாறான நிம்மதியற்ற சூழல் நிலவுவதற்கு பிரதான காரணமாக சமூக ஊடகங்களே அமைந்துள்ளன. நேற்றுமுன்தினம் பிற்பகல் சிலாபத்தில் தொடங்கிய பதற்ற நிலைமையானது மாலையான பின்னர் குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய போன்ற பல பிரதேசங்களுக்கெல்லாம் பரவி விட்டதற்குக் காரணம் சமூக ஊடகங்கள்! எனவேதான் நாட்டில் பதற்றத்தைத் தணித்து அமைதியை நிலைநாட்டுவதற்காக அரசாங்கம் சமூக ஊடகங்களை முடக்க வேண்டியதாயிற்று.

ஈஸ்டர் ஞாயிறன்று தற்கொலைக் குண்டுவெடிப்புகள் இடம்பெற்ற தினத்தில் மாத்திரமன்றி, அதன் பின்னர் ஆங்காங்கே இனமுறுகல்கள் தலைதூக்கிய வேளைகளில் எல்லாம் சமூக ஊடகங்களை இவ்வாறு முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது.

ஈஸ்டர் தினப் படுகொலைகளையடுத்து நாட்டிலுள்ள அடிப்படைவாதப் பயங்கரவாதக் கும்பலை முழுமையாகவே தேடிக் கண்டுபிடிப்பதற்காக தமது உயிரையே பணயம் வைத்தபடி பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமான தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் இனிமேலும் பயங்கரவாதமொன்று முளைவிடக் கூடாதென்பதே அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் பிரிவினரதும் ஒரே நோக்கமாக இருக்கின்றது.

மறுபுறத்தில், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் மதத் தலைவர்களெல்லாம் இனநல்லுறவு சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். அடிப்படைவாத நோக்கம் கொண்டோரின் மனித நாகரிகத்துக்கு ஒவ்வாத செயற்பாடுகளால், இனங்களுக்கிடையில் விரிசல்களும் மோதல்களும் உருவெடுத்து விடக் கூடாதென்பதே மதத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டோரின் நோக்கமாக இருக்கின்றது.

இன ஐக்கியத்தையும் விழுமியங்களையும் இவ்வாறு மக்கள் மத்தியில் ஆழமாக விதைப்பது எதிர்காலத்தில் நாட்டின் ஒற்றுமைக்குப் பலம் சேர்க்குமென்பதில் ஐயமில்லை. இவ்வாறு மதத் தலைவர்களில் ஒரு பிரிவினர் அன்பு, காருண்யம், ஐக்கியம் போன்றவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் விதைப்பதற்குப் பதிலாக இனவாத, மதவாத சிந்தனைகளை விதைத்ததன் பலனையே நாடு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இளைஞர்கள் மத்தியில் சுய ஆதாயங்களுக்காக இனவாதத் தீயை மூட்டுவதில் அரசியல்வாதிகள் சிலர் மாத்திரமன்றி, மதப் பிரமுகர்கள் சிலரும் கடந்த காலத்தில் காரியமாற்றியிருக்கின்றனர். இவர்களைப் போன்றோர் மூட்டிய இனவாத, மதவாத நெருப்புதான் இன்று பற்றியெரிந்து கொண்டிருக்கின்றது.

இளைஞர்கள் மத்தியில் சுய ஆதாயங்களுக்காக இனவாதத் தீயை மூட்டுவதில் அரசியல்வாதிகள் சிலர் மாத்திரமன்றி, மதப் பிரமுகர்கள் சிலரும் கடந்த காலத்தில் காரியமாற்றியிருக்கின்றனர். இவர்களைப் போன்றோர் மூட்டிய இனவாத, மதவாத நெருப்பினால் நாட்டில் ஐக்கியம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இனங்களுக்கிடையே பகைமையைத் தணிப்பதற்காக மதநல்லிணக்க எண்ணம் கொண்ட சமயப் பிரமுகர்கள் ஒருபுறத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், மறுபுறத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக மற்றொரு தரப்பினர் இனவாத யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்குப் பின்னரான இனமுறுகல்கள் ஒவ்வொன்றுக்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரப்பப்பட்ட வெறுப்பூட்டும் கருத்துகளே காரணமாக இருந்திருக்கின்றன.

பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்களும் சிங்களவர்களுமாவர். அவர்களில் ஒருசிலரைத் தவிர ஏனையோரெல்லாம் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள்.

அதேசமயம், குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்களில் உள்ள அடிப்படைவாதத்தில் ஊறித் திளைத்த ஒரு பிரிவினராவர்.

ஆகவே குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் நாட்டில் உருவாகியுள்ள அசாதாரண நிலைமை எவ்வாறாயினும் தணிக்கப்படுதல் வேண்டும். இல்லையேல் மத அடிப்படைவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களால் இனங்களுக்கிடையே முறுகல் தீவிரமடையும் ஆபத்து ஏற்படலாம். நாட்டில் மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கலாகாது.

250 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கோரமான முறையில் கொல்லப்பட்ட போதிலும், கிறிஸ்தவ மக்கள் அமைதி காத்திருக்கின்றனர். மதநல்லிணக்கம் கொண்ட அனைவருமே கிறிஸ்தவ மக்களின் கனிவான மனோநிலையைப் பாராட்டுகின்றனர். பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் இவ்விடயத்தில் காண்பித்த அக்கறையானது அடிப்படைவாத சிந்தனை கொண்ட அனைவருக்குமே முன்மாதிரியானதாகும்.

மதக் கோட்பாடுகளை பேச்சளவில் பிரசாரம் செய்வதால் பயனில்லை. அவற்றை எமது அன்றாட வாழ்வில் உரியபடி பயன்படுத்த வேண்டுமென்பதை கிறிஸ்தவர்கள் எமக்கெல்லாம் கற்றுத் தந்துள்ளனரென்று சில தினங்களுக்கு முன்னர் கிழக்கில் நடைபெற்ற இனநல்லுறவு மாநாடொன்றில் வைத்து மற்றைய மதமொன்றைச் சார்ந்த சமயப் பெரியவர் ஒருவர் தெரிவித்த கருத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும்.

இவ்வாறான நிலைமைகளுக்கிடையில் முகநூல் ஊடாக மதவாத, இனவாத ரீதியில் வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதால் சாதகமான விளைவுகள் எதுவுமே ஏற்படப் போவதில்லை. மாறாக இன,மத ரீதியான குரோதங்களே மேலும் வளருவதற்கு வழியேற்படலாம்.

குண்டுத் தாக்குதல் நடத்திய முட்டாள்தனமான வெறிக் கும்பலுக்கு அனுதாபம் தேடும் விதத்தில் முகநூல் வழியாக கருத்தைப் பரப்பிய குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் ஒருவர் கைதாகியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிகளின் உயிர்களைப் பறித்தெடுத்த கொடியவர்களுக்கு அனுதாபம் தேட முற்படுவதை அடிப்படைவாதம் என்பதா அல்லது மதவாதம் வளர்த்து விட்ட மனோவியாதி என்பதா?

இன்றைய தேசிய நெருக்கடி நிறைந்த சூழலில் இவ்வாறான வெறுப்பேற்றும் கருத்துகள் வேண்டாம்! இனங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்கான முயற்சிகளிலேயே அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்துவது இன்று பிரதானம். எமது அழகிய தேசம் இத்தனை காலம் கண்ணீர் சிந்தியது போதும்!


Add new comment

Or log in with...