சுற்றுலாத்துறை விரைவில் மீட்சிபெறும் | தினகரன்

சுற்றுலாத்துறை விரைவில் மீட்சிபெறும்

சுற்றுலா ஊக்குவிப்புச் சபையின் தலைவர் நம்பிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை விரைவில் மீட்சிபெறும். மேலும் தாக்குதல்கள் இடம்பெறாதிருந்தால் ஆகக் குறைந்தது 13மாதங்களில் இந்த பாதிப்பிலிருந்து மீண்டுவிட முடியும் என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சபையின் தலைவர் கிஷூ கோமஸ் நம்பிக்கை வெளியிட்டார்.  

கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து நாடு மீள்வதற்கு சராசரியாக 13மாதங்கள் தேவை என்றும் சுட்டிக்காட்டினார். 

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளபோதும் நாளாந்தம் சராசரியாக 1700பேர் வருகின்றனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் நாளாந்தம் சராசரியாக 4,600பேர் வருகை தந்தனர்.

2018ஆம் ஆண்டு 2.3மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்ததுடன், இவர்களின் மூலம் 4.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு எதிர்பார்த்ததைவிட 30வீதமான வீழ்ச்சி காணப்படும். வருமானமாக 3பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தாக்குதல்களில் 42வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததுடன், 37பேர் காயமடைந்திருந்தனர். சர்வதேச பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து 37நாடுகள் இலங்கைக்கு எதிராக பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.

இந்தப் பயண எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும் சுற்றுலாத்துறை முகவர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் அக்கறையுடன் இருக்கின்றனர். இதனை மேலும் அதிகரிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களைத் தொடர்புகொள்ளவுள்ளோம் என்றார். 

2019ஆம் ஆண்டுக்காகத் திட்டமிடப்பட்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்கள் யாவும் முன்னெடுக்கப்படும். 25பயணக் கண்காட்சிகள் மற்றும் 18வீதிக் கண்காட்சிகளை உலகளாவிய ரீதியில் நடத்தவுள்ளோம்.  

இதுபோன்று பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் அதிலிருந்து எவ்வாறு மீண்டன என்பதை ஆராய்ந்து அவர்களின் அனுபவங்களையும் பெற்று இந்தப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார். 

இந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்க பல்வேறு சலுகைகளை அரசாங்கத்திடம் கோரியிருப்பதாக சுற்றுலா ஹோட்டல்கள் சம்மேளனத்தின் தலைவர் சாந்த உக்வத்த தெரிவித்தார்.

வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதுஇவ்விதமிருக்க அரசாங்கம் பல்வேறு சலுகைகளை சுற்றுலாத்துறையினருக்கு வழங்க முன்வந்துள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறையினர் பெற்ற கடன்களை 2020 ஆண்டு ஜூலை மாதம் வரை தள்ளிவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், வற் வரி 5 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


Add new comment

Or log in with...