உள ஆற்றுப்படுத்தல்களே இன்றைய வேளையில் அவசியம் | தினகரன்

உள ஆற்றுப்படுத்தல்களே இன்றைய வேளையில் அவசியம்

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறன்று அப்பாவி மக்களை இலக்கு வைத்து காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு மூன்று வார காலம் கடந்து விட்டது.

கணநேரப் பொழுதில் நடந்து முடிந்து விட்ட குரூரத்தனமான சம்பவத்தையடுத்து மக்கள் மத்தியில் உருவான அதிர்ச்சியும், வேதனையும் இன்னுமே நீங்கவில்லை. அடிப்படை மதவாதம் கொண்ட சர்வதேச பயங்கரவாத இயக்கமொன்று இலங்கையிலுள்ள முஸ்லிம் இளைஞர்களில் சிலரைப் பயன்படுத்தி இவ்வாறு அப்பாவிகள் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளுமென்று எவருமே நினைத்திருக்கவில்லை.

எனவேதான் இலங்கை மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள், இத்தனை உயிர்கள் அநியாயமாகப் பலியாகிப் போனதையிட்டு பெரும் துயர் அடைந்திருக்கிறார்கள்.

சில குடும்பங்களில் அத்தனை உறுப்பினர்களுமே குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்கள். கேட்போர் உள்ளத்தை உருக்குகின்ற பெரும் வேதனை இது. எத்தனையோ எதிர்பார்ப்புகளுடனும் கனவுகளுடனும் அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு பிரார்த்தனைக்காக தங்களது குழந்தைகளுடன் தேவாலயத்துக்குச் சென்றிருப்பார்கள், அதேபோன்று நட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் கூட மகிழ்ச்சிக் களிப்புடன் இருந்திருப்பார்கள்.

அத்தனை பேரின் உயிர்களையும் ஈவுஇரக்கமின்றி அழித்தொழித்து விட்டார்கள் அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்!

தங்களது முட்டாள்தனமான சுயகோட்பாடுகளுக்காக எதுவுமறியாத அப்பாவி மக்களை அழித்தொழிக்க வேண்டுமென நினைக்கும் காட்டுமிராண்டித்தனத்தையும் அறிவீனத்தையும் விபரிப்பதற்கு வார்த்தைகளே கிடையாது. இவ்வாறான குறுகிய சிந்தனை கொண்ட கும்பலை மனித குலத்துக்குள் எவ்வாறுதான் உள்ளடக்குவது?

குண்டுவெடிப்பு சம்பவங்களால் காயமடைந்தவர்களில் அநேகர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். ஆனாலும் ஒரு சிலர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் குழந்தைகளின் நிலைமைதான் பெரும் பரிதாபம்.

எதுவுமறியாத மழலைகள் எரிகாயங்களுடன் சிகிச்சை பெறுகின்ற காட்சி மனதைப் பிழிகின்றது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த போது, அருகில் இருந்த வேளையில் காயமடைந்தவர்களில் பலருக்கு செவிப்புலன் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் கதவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்புகளில் குடும்ப உறவினர்களைப் பறிகொடுத்தோர் மற்றும் கடும் காயங்களுக்கு உள்ளானோரின் பாதிப்புகள் குறித்து சிந்திக்க வேண்டியது இத்தருணத்தில் அவசியம். இவ்வாறானவர்கள் உண்மையிலேயே மிகுந்த உளப்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். அவர்களது துயரம் உண்மையிலேயே தணிக்க முடியாதது.

அவர்களுக்கு இன்றைய வேளையில் அவசியமானது மன ஆற்றுப்படுத்தல் ஆகும். பெரும் துயரில் இருந்து ஓரளவேனும் அவர்களை மீட்டெடுப்பதற்கான மன ஆற்றுப்படுத்தல் பணிகளை முன்னெடுப்பது அவசியம். அதேசமயம் எதிர்கால வாழ்வுக்கான நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதும் அவசியமாகின்றது.

இல்லையேல் இழப்புகளின் துயரம் எக்காலமும் அவர்களை வாட்டிக் கொண்டேயிருக்கும். அவர்கள் தங்களையறியாமலேயே உளப் பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம்.

இழப்பீடுகள் வழங்குவதால் மாத்திரம் அவர்களது மனவேதனைக்கு முடிவு கட்டி விட முடியாது. பெரும் அதிர்ச்சியினாலும், அன்பானவர்களைப் பிரிந்து விட்டதாலும் ஏற்பட்டிருக்கும் மனப்பாதிப்பிலிருந்து மீள்வதற்கான உளநல ஆற்றுப்படுத்தல்களே இன்று அவசியத் தேவையாகும்.

இவ்விடயத்தில் அரசாங்க நிறுவனங்கள் மாத்திரமன்றி மனிதநேய தொண்டர் அமைப்புகளும் விசேட கவனம் செலுத்த வேண்டும். சயம ரீதியான நிறுவனங்களும் இவ்விடயத்தில் கரிசனை செலுத்த முடியும்.

இது ஒருபுறமிருக்க, சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டுள்ள அடிப்படைவாதக் கும்பலைத் தேடும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி அடிப்படைவாத நாசகார சக்திகளின் வலைப் பின்னலை எமது உளவுப் பிரிவினர் முற்றாகவே கண்டறிந்து விட்டார்களென்றே தகவல்கள் கூறுகின்றன.

பயங்கரவாதிகளில் கூடுதலானோர் அகப்பட்டு விட்டதாகவும், மிகச் சொற்பமானோரையே கைது செய்ய வேண்டியிருப்பதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளும் பொழுதும் தேடுதல்கள், சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சந்தேகத்துக்கிடமான பலர் கைது செய்யப்படுகின்றார்கள். ஆயுதங்கள் பெருமளவில் மீட்கப்படுகின்றன.

ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்றுள்ள குண்டுவெடிப்புகள் சாதாரண சம்பவங்கள் அல்ல. சர்வதேச பயங்கரவாத இயக்கமொன்று எமது நாட்டிலும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அப்பாவிக் குழந்தைகளினதும், பெரியவர்களினதும் உயிர்களைப் பறித்து விட்ட அப்பயங்கரவாதிகள், தங்களது குரூரத்தனமான செயலுக்காக பெருமிதம் கொண்டதை ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் வீடியோ காட்சி தெளிவுபடுத்தியது.

அவர்கள் இவ்வாறான மனித அழிவுச் செயலுக்கு மேலும் முற்படாமல் இருக்க மாட்டார்கள் என்பதை எம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது. எமது அப்பாவி மக்களின் உயிர்கள் இக்கும்பலால் இனிமேலும் பறிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

எனவேதான் நாடெங்கும் தீவிரமான தேடுதல்களும் சோதனைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களும் இந்நடவடிக்கைகளுக்கு பூரணமாக ஒத்துழைக்கின்றனர். பயங்கரவாதம் எமது மண்ணில் இருந்து பூண்டோடு அழிக்கப்படும் வரை இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை தொடர வேண்டுமென்பதே மக்களின் எண்ணமாகும்.

இலங்கையர்களான நாம் அனைவரும் முதலில் எமது தாய்நாட்டையும், எங்களது பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எமது தேசத்தில் கால் பதித்த பயங்கரவாதத்தை துடைத்தெறிவதற்கு அனைவரும் பூரண ஆதரவளிப்பதே இன்றைய வேளையில் அவசியம்.


Add new comment

Or log in with...