சிசு மரணங்களை மேலும் குறைப்பதில் கூடுதல் கரிசனை | தினகரன்

சிசு மரணங்களை மேலும் குறைப்பதில் கூடுதல் கரிசனை

உலகில் தாய் சேய் ஆரோக்கிய சேவை மிகச் சிறப்பாக காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இதன் பயனாக இந்நாட்டில் தாய் சேய் மரணம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. அதாவது வருடமொன்றுக்கு 335,000பிரசவங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் ஒரு இலட்சம் குழந்தைகள் பிறக்கும் போது 33.7வீதமான தாய்மார் தான் பிரசவ காலத்தில் மரணமடைகின்றனர். அதேநேரம் ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் போது 13குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் வருடமொன்றுக்கு சுமார் 1300சிசுக்கள் பிரசவத்திற்கு முன்பே கருப்பையில் இறந்த நிலையில் பிறப்பதையும் மறந்து விடலாகாது. இவ்வகை உயிரிழப்புக்களை சர்வதேச மட்டத்திலும் பிராந்தியத்திலும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் போது நான்கு சிசுக்கள் தான் இந்நாட்டில் இவ்வாறு பிறக்கின்றன. இது ஏனைய நாடுகளை விட மிகவும் சிறந்த நிலைமையாகும்.  

என்றாலும் தாய் சேய் மரணம் மற்றும் பிரசவத்திற்கு முன்பே கருப்பையில் இறந்து பிறத்தல் என்பவற்றை மேலும் குறைப்பது குறித்து பிள்ளைப் பிறப்பை அண்மிய காலம் தொடர்பான இலங்கை மருத்துவ நிபுணர்களின் சங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளது.  

கருத்தரிப்பு என்பது ஒவ்வொரு தம்பதியினரதும் வாழ்வில் மிக அற்புதமான வாய்ப்பாகும். இந்த அற்புத வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் பெண்களில் சிலருக்கு அவர்கள் எதிர்பாராமலேயே கருப்ப காலம் முழுமையடைவதற்குள் சிசுக்கள் உயிரிழக்கின்றன. ஆனால் இவற்றை எவ்வாறு குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பன குறித்து அண்மைக்காலமாக அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. 

ஆனால் கர்ப்பிணி பெண்களதும், அவர்களது கருப்பையில் வளரும் சிசுக்களதும் ஆரோக்கியம் தொடர்பில் செலுத்தப்பட்டுவரும் கவனம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் பிரசவத்திற்கு முன்பே இடம்பெறும் சிசு மரணங்களை மேலும் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை மருத்துவ நிபுணர்கள் மத்தியில் காணப்படுகின்றது.  

ஏனெனில் பிரசவத்திற்கு முன்னர் கருப்பையில் இடம்பெறும் சிசு மரணங்கள் இரு விதமாக ஏற்படுகின்றன. பொதுவாக ஒரு சிசு கருத்தரித்தது முதல் 40வாரங்களில் கர்ப்ப கால வாழ்வை பூர்த்தி செய்து அதாவது ஒன்பது மாதங்களில் குழந்தையாகப் பிறக்கின்றது. என்றாலும் சில கருக்கள் கருத்தரித்தது முதல் 28வாரங்களுக்கு முன்பே அதாவது ஏழு மாதங்களுக்கு முன்னரான முன்முதிர்வு காலத்திலேயே இயல்பாகக் கலைந்து விடுகிறது.

சில சிசுக்கள் 28வாரங்கள் கடந்த பின்னர் பிரசவத்திற்கு முன்னர் கருப்பையில் உயிரிழந்த நிலையில் பிறக்கின்றன.

இவ்வாறான மரணங்களுக்கு சுமார் 1300சிசுக்கள் வருடாந்தம் முகம் கொடுக்கின்றன. ஆனால் எந்தவொரு சிசுவும் உயிரிழப்பதை எந்தத் தாயுமே விரும்புவதில்லை. இருந்தும் சிசுக்கள் உயிரிழக்கவே செய்கின்றன. 

ஆகவே குழந்தைகள் பிரசவத்திற்கு முன்பே உயிரிழந்து பிறப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும், அதனைக் குறைத்துக் கொள்ளவுமென ஒவ்வொரு தாய்மாரும் தம் போஷாக்கு நிலைமை, தொற்றா நோய்கள் மற்றும் கருப்பையில் சிசுவின் வளர்ச்சி என்பன குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அப்போது கருப்பையில் குழந்தை இறந்து பிறப்பதைத் தவிர்த்தோ குறைத்தோ கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தோடு குழந்தைகளும் ஆரோக்கியம் நிறைந்த வளமானவர்களாகக் காணப்படுவர். 


Add new comment

Or log in with...