சிறிய, நடுத்தர முயற்சிகளுக்கான வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம் | தினகரன்

சிறிய, நடுத்தர முயற்சிகளுக்கான வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்

நிதியியல் துறையின் மேலதிக நிதிச் செலவினங்களைக் குறைப்பதுடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான கடன் வீதங்களை 200அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கிடையிலான வட்டி விகித இடைவெளியைக் குறைக்க எதிர்பார்த்திருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பில் மத்திய வங்கி வெ ளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்கு வீதத்தை குறைப்பதன் மூலம் வட்டி வீதங்களைக் குறைப்பதற்கும் சந்தைத் திரவத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்கள் என்பன அதிக வட்டி வீதங்களைக் கடன்களுக்கு அறவிடுவதையும் அதிகப்படியான வட்டி வீதங்களை வைப்புக்களுக்கு வழங்குவதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் நன்றாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இலங்கையின் உண்மையான வட்டி வீதத்தைப் பிராந்தியப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியானதாகக் காணப்படுகின்றன. 

அதன்படி நிதியியல் துறையூடாக நாணயக் கொள்கைப் பறிமாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக வைப்புக்களுக்கான வட்டி வீதங்களைக் குறைப்பதற்கும் பொதுவான கடன் வட்டி வீதங்களை முக்கியமாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வட்டி வீதங்களைக் குறைப்பதனூடாக உண்மை பொருளாதாரத்தில் கடன்பாய்ச்சலை மேம்படுத்துவதற்கும் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியில்லா நிதியியல் நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி கோருகிறது. 

உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களால் வழங்கப்படும் மூன்று மாத காலப்பகுதிக்குள் குறைவான சேமிப்பு மற்றும் ஏனைய வைப்புக்களுக்கான குறைவான சேமிப்பு மற்றும் ஏனைய வைப்புக்களுக்கான வட்டி வீதம் துணைநில வைப்பு வசதி வீதத்துடன் இணைக்கப்படும் அதேவேளை நீண்ட காலப்பகுதிக்குரியவை 364நாள் திறைசேரி உண்டியல் விகிதத்துடன் இணைக்கப்படும்.

18வயதிற்கு குறைவான பிள்ளைகளுக்குரிய சேமிப்பு வைப்பு மற்றும் மூத்த பிரஜைகளுக்குரிய ஒரு ஆண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புக்களுக்கு மேலதிகமாக 50அடிப்படை புள்ளிகள் வரை உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் வட்டி வழங்கலாம்.  

வங்கியல்லா நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட படுகடன் சாதனங்களுக்கு உயர்ந்தபட்ச வட்டி வீதங்களுக்குட்பட்டவை. இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் போட்டித்தன்மையுடையதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.  

இவ்வாறான நடவடிக்கைகள், நிதியியல் துறையின் மேலதிக நிதிச் செலவினங்களைக் குறைப்பதுடன் மத்திய வங்கி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான கடன் வீதங்களை 200அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு எதிர்பார்க்கிறது.

கடந்த வருடம் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் நியதி ஒதுக்கு வீதம் 250அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டதன் மூலம் நிதிச் செலவீனங்கள் ஏற்கனவே குறைந்துள்ளன.

இது வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கிடையிலான வட்டி விகித இடைவெளியைக் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கி வட்டி விகிதங்களின் நடத்தையை நெருக்கமாக கண்காணிக்கும் அதேவேளை எதிர்காலத்தில் பொருத்தான நடவடிக்கைகளையும் எடுக்கும் அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   


Add new comment

Or log in with...