அல் - முஸ்தபா பல்கலைக்கழக பாடநெறிகள் உயர் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்படவில்லை | தினகரன்

அல் - முஸ்தபா பல்கலைக்கழக பாடநெறிகள் உயர் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்படவில்லை

மாணவர்களிடம் பெற்ற நிதியை மீள வழங்க வேண்டும்

இலங்கைக்கான ஈரான் தூதரகம் அல் - முஸ்தபா பல்கலைக்கழகத்தின் ஊடாக பதுளை மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு கற்பித்துவந்த பட்டபடிப்பின் பாடநெறிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவாலும், உயர்கல்வி அமைச்சாலும் அங்கீகரிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டு ள்ளது.அத்துடன் இந்தப் பட்டத்தைப் பெற்று இலங்கையில் எவ்வித அரச வேலைவாய்ப்பையும் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அரச வேலைவாய்ப்பு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தால் பதுளை மாவட்டத்தில் கற்பிக்கப்பட்டுவரும் இந்த பட்டப்படிப்பு தொடர்பில் பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு மற்றும் அரசாங்க வேலைவாய்ப்பு அலுவல்கள் திணைகளத்திடம் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் உத்தியோக பூர்வமாக தகவல்களை பெற்றுக்கொண்டபோது இந்த விடயங்கள் எழுத்து மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதுகுறித்து விளக்கமளித்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்,

அல் - முஸ்தபா பல்கலைக்கழகத்தால் பதுளை மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டுவரும் பட்டபடிப்பின் பாடநெறிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தவில்லையென்பதை இன்று (நேற்று) எழுத்து மூலம் ஊர்ஜிதப்படுத்த முடிந்தது. அந்த தகவலுடன் உயர்கல்வி அமைச்சுக்குச் சென்று அல்- முஸ்தா பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொண்டேன்.

இவ்வாறான பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் வழங்கவில்லையென உயர்கல்வி அமைச்சிலும் கூறப்பட்டது. அதேபோன்று இப்பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் மாணவர்கள் இலங்கையில் அரச தொழிலில் ஈடுபட முடியுமா என அரசாங்க வேலைவாய்ப்பு அலுவலகத்திடம் வினவிய போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு பட்டப்படிப்பையும் வைத்து அரச வேலைவாய்ப்பை பெற முடியாது என்று எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, மலையக மாணவர்கள் முற்றாக இந்த விடயத்தில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இலவசமாக பாடநெறி கற்பிக்கப்படுவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்த போதிலும் பின்னர் ஒருவருடத்திற்கு 12ஆயிரம் ரூபா உட்பட சில கட்டணங்கள் அறவிடப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூளைச் சலவையும் செய்யப்பட்டுள்ளனர்.

அல்-முஸ்தா பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாக உள்ள போதிலும், இலங்கையின் பாடத்திட்டத்திற்கு அமைவாக அவர்கள் பட்டப்படிப்பை கற்பிக்க முடியும். இலங்கையின் பாடத்திட்டத்திலில்லாத ஒரு பாடநெறியை பட்டப்படிப்புக்கு உள்வாங்க வேண்டுமென்றால் அதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி அவசியமாகும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத பட்டத்தை வைத்து எங்கே பணிபுரிவது?.

ஈரானிய அரசியல் வரலாறு, இஸ்லாம் மதக் கல்வி, அவர்களின் இஸ்லாமிய அரசியல் எமக்கு எதற்கு? மாணவர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனைத்து நிதிகளையும், இதற்கு பொறுப்புடையவராகவுள்ள அரவிந்தகுமார் எம்.பியும், அல்-முஸ்தா பல்கலைகழகமும் மீள வழங்க வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...