மக்கள் மனதை வென்று பாதுகாப்பை உறுதிசெய்வோம் | தினகரன்

மக்கள் மனதை வென்று பாதுகாப்பை உறுதிசெய்வோம்

பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல இன மக்களும் பல நூற்றாண்டுக்கு மேலாக இணங்கியும், இணைந்தும் வாழ்ந்து உலகுக்கே முன்மாதிரியாக நடந்து கொண்ட வரலாறு காணப்படுகின்றது. அந்தளவுக்கு இனம், மதம், மொழி கடந்து மானுட நேயத்துடன் இணைந்து வாழ்ந்த சமூகமே இன்று ஒருவரையொருவர் சந்தேகத்துடன் நோக்கும் ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது. மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக துவண்டு போன நாட்டை 2009ல் மீட்டெடுத்தோம். ஆனாலும் அந்த யுத்தத்துடன் தொடர்புபட்ட இனத்துக்கு உரிய தீர்வு இன்று வரை கானல் நீராகவே காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்த மாதம் 21ம் திகதி ஞாயிறன்று எமது நாட்டில் இடம்பெற்ற கொடூரமான சம்பவம் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள் மீண்டும் வேதனைக்குள் மூழ்கிப் போயுள்ளனர். நெருக்கமாக வாழ்ந்த சமூகங்கள் பாரிய இடைவெளிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். நகமும் சதையும் போன்று ஒன்றுபட்டு இரண்டரக்கலந்து வாழ்ந்த மக்கள் இன்று தூரமாக்கப்பட்டுள்ளனர். இனங்கள் பிளவுபட்டு நிம்மதி இழந்து காணப்படுகின்றன.

இனங்களுக்கிடையில் காணப்படும் அச்சம் பீதியை போக்கும் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் மீண்டும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். அது இன்றைய நிலையில் இலகுவானதாகக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் மீது ஒரு அபாண்ட பழி சுமத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து முஸ்லிம் சமுதாயம் மீண்டெழ பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலையே காணப்படுகிறது.

பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை அனைத்துத் தரப்புகளாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ளும் தேடுதல் நடவடிக்கைகளின் போது கண்டெடுக்கப்படும் ஆயுதங்களை காண்பித்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பயங்கரவாதிகளாகக் காட்டும் முயற்சி அந்தச் சமூகத்தை பெரும் துயரத்தில் தள்ளி விட்டுள்ளது. முஸ்லிம் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்று ஏனைய பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பல ஆயுதங்களைக் கண்டுபிடிக்கலாம். வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இல்லாத வீடுகள் நாடு முழுவதும் காண முடியாது. இந்த விவகாரத்தை ஒரு இனத்தை இலக்கு வைத்து பழி சுமத்துவதை அவமானப்படுத்துவதை கைவிடுமாறு அவர் பகிரங்கமாகக் கேட்டிருக்கிறார்.

நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான அர்த்தம் கற்பித்தல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. சிறியதொரு நாசகாரக்கும்பலின் அடாத செயல் காரணமாக முழு முஸ்லிம் சமுதாயத்தையும் நிற்கவைத்து விசாரிக்கும் நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளது. தேவையற்ற பதற்றங்களை தவிர்த்து சுமுக நிலைமையை ஏற்படுத்த வேண்டிய தேவை இன்று காணப்படுகின்றது. இந்த விடயத்தை நாம் நிதானமாகக் கையாள வேண்டும். அவசரப்பட்டு முடிவுகளுக்கு வரக் கூடாது.

மக்கள் உணர்ச்சி வசப்பட்டு அநாவசியமான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளே மிகவும் தேவைப்பாடாகக் காணப்படுகின்றது. இனவாதத்தைத்தூண்டும் விதத்தில் எவரும் ஈடுபட இடமளிக்கப்படக் கூடாது. அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை எவராலும் அனுமதிக்க முடியாது. சில இலத்திரனியல் ஊடகங்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊடகங்களும் ஊடகதர்மத்தை மீறாத வகையில் செயற்பட்டுக்கொண்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊடகங்களும் ஊடக தர்மத்தை மீறாத வகையில் செயற்பட வேண்டும்.

பாதுகாப்புத் தரப்பினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது சில ஊடகங்களை தமமோடு அழைத்துச் செல்வதாக கூறப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மக்களின் அச்சத்தை தணிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பு தொடர்பில் தேவையற்ற விதத்தில் எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதே போன்று பாதுகாப்பு விடயத்தில் சமநிலை பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தி வைக்க வேண்டியுள்ளது. சம நிலை பேணப்படாது போனால் பாதுகாப்பு தரப்பு தேசிய பாதுகாப்பை உறுதி செய்யப்படுவதில் நெருக்கடியை உருவாக்கலாம்.

அவசரகாலச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. அது நீண்ட காலத்துக்கு இழுத்துச் செல்லப்படுவதை எவரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் நாட்டில் உறுதியான இயல்பு நிலை உருவாகாதவரை அவசரகாலச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்பதை எம்மால் உணர முடிகிறது. சாதாரண சட்டத்தின் மூலமாக பயங்கரவாதச் செயற்பாடுகள் விடயத்தில் உறுதிமிக்க நடவடிக்கைகளை எடுக்க முடியாது. தேடுதல் நடவடிக்கைகள், விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதன் மூலம் நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

பாதுகாப்பு மிக முக்கியமானதாகக் காணப்படும் அதே சமயம் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தப்பட வேண்டியதும் மிக அவசியமானதாகும். சட்டங்களூடாக நாட்டில் இயல்பு நிலையை உறுதிப்படுத்திவிட முடியாது. மக்களது மனங்களும் வெற்றிகொள்ளப்பட வேண்டும். இனங்களுக்கிடையே காணப்படும் கசப்புணர்வுகள், வேற்றுமை மனப்பான்மைகளை களைவதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதவ்றகுரிய பொது வேலைத்திட்டமொன்றை உடனடியாக முன்னெடுப்பதன் மூலம் கூடிய விரைவில் நாட்டில் அமைதியையம், மக்கள் மத்தியில் இணக்கத்தையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப முடியும். அடுத்து வரக்கூடிய நாட்கள் மகிழ்ச்சியானதாகவும், மக்கள் மனங்கள் வெல்லப்பட்டதாகவும் அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதிலிருத்தி செயற்படுவோம்.


Add new comment

Or log in with...