Friday, March 29, 2024
Home » போருக்கு பின் காசாவுக்கான இஸ்ரேலின் திட்டம் வெளியீடு: தொடர்ந்தும் தாக்குதல்

போருக்கு பின் காசாவுக்கான இஸ்ரேலின் திட்டம் வெளியீடு: தொடர்ந்தும் தாக்குதல்

பலஸ்தீனர்களை ஏற்க சாட், ருவாண்டாவுடன் பேச்சு

by mahesh
January 6, 2024 8:46 am 0 comment

போருக்குப் பின்னராக காசா நிர்வாகம் தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பூர்வாங்கத் திட்டம் ஒன்றை முதல் முறை வெளியிட்டுள்ளது. போர் நடவடிக்கை நிறைவடைந்த பின் அந்தப் பகுதியில் இஸ்ரேலோ அல்லது ஹமாஸோ ஆட்சி புரியாது என்று அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேல் பயணித்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்தத் திட்ட வெளியிடப்பட்டது. காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த பின் பிளிங்கன் நான்காவது முறையாகவே மத்திய கிழக்கு விரைந்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம் அதிகரித்திருக்கும் சூழலில் போருக்கு பின்னரான காசாவின் எதிர்காலம் குறித்து கேள்விகளும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.

காசாவில் ஆயிரக்கணக்காக மக்கள் வெளியேற்றப்பட்டு பஞ்சம் மற்றும் நோய் பரவல்களுக்கு முகம்கொடுத்து வருவதோடு மானிதாபிமான நெருக்கடி ஒன்று பற்றி ஐ.நா எச்சரித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் மூலம் வெளியிடப்பட்ட போருக்குப் பின்னரான திட்டம் இஸ்ரேலின் போர் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு முன் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் “காசாவில் ஹமாஸ் ஆட்சி புரியாது, (மற்றும்) காசா பொதுமக்களை இஸ்ரேல் ஆளாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“காசா குடிமக்கள் பலஸ்தீனர்களாவர், அதனால் விரோத செயற்பாடுகள் அல்லது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பலஸ்தீன கட்டமைப்பு ஒன்றே அங்கு பொறுப்பாக இருக்கும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் திட்டத்தின்படி காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதோடு இஸ்ரேலிய குண்டு மழையால் பெரும் அழிவை சந்தித்திருக்கும் அந்தப் பகுதியின் மீள் கட்டுமானத்தில் பன்னாட்டு தரப்பு பொறுப்பேற்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் திட்டம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து போர் புரிந்து வருவதோடு ஒக்டோபர் 7 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட பணயக்கைதிகள் பாதுகாப்பாக திரும்புவது மற்றும் ஹமாஸ் இராணுவ மற்றும் ஆட்சி திறன் ஒழிக்கப்படும் வரை போர் நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் பலஸ்தீன கட்டமைப்புகள் காசாவில் ஆட்சியை ஆரம்பிக்கும்போது புதிய கட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டதை அடுத்தே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் வெடித்தது. இதன்போது கடத்தப்பட்ட சுமார் 250 பணயக்கைதிகளில் தொடர்ந்து 132 பணயக்கைதிகள் ஹமாஸ் பிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

3 மாதங்கள் தொடரும் தாக்குதல்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவெங்கும் நூறுக்கும் அதிகமான இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று (05) குறிப்பிட்டது. ஹமாஸ் இராணுவத் தளங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியபோதும் பெரும்பாலான குடியிருப்பு கட்டடங்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

கான் யூனிஸில் நேற்று காலை வரை இடம்பெற்ற தாக்குதல்களில் 32 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு ரபாவில் மேலும் ஐவர் பலியாகி இருப்பதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய காசாவில் அல் சவைதா நகரில் உள்ள குடியிருப்பு வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு வான் தாக்குதல்களை நடத்திய நிலையில் அவசர மற்றும் மீட்புக் குழுக்கள் நேற்று அங்கிருந்து இரு பலஸ்தீனர்களின் சடலங்களை மீட்டதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்து நிறுவனமான வபா கூறியது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் அல் மாவாசி பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களை அடுத்து நாசர் மருத்துவ வளாகத்திற்கு மூன்று சடலங்கள் வந்திருப்பதோடு காயமடைந்த ஐவர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய பீரங்கிகள் கிழக்கு பகுதியின் அல் புரைஜ் அகதி முகாம் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய அதே நேரம் மத்திய காசாவில் உள்ள மகாசி அகதி முகாமில் இருந்து காயமடைந்த பலரையும் அம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன.

மத்திய காசாவில் டெயிர் அல் பலா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களை நடத்திய அதே நேரம் அந்த நகரின் கடற்கரை பகுதி மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக வபா கூறியது.

இதில் இஸ்ரேலால் பாதுகாப்பான இடம் என்று அறிவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா மீது நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஒட்டு மொத்த குடும்பமே கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாக அது கூறியது.

முன்னதாக கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைக்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் குறைந்தது 125 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 318 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு கூறியது.

காசா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலுக்கு மூன்று மாதங்கள் எட்டும் நிலையில் உயிரிழப்பு 22,430 ஆக அதிகரித்துள்ளது. இதில் 9,730 சிறுவர்கள் மற்றும் 6,830 பெண்கள் அடங்குகின்றனர். தவிர 7,000க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயிருப்பதோடு 57,600க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.

மக்களின் வெளியேற்றம் தணியாது நீடித்து வரும் நிலையில் காசாவின் தெற்கு எல்லை நகரான ரபாவை நோக்கி அளவுக்கு அதிகமான மக்களை ஏற்றிய வாகனங்கள் மற்றும் உடைமைகளை சுமந்த தள்ளு வண்டிகளுடன் மக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“நாம் ஜபலியா முகாமில் இருந்து மானுக்கு (கான் யூனிஸ்) தப்பிச் சென்றோம், இப்போது நாம் மானில் இருந்து ரபாவுக்கு தப்பி வந்துள்ளோம்” என்று தனது பெயரை குறிப்பிட மறுத்த பெண் ஒருவர் கூறினார். “அவர்கள் எம் மீது சூடு நடத்துகிறார்கள். தண்ணீர், மின்சாரம் மற்றும் உணவு எதுவும் இல்லை” என்றும் அவர் கூறினார்.

பலஸ்தீனர்களை காசாவில் இருந்து வெளியேறும்படி கூறிய இஸ்ரேலின் இரு அமைச்சர்களின் கருத்து வேதனை அளிப்பதாக ஐ.நா மனிதாபிமானத் தலைவர் வோல்கர் டுர்க் தெரிவித்துள்ளார். போருக்குப் பின்னர் இஸ்ரேலிய குடியேறிகள் காசாவுக்கு திரும்ப வேண்டும் என்று இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவர் கூறியிருந்தார். இதே போன்ற ஒரு கருத்தை தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச் கூறியிருந்தார்.

எனினும் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டிருப்பும் போருக்குப் பின்னரான திட்டத்தில், காசாவுக்குள் செயற்பட இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகக் கூறும் அதேநேரம் காசாவில் போரின் இலக்குகள் அடைந்த பின்னர் அங்கு எந்த இஸ்ரேலிய பொதுமகனும் நிலைகொள்ள முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் காசாவில் உள்ள பலஸ்தீனர்களை ஏற்கும்படி ருவாண்டா மற்றும் சாட் நாடுகளுடன் இஸ்ரேலிய அதிகாரிகள் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இஸ்ரேலிய தினசரி பத்திரிகையான ‘சிமான் யிஸ்ராயேல்’ நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. பல நாடுகளும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த நிலையில் இது தொடர்பில் இந்த இரு நாடுகளும் அடிப்படை உடன்பாடு ஒன்றுக்கு வந்திருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் பத்திரிகை கடந்த புதனன்று வெளியிட்ட செய்தியில், கொங்கோ நாடு ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களை ஏற்க முன்வந்ததாக கூறியபோதும் அது கொங்கோ ஜயநாயக குடியரசா அல்லது கொங்கோ குடியரசா என்பதை உறுதி செய்யவில்லை.

இஸ்ரேலிய உளவுச் சேவையான மொசாட் மற்றும் வெளிவிவகார அமைச்சு இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT