கல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் | தினகரன்

கல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்

கல்முனை நகரில் 500 வருடங்கள் மிகப் பழைமை வாய்ந்த கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 08 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.  தொடர்ந்து பதிமூன்று தினங்கள் நடைபெறும் ஆலய உற்சவத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வேட்டைத் திருவிழா நடைபெறவுள்ளது. 18 ஆம் திகதி திங்கட்கிழமை முத்துச்சப்பர ஊர்வலம் கல்முனை நகர் ஊடாக வலம் வரவுள்ளது. இதில் கல்முனை வாழ் தமிழ் மக்களின் கலை, பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 19ஆம் திகதி தீர்த்தோற்சவமும், 20ஆம் திகதி வைரவர் பூசையும் இடம்பெறவுள்ளது.இவ் ஆலயத்தின் வரலாறு மிகத்தொன்மை வாய்ந்ததாகும்.

கல்முனை நகரில் புதுப்பொலிவுடன் கம்பீரமாய் காட்சியளிக்கும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் இங்குள்ள தமிழ் மக்களின் இருப்பை, பழமையை பறைசாற்றும் ஆலயமாக இருந்து வருகின்றது. ஒரு இனத்தின் இருப்பை அதன் மொழி, கலை,கலாசார, பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களே எடுத்துக்காட்டுகின்றன. அதில் முக்கியமான இடமாக வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவ் வழிபாட்டுத்தலங்களை வைத்துத்தான் எம் முன்னோர்கள் பற்றியும் அவர்கள் வாழ்வியல் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

இவ் ஆலயத்தின் தோற்றம், வளர்ச்சியும் அற்புதமானதாகும். 

இவ் ஆலயம் சுமார் 500 வருடங்கள் பழைமைவாய்ந்த ஆலயம் என காசிநாதன் தனது ஏடுகளில் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய 500 ஆண்டுகளிற்கு முன் தற்போது பிரதான வீதியாக விளங்கும் அன்று நீர் வளம் பொருந்திய செழிப்பான நிலப்பகுதியை உள்ளடக்கியிருந்தமையால் தமிழ் மக்கள் இப்பகுதியில் வதிவிடங்களை அமைத்து பள்ளம் பார்த்து பயிர்செய்து மழைநீரை தேக்கிவைத்து பாசன வசதிக்காய் குளங்களை அமைத்து அருகாமையில் காடுகளை அழித்தும் வயல்களாக்கி வேளாண்மையில் ஈடுபட்டு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார்கள்.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்து வந்த பகுதியின் மத்தியில் குளக்கரையின் ஓரமாய் மணற்திட்டியும் மறுபுறம் ஆழமான பள்ளமும் அது நிறைய தாமரை மலர்களையும் கொண்ட தடாகம் போல் காட்சியளித்தது. வேளாண்மை செய்வதற்காக வயலுக்குச் செல்பவர்கள் இதன் கரையோரமாகவே செல்வர். ஒரு நாள் இப்பாதையோரமாக கருங்கல் ஒன்று தென்பட்டது சிவனடியான் என்பவர் அக்கல்லினை கடந்து செல்லும் போது அவரின் வலதுகால் பெருவிரல் தாக்குண்டு இரத்தம் சொட்டியது. இதனால் கோபம் கொண்ட அவர் கல்லினைத்தூக்கி அருகாமையில் இருந்த ஆழமான பள்ளத்தினுள் எறிந்துவிட்டுச் சென்றார். மறுநாள் அக்கல் பாதையில் தென்பட்டது இதனால் ஆத்திரம் கொண்ட அவர் மீண்டும் தூக்கியெறிந்து விட்டுச் சென்றார். இப்படியாக பல நாட்கள் தூக்கி வீசப்படுவதும் கல் மீண்டும் தென்படுவதுமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. இது இப்படியிருக்க ஓர் இரவு சிவனடியானின் கனவில் ஓர் உருவம் தோன்றி அடியானே உன்னால் வீசப்படும் கல் சாதாரண கல் அல்ல எனக்கூறியதும் அக்கல் விநாயகப் பெருமானின் முகச்சாயலுடன் தாமரைத் தடாகத்தின் மேலால் மிதந்து வந்து தரையிலே அமர்ந்ததும் அவ்வுருவம் மறைந்து விட்டது. மறுநாள் காலையில் கனவினில் கண்ட விநாயகப் பெருமானின் முகத்தினை ஒத்த கல் இருப்பதை கண்ட அவர் அயலில் உள்ளவர்களை அழைத்து வந்து தான் இரவு கண்ட கனவினை கூறியதும் எல்லோரும் சேர்ந்து அக்கல்லினை தூக்கி அருகிலிருந்த மணல்மேட்டில் வைத்து பச்சை இலைகுழைகளினால் பந்தலிட்டு தரையில் கண்டெடுக்கப்பட்டமையால் தரவைப் பிள்ளையார் எனப்பெயர் சூட்டியும் வணங்கி வந்தனர். இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த இந்துக்களின் வழிபாட்டிற்காக முதன்முதல் தோன்றிய வணக்கஸ்தலமாகையால் அயல் கிராமங்களில் வசித்து வந்த மக்கள் தினமும் கால் நடையாகவும் மாட்டு வண்டில்கள் மூலமாகவும் வந்து வணங்கிச் செல்வார்கள்.

தரவைப்பிள்ளையார் மீது நம்பிக்கைகொண்டு அருள் பெற்ற மக்கள் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்ற அவா ஏற்பட்டமையால் வைரமான மரங்களைக் கொண்டு எம்பெருமானுக்கு கோயில் அமைத்தார்கள். ஓர் சிவராத்திரி தினத்தன்று ஆறுமுகம் என்பவரின் தலைமையில் ஒன்று கூடிய கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1.ஆலயம் உள்ளபகுதி தாழ்நிலம் ஆகையால் மண்விட்டு சீராக்கல்

2.உறுதியான மரங்களைக்கொண்டு ஆலயம் புனரமைக்கப்படல்

3.பூசகர் தெரிவு மற்றும் தினப்பூசைக்கான ஏற்பாடு

4.தீர்த்தக்கிணறு ஒன்றினை அமைத்தல்

இத்தீர்மானங்களை ஏற்றுக்கொண்ட மக்கள் இரவு பகல் பாராது தங்கள் பங்களிப்புக்களைச் செய்தனர். ஆலயப்பகுதி மாட்டு வண்டில்கள் மூலமாகவும் கூடைகளிலும் மண் சுமந்து நிரப்பப்பட்டது. உறுதியான பாலை, முதிரை, இராணை போன்ற மரங்களால் ஆலயம் அமைக்கப்பட்டது. பூசகராக நாகைய்யா என்பவர் நியமிக்கப்பட்டு தினப்பூசையும் இடம்பெற்றது. பின்னர் பெருத்த மரங்களை தோண்டி  தீர்த்தக்கிணறும் அமையப்பெற்றது.    

தீர்மானங்கள் யாவும் தங்குதடையின்றி நிறைவேற்றப்பட்டமையால் ஆலயத்தினை பரிபாலிப்பதற்காக பரிபாலனசபை ஒன்று நிறுவப்பட்டது. இதன் தலைவராக ஆறுமுகம் என்பவரும் காரியதரிசியாக மயித்தாரும் பொருளாளராக வ.சின்னத்தம்பியும் இவர்களுடன் மேலும் ஐந்து உறுப்பினர்களும் மக்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு சபை இயங்கத் தொடங்கியது. இவர்கள் காலத்தில் முதன் முதல் நடைபெற்ற உற்சவம்  'திருவாதிரை' ஆகும். இக்காலப் பகுதியில் தான் தரவையில் கண்டெடுக்கப்பட்டமையாலும் பல சித்திகள் செய்தமையாலும் ' தரவைச்சித்தி விநாயகர் ' எனப்பெயர் சூட்டப்பட்டது.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பிலிருந்து தென்புறமாக அமைந்த பிரதான பாதையின் அருகேதான் ஆலயம் அமையப்பெற்றிருந்தது.

வழிப்போக்கர்கள் வழிபடவும் கதிர்காமம் போன்ற தலங்களுக்கான யாத்திரை செய்வோர் தங்கிச் செல்லும் மையமாகவும் காணப்பட்டது.

மட்டக்களப்பின் மாகாண அதிபராய் இருந்த சேர். கென்றி வோட்ஸ் என்பவர் தென்பகுதிக்கு குதிரை வண்டி மூலம் தனது கடமைகளை மேற்கொள்ளும் போது ஆலயத்தை வழிப்படுவது வழக்கம்.

அன்றைய காலப்பகுதியிலிருந்த பரிபாலனசபைக்கு சட்டபூர்வமான அதிகாரத்தினை மட்டு மாகாண அதிபர் வழங்கி ஆலயத்தின் தென்புறம் தற்போதைய செய்லான் வீதியின் மேற்குப் பக்கம் இருந்த வடிகான் வாயிலிலிருந்து வடக்கு நோக்கி ஏழு சங்கிலிப்பூமியும் ஆலயத்தினை பரிபாலிப்பதற்காக அக்காலத்தில் குடியிருந்த மக்களுக்கு 73 ஏக்கர் விவசாய நிலத்தினையும் சட்டபூர்வமாக வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட நிருவாகத்தினர் கோயில் பூசகரின் வேதனம் கொடுப்பதற்காக 5 ஏக்கரினையும் உதவிப்பூசகருக்கு 1 ஏக்கரினையும் வழங்கினர்.

ஆனால் 1986 காலப் பகுதியில் ஏற்பட்ட தமிழ், முஸ்லிம் இனக்கலவரத்தின் போது 1986.12.13 அன்று ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இன்று புதுப்பொழிவுடன் காட்சித் தரும் கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயமானது தமிழ் மக்களின் வரலாற்று தடயங்களில் ஒன்றாக மிளிர்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத்தின் திருவிழாக் காலங்களில் தினமும் கூட்டுப்பிரார்த்தனை, சமயசொற்பொழிவுகள் ஆகியன நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...