ஹம்பாந்தோட்டையில் பெற்றோலிய வாயு பரிமாற்ற முனையம் | தினகரன்

ஹம்பாந்தோட்டையில் பெற்றோலிய வாயு பரிமாற்ற முனையம்

லாஃப்ஸ் டேர்மினல் லிமிடட் நிறுவனம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திலுள்ள தனது அதிநவீன திரவப் பெற்றோலிய வாயு பரிமாற்ற முனையத்தின் தொழிற்பாடுகளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது.

இந்த வகையில் தெற்காசியாவிலேயே மிகப் பாரிய முனையமாக இது அமைந்துள்ளதுடன், லாஃப்ஸ் மரிடைமுக்குச் சொந்தமான திரவப் பெற்றோலிய வாயுக் கப்பல் தொகுதியில் இடம்பெற்றுள்ள, இலங்கைக் கொடியுடனான காஸ் சக்சஸ் என்ற கப்பல், முதலாவது திரவப் பெற்றோலிய சரக்குத் தொகுதியுடன் வந்தடைந்துள்ளது.  

இப்புதிய லாஃப்ஸ் திரவப் பெற்றோலிய வாயு முனையமானது இந்து சமுத்திரத்தில் முக்கியமானதொரு எரிசக்தி உட்கட்டமைப்பாகத் திகழ்வதுடன், மேற்கையும், கிழக்கையும் இணைக்கும் முக்கிய சர்வதேச கப்பற்பாதை வர்த்தக மார்க்கங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் அமையப்பெற்றுள்ளது. முதலாவது திரவப் பெற்றோலிய வாயு சரக்குக் கப்பலாக, லாஃப்ஸ் மரிடைமுக்குச் சொந்தமான திரவப் பெற்றோலிய வாயுக் கப்பலான காஸ் சக்சஸின் வருகை வைபவரீதியாக இடம்பெற்றதுடன், லாஃப்ஸ் நிறுவன பணிப்பாளர் சபைத் தலைவரான டபிள்யூ.கே.எச். வெஹபிட்டிய, லாஃப்ஸ் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திலக் டி சில்வா மற்றும் ஹம்பாந்தோட்டை தேசிய துறைமுக குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான றேய் றென் ஆகியோர் அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். 

“இந்த நிகழ்வானது லாஃப்ஸிற்கு மட்டுமல்லாது, எமது தேசத்திற்கும், மற்றும் ஒட்டுமொத்த ஆசிய பிராந்தியத்திற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணமாக மாறியுள்ளது,” என்று லாஃப்ஸ் பணிப்பாளர் சபைத் தலைவரான டபிள்யூ.கே.எச். வெஹபிட்டிய குறிப்பிட்டார்.  

“தெற்காசியாவில் கப்பற் போக்குவரத்து மற்றும் பண்ட இடப்பெயர்வு மேலாண்மை மையமாக மாற வேண்டும் என்ற இலங்கையின் கனவை நனவாக்கும் முயற்சிகளின் கீழ் முதலாவது புரட்சிகரமான படியாக 1970 களின் ஆரம்பத்தில் கொள்கலன் பரிமாற்றத்திற்காக கொழும்பு துறைமுகத்தில் மையமொன்று ஏற்படுத்தப்பட்டு, ஆரம்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தைச் சூழ எரிசக்தி மையமொன்றைத் தோற்றுவித்து, எமது நாட்டின் கனவை அடையப்பெறும் முயற்சியில் இரண்டாவது புரட்சிகரமான படியாக இன்று லாஃப்ஸ் திரவப் பெற்றோலிய வாயு பரிமாற்ற முனையத்தின் தொழிற்பாட்டை நாம் முன்னெடுத்துள்ளோம். இதன் மூலமாக இலங்கைக்கு கிடைக்கின்ற பொருளாதார மற்றும் சமூக நல்விளைவு மிகப் பெரியது என்பதுடன், பன் மடங்காகும்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.   


Add new comment

Or log in with...