இறைவனின் விருந்தாளியை நன்மையினால் அலங்கரிப்போம் | தினகரன்

இறைவனின் விருந்தாளியை நன்மையினால் அலங்கரிப்போம்

ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்,  'ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏனைய மாதங்களில் வணக்க வழிபாடுகளில் நற்செயல்களில் சிரத்தை எடுத்துக்கொள்ளாத அளவுக்கு ரமழானில் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். ரமழானில் ஏனைய நாட்களில் சிரத்தை எடுத்துக் கொள்ளாத அளவுக்கு இறுதிப் பத்து நாட்களில் (வணக்க வழிபாடுகளில் மற்றும் நற்செயல்களில்) சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். (ஆதாரம் புகாரி)

புனிதமிகு ரமழான் மாதம் மீண்டும் எங்களைச் சந்தித்திருக்கிறது. அளவற்ற அருளாளன் அர்ரஹ்மானின் விருந்தாளியாக எம்மை நோக்கி வந்துள்ளது. விருந்தாளியை உரிய முறையில் பண்பொழுக்கம் பேணி உபசரித்து வழியனுப்பிவைக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டல் இந்த ஹதீஸில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ரமழான் ஒரு பயிற்சிப் பாசறை. முஸ்லிம்களை வருடத்திற்கு ஒரு முறை சுத்திகரிக்கின்ற மிகச் சிறந்த சாதனமே ரமழான். முஸ்லிம்களின் சிந்தனைகள், அவர்களது எண்ணங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள், ஆசை நிராஷைகள், சுய விருப்பு வெறுப்புக்கள் ரமழானில் நெறிப்படுத்தப்படுகின்றன. இழப்புக்களைச் சந்தித்து தம்மைத் தாமே சுதாகரித்துக் கொண்டு தீனின் மீள் எழுச்சிக்காக வீறு நடைபோட்டுப் பயணிப்பதற்கான எரிபொருளை நிரப்பிக் கொள்வதற்கான எரிபொருள் நிரப்பு நிலையமே ரமழான்.

ரமழானை மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அது பற்றிய சிந்தனைத் தெளிவு மிகவும் அவசியமானதாகும். இவ்வகையில் ரமழான் கால செயற்பாடுகள் தொடர்பில் அண்ணலாரின் நிலைப்பாடு பற்றி ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுவது என்ன?

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏனைய மாதங்களை விட ரமழானில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதாவது நபிகளாரின் ரமழான் மாத நடவடிக்கைகளில் அலாதியான வேறுபாட்டை அவதானிக்க முடியும். நபியவர்கள் ரமழானை வித்தியாசமாகவே நோக்கியுள்ளார்கள்.

ரமழான் எனும் பயிற்சிப் பாசறையின் பயிற்றுவிப்பாளராகிய நபியவர்கள் ஸஹாபாப் பெருமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டுமல்லவா? எனவேதான் அவர்கள் அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். பொதுவாக உலக வழக்கில் மனிதர்கள் அலட்சிய மனப்பான்மையோடு நடந்து கொள்கின்ற விடயங்களில் விழிப்புணர்வூட்டுவதற்கு விஷேட தினங்கள், வாரங்கள் பிரகடனப்படுத்தப்படுகின்றன. இவ்வாறே முஸ்லிம்கள் ஆன்மிக பலமிக்கவர்களாகத் தொடர்ந்தும் வாழ்வதற்காக விஷேட நாட்களையும் மாதங்களையும் அல்லாஹ் பிரகடனப்படுத்தியுள்ளான்.  ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானில் இறை நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பாடுபட்டு உழைத்தார்கள். பர்ழான கடமைகளை ஏவுவதை விட உபரியான கடமைகளை அதிகம் ஏவினார்கள்.

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்,  ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானில் ஸஹாபிகளுக்கு வாஜிபான கடமைகளை ஏவுவதைவிட நின்று வணங்குவதை ஆர்வப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.

ரமழானில் நோன்பு நோற்பது வாஜிபான கடமை என்பதும் ஐவேளைத் தொழுகை வாஜிபான கடமை என்பதும் ஸஹாபிகளுக்கு பரிச்சயமான விடயம். இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனைக் கட்டளையிடவில்லை. ரமழானில் முதன்மைப்படுத்த வேண்டியவை உபரியான கடமைகள் இக்கடமைகள் தொடர்பில் மனிதர்கள் பொடுபோக்காக இருந்து விடுவர். எனவே, இறைத்தூதர் உபரியான நற்செயல்கள் மற்றும் இபாதத்துக்கள் தொடர்பாக ஆர்வமூட்டினார்கள். அல்லாஹுத் தஆலா வாஜிபான கடமைகள் மூலம் தன்னை அடியார்கள் நெருங்குவதைப் போல உபரியான கடமைகள் மூலம் நெருங்குவதையும் பெரிதும் விரும்புகிறான்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹுத் தஆலா கூறுகிறான்;  எனது அடியானை நான் நேசிக்கும் வரை அவன் என்னை உபரியான வணக்கங்கள் மூலம் தொடர்ந்தும் நெருங்கிக் கொண்டிருப்பான்.  (ஆதாரம் புகாரி)

இவ்வகையில் இறை தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானில் நபிலான வணக்க வழிபாடுகளில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். பர்ழான கடமையாகிய நோன்புக்கு அடுத்ததாக இரவு நேர உபரியான தொழுகையில் அண்ணலார் நீண்ட நேரம் நிலைத்திருந்தார்கள். தங்களது பாதங்கள் வீங்கும்  அளவுக்கு நீண்ட நேரம் நின்று தொழுவார்கள். மெய் மறந்து நின்று அல்லாஹ்வுடன் உரையாடுவார்கள். அந்தத் தொழுகை மிகவும் உயிரோட்டமுள்ளதாக இருக்கும். அவர்களிடம் தொழுகையில் மிகவும் சிறந்தது எது?  எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நீண்ட நேரம் நின்று தொழும் தொழுகை சிறந்தது எனப் பதிலளித்தார்கள். (ஆதாரம் முஸ்லிம்)

எமது தொழுகைகளை இந்த ஹதீஸுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். அல்லாஹ்வின் தூதரின் உயர் தரத்தை எம்மால் அடைந்து கொள்ள முடியாது என்பது யதார்த்தமான உண்மையே! ஆனால் அவர்களது இராக்கால வணக்க வழிபாடுகளை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு அவர்கள் அனுபவித்த ஆன்மிகக் களிப்பின் ஒரு சிறு பகுதியையாவது நாம் ஏன் அனுபவிக்க முடியாது?

ரமழானில் ஒரு முஸ்லிம் நிறைவேற்றுகின்ற ஏனைய இபாதத்துகளும் அர்த்தமுள்ளதாகவும் உயிரோட்டமிக்கதாகவும் அமைய வேண்டும். உதாரணமாக திக்ர் என்பது வெறும் உச்சாடனம் என்ற பொருளில் மக்களால் விளங்கப்பட்டுள்ளது. திக்ர்  என்பது நினைவுகூருதல் என்ற கருத்தைத் தொனிக்கிறது. உள்ளத்தோடு எதுவித தொடர்புமில்லாத உச்சரிப்பும் முணுமுணுப்பும் திக்ரல்ல. ரமழானில் புரியப்படும் மாபெரும் திக்ர் திலாவதுல் குர்ஆனாகும்.

நபியவர்கள் ரமழானில் படிமுறைப் போக்கில் நற்செயல்களில் சிரத்தை எடுத்து, இறுதிப் பத்து நாட்களில் வணக்க வழிபாடுகளில் தீவிரம் காட்டுவார்கள். அவர்களது இறுதிக் கட்ட செயற்பாடு முற்றும் துறந்த ரிஷிகளின் நிலையை ஒத்ததாக இருக்கும். தமது குடும்ப அங்கத்தவர்களையும் ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் அதிகமாக நற்செயல் புரிய ஊக்குவிப்பார்கள். ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ரமழானில் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் தங்களது குடும்பத்தாரை தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்து இரவை உயிர்ப்பிப்பார்கள். தங்களது கீழாடையை வரிந்து கட்டிக் கொண்டு உற்சாகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா
பெண்கள் அரபுக் கல்லூரி


Add new comment

Or log in with...