Home » லட்சத்தீவு அழகில் தன்னையே பறிகொடுத்த பிரதமர் மோடி!

லட்சத்தீவு அழகில் தன்னையே பறிகொடுத்த பிரதமர் மோடி!

by mahesh
January 6, 2024 8:00 am 0 comment

இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவு சென்றிருந்த நிலையில், அது தொடர்பாக மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவை அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த படங்கள் இணையத்தில் பரபரப்பாகி வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தார். திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த விமான நிலையம் உள்ளிட்ட பல திட்டங்களை அவர் திறந்து வைத்தார். மேலும், பல புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினமே லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். அங்கும் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்கிடையே லட்சத்தீவில் எடுக்கப்பட்ட படங்களைப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

பிரதமர் மோடி லட்சத்தீவில் ‘ஸ்நோர்கெலிங்’ செய்துள்ளார். ‘ஸ்நோர்கெலிங்’ என்பது வாயில் ஒரு குழாயை வைத்துச் சுவாசித்துக் கொண்டு கடலில் நீந்தும் ஒரு முறையாகும். லட்சத்தீவில் பிரதமர் மோடி ‘ஸ்நோர்கெலிங்’ செய்த நிலையில், அந்தப் படங்களை அவர் பகிர்ந்துள்ளார். லட்சத்தீவின் அழகிய கடற்கரையில் அதிகாலை நடைப்பயிற்சி செய்வது மகிழ்ச்சியைத் தருவதாக அவர் பதிவிட்டுள்ளார்.

லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி அந்த பயணத்தில் 1,150 கோடி ரூபா மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. லட்சத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இப்போது டெல்லிக்குத் திரும்பிவிட்டார். இந்தச் சூழலில்தான் அவர் லட்சத்தீவு படங்களைப் பகிர்ந்து கொண்டார், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சமீபத்தில், லட்சத்தீவு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் உள்ள மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். லட்சத்தீவில் இருந்து எடுத்த படங்களைப் பகிர்கிறேன்.

லட்சத்தீவில் வளர்ச்சியை ஏற்படுத்தி அங்குள்ள மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, சிறந்த சுகாதாரம், அதிவேக இணையம் மற்றும் சுத்தமான குடிநீர் ஆகியவற்றை உருவாக்கும் அதேநேரம், உள்ளூர் கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொண்டாட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். இதை மனதில் வைத்தே புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்தோரிடம் உரையாடினேன். எங்கள் முயற்சிகள் சிறந்த சுகாதாரம், மக்களுக்குத் தன்னம்பிக்கை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயம் எனப் பல துறைகளில் வளர்ச்சிக்கு உதவுவதை நேரடியாகப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. அங்கே நான் கேட்ட சம்பவங்கள் நெகிழ வைப்பதாக இருந்தன.

இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பை கொடுத்தது. புதுப்புது சாகசங்களை விரும்புவோர் நிச்சயம் லட்சத்தீவுக்கு செல்ல வேண்டும். நான் அங்கிருந்த போது ‘ஸ்நோர்கெல்லிங்’ செய்தேன். அது மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. அழகிய கடற்கரைகளில் அந்த அதிகாலை நடைப்பயணங்கள் பேரின்ப தருணங்களாக இருந்தன. லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல; அது மக்களின் பாரம்பரியம் மற்றும் அன்பிற்குச் சான்றாக இருக்கும் இடம். இது எப்போதும் நினைவில் நிற்கும் செழுமையான பயணமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT