உடல் பருமன் ஏற்படுத்தும் உபாதைகள் | தினகரன்

உடல் பருமன் ஏற்படுத்தும் உபாதைகள்

உலகில் நீரிழிவு, கொலஸ்ரோல் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட தொற்றா நோய்கள் குறித்து தான் அண்மைக்காலம் வரையும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. அவை உயிராபத்து மிக்கவையாக விளங்குவதும் இதற்கான காரணமாகும். ஆனால் உடல் பருமன் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வந்தன. அந்த ஆராய்ச்சிகளின் ஊடாக உடன் பருமனும் தொற்றா நோய்களுக்கு அதிகம் பங்களிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  

அந்த வகையில் உலக சுகாதார ஸ்தாபனம், ‘உலகில் மரணங்களுக்கு துணைபுரியும் காரணிகளில் உடல் பருமன்ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளதென அண்மையில் அறிவித்தது. அதேநேரம் வருடமொன்றுக்கு 2.8மில்லியன் பேரின் உயிரிழப்புக்கு உடல் பருமன் துணைபுரிந்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இந்த ஸதாபனம், உடல் பருமன் காரணமாக நீரிழிவுக்கு உள்ளாகின்றவர்களில் 44வீதத்தினரும், குருதியூட்ட குறைபாட்டு பக்கவாதத்திற்கு உள்ளாகின்றவர்களில் 23வீதத்தினரும் மரணமடைகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இருந்தும் கூட உலகில் 1.4பில்லியன் மக்கள் உடல் பருமனுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 300மில்லியன் பேர் ஆண்கள் என்றும், 300மில்லியன் பேர் பெண்கள் என்றும், 40மில்லியன் பேர் ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் என்றும் இந்த ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.  

என்றாலும் இலங்கையில் உடல் பருமனுக்கு உள்ளாகியுள்ளவர்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்நாட்டில் பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இது இந்நாட்டின் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று அரசாங்க சுகாதாரத் துறை அதிகாரியொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.  

இதேவேளை ஐரோப்பிய நாடுகளிலும் குறிப்பாக போலந்து நாட்டில் உடல் பருமன் என்பது ஒரு நோய் நிலை என்று 2016ஜுன் மாதம் முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் பிரேரணையொன்றைத் தயாரித்த வருகின்றன. என்றாலும் இவ்விழிப்புணர்வு எல்லாப் பிராந்தியங்களிலும் ஏற்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் பரவலாக நிலவுகின்றது.  

ஏனெனில் உடல் பருமன் என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகின்றது? அது முக்கிய சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாக மாற எவை துணைபுரிகின்றன? அதனை எவ்வாறு தவிர்த்துக் கொள்ள முடியும்? என்பன தொடர்பான அறிவு தெளிவைப் பெற்றிராதவர்களாகவே பெரும்பாலானவர்கள் உள்ளனர்.  

உடல் பருமன் ஏற்படப் பல காரணிகள் துணைபுரிகின்றன. அவற்றில் தவறான உணவுப் பழக்கம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமான பதார்த்தங்களில் கொழுப்பும் ஒன்றாகும். இதன் பெரும்பகுதியை அன்றாட உணவின் மூலம் உடல் பெற்றுக் கொள்கின்றது. இவ்வாறு கிடைக்கப்பெறும் கொழுப்பில் மேலதிகமானவை உடலில் சில பகுதிகளில் படிகிறது. குறிப்பாக ஆண்களின் மார்பு மற்றும் வயிற்று பகுதியிலும் பெண்களின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியிலும் இக்கொழுப்பு பெரும்பாலும் படியும். அதுவே உடல் பருமனை ஏற்படுத்துகின்றது.  

இக்கொழுப்பு உடலில் படியும் விதத்திற்கு ஏற்பவே உடல் பருமன் ஏற்படுகின்றது. அதற்கேற்பவே உருவ அமைப்பும் வேறுபடுகின்றது. இதன் வெளிப்பாடாகவே சில ஆண்களுக்கு மார்பு பகுதி பெருத்தும் வயிறு பெருத்தும், சில பெண்களுக்கு இடுப்பு பகுதியும் தொடைப் பகுதிகளும் பெருத்தும் காணப்படுகின்றது.  

அதாவது ஆண்களின் குடல்களுக்கு இடையிலான கொழுப்பு படிவு அதிகரிக்கும் போது தான் வயிறு பருமனடைவதோடு முன்னோக்கி வளைந்து செல்லவும் வழி செய்கின்றது. இது ஆரோக்கியத்திற்கு உகப்பற்ற நிலை என மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  

அதேநேரம் உடல் தோலின் கீழ்ப் பகுதியிலும் கொழுப்பு காணப்படுகின்றது. இது உடலின் வெப்பத்தைப் பேணி உடலுக்கு பாதுகாப்பை அளிக்கின்றது. மேலும் கொழுப்பில் Visceral Fat என்றொரு வகை உள்ளது. இது வயிற்றுக்கும் தோலுக்கும் இடைப்பட்ட கொழுப்பைக் குறிக்கும். இது தோலுக்கு மேற்பகுதியில் காணப்படும் கொழுப்பைக் குறிக்காது. 

எனினும் சிறுவர்களதும் கர்ப்பிணிகளதும், பெரியவர்களதும் குருதியில் கொழுப்பு அதிகரிப்பது அச்சுறுத்தல் மிக்கதாகும். இதன் வெளிப்பாடாக ஏற்படும் உடல் பருமன் காரணமாக உயர் குருதியழுத்தம், கொலஸ்ரோல் என்பன அதிகரிக்கும், பித்தப்பையில் கல் ஏற்படும். அதனால்Visceral Fat ஐக் குறைக்க வேண்டும். குறிப்பாக குடல்களுக்கிடையில் காணப்படும் இக் கொழுப்பை குறைத்தால் கொலஸ்ரோல், இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் என்பன பெரும்பாலும் குறைவடையும். அத்தோடு வயிறு முன்னோக்கி வருவதும் தவிர்க்கப்படும். சிலர் இரவில் தூக்கத்தின் போது குரட்டை விடுகின்றனர். இதற்கு கொலஸ்ரோல் அதிகரிப்பே முக்கிய காரணமாகும். அதாவது சுவாச வழியில் அடைப்பு ஏற்படுவதன் விளைவாக நுரையீரலுக்கு ஒட்சிசன் சீராகக் கிடைக்காது. அதன் விளைவாகவே குரட்டை விடுகின்றனர். 

அதேநேரம் உடல் பருமனுக்கு உள்ளானவர்கள் இரவில் அடிக்கடி தூக்கம் விழிப்பவர். இதற்கு இரத்தத்திற்கு போதிய ஒட்சிசன் கிடைக்காமையே காரணமாகும். அதனால் தான் இப்படியானவர்கள் பகல் வேளையில் சாப்பிட்டதும் தூங்குகின்றனர். சிலர் வைபவங்களிலும் கூட தூங்குகின்றனர். இவர்களைக் கேலி செய்யக் கூடாது.  

மேலும் தவறான உணவுப் பழக்கவழக்கத்திற்கு மேலதிகமாக உடல் பருமன் ஏற்பட சில நோய்களும் காரணமாக அமைகின்றன. குறிப்பாக பிறப்பிலேயே தைரொய்ட் பிரச்சினைக்கு முகம் கொடுத்திருப்பவர்களுக்கும், ஹோர்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகின்றவர்களுக்கும் உடல் பருமன் ஏற்படும்.  

அதேநேரம் உடல் பருமன் தொடர்பாக இடம்பெற்றுவரும் ஆய்வுகளில் விரைவாக சாப்பிடுவர்களுக்கும், போதிய தூக்கமின்மையைக் கொண்டுள்ளவர்களுக்கும் உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமெனக் கண்டறியப்பட்டுள்ளது. இது இலங்கையிலும் தென்னாசியாவிலும் பெரிதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் நேரம் எடுத்து நிதானமாக மென்று சாப்பிடுவதிலும் போதிய நேரம் தூங்குவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

மது அருந்துபவர்களுக்கு குறிப்பாக பியர் குடிப்பவர்களுக்கு வயிறு பெருக்கும். அதில் சீனி அதிகமுள்ளதால் உடல் பருமன் ஏற்படும்.  

இரைப்பையில் காணப்படும் சில பக்றீரியாக்களும் உடல் பருமனை ஏற்படுத்தக் கூடியன. நாம் உண்பதில் பல இரசாயன ரீதியில் மாற்றப்பட்டவை. அவற்றில் கோழி இறைச்சி முக்கியமானது. ஆனால் அது இன்று பிரதான உணவாக உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு இரசாயன ரீதியிலான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட உணவுகளே வழங்கப்படுகின்றன. அதனால் அவற்றில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், வளர்ச்சியைத் தூண்டும் ஹோர்மோன் என்பன காணப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து உண்ணும் போது வயிற்றிலுள்ள பக்றீரியாக்கள் அதற்கு இசைவாக்கமடைவதோடு உடல் பருமன் ஏற்படவும் துணை புரியும்.  

சில விளம்பரங்களில் குறிப்பிடுவது போன்று ஒரு வாரத்திலோ இரு வாரத்திலோ உடல் பருமனைக் குறைக்க முடியாது. அது வெறும் மாயை என்று பொது சுகாதார மருத்துவ நிபுணரொருவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.  

உடல் பருமனைத் தவிர்ப்பதற்கு பிறந்தது முதல் 12வயது வரையும் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் இவ்வயது மட்டத்தினரை இலக்கு வைத்தே உணவு உற்பத்தி கம்பனிகள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. அதனால் இவை குறித்து விஷேட கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியமானது. இப்படியான நிலைமை வளர்ச்சி அடைந்த நாடுகளில் இல்லை எனவும் அந்த வைத்திய நிபுணர் தெரிவித்திருந்தார்.  

உடல் பருமனைத் தவிர்க்க கலோரியைக் குறைவாகவும் கொழுப்பை குறைவாகவும் சாப்பிட வேண்டும். உடல் பருமனுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கடும் கறுப்பு நிறம் காணப்படும். இவர்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் மிக அதிகமாகும். இப்படியானவர்கள் முன்கூட்டியே இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைப் பரீட்சித்துக் கொள்ள வேண்டும்.  

அதேநேரம் வேக நடைப்பயிற்சியில் அதிகம் ஈடுபட வேண்டும். படிக்கட்டுக்களில் ஏறி இறங்க பாவிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை தவிர்த்து வீட்டு தொலைபேசியைப் பாவிக்க வேண்டும். அதன் மூலம் சிறிது தூரமாவது நடக்க முடியும். தொலைக்காட்சிகளுக்கு ரிமோரட் பாவிப்பதைக் முடிந்தளவு குறைக்க வேண்டும். தொலைக்காட்சி பார்த்தப்படி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தொலைக்காட்சியில் கவனம் செல்வதால் சாப்பிடும் உணவின் அளவை கவனிக்க முடியாது போகும்.  

ஆகவே உணவு உள்ளிட்ட நடத்தைக் கோலங்களை உரிய ஒழுங்கில் பேணி உயரத்திற்கு ஏற்ப உடல் திணிவுச் சுட்டிப்படி உடல் நிறையைப் பேணிக் கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக உடல் பருமன் உள்ளிட்ட பலவித நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வைப் பேணிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

முஹம்மத் மர்லின்

 


Add new comment

Or log in with...