வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை இரத்து | தினகரன்

வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை இரத்து

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் இடம்பெறும் யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்கான வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை இம்முறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, பாத யாத்திரைக் குழுவின் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  'வழமைபோல பாத யாத்திரைக்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சு, இந்து கலாசார அமைச்சு, மொனராகலை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலருக்கு எழுதிய கடிதத்திற்கு இன்னும் எதுவித பதிலும் வரவில்லை. பாதுகாப்புத் துறையினரின் பதில் கடந்த ஒவ்வொரு வருடமும் கிடைக்கப் பெற்றிருந்தன. ஆனால், இம்முறை பதில் இன்னும் கிடைக்கவில்லை

மேலும், உற்சவ காலம் தொடர்பிலும் முரண்பாடுகள் இருப்பதால், மொனராகலை அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தோம். அதற்கும் பதில் கிடைக்கவில்லை

அதாவது இந்த வருடம் அஸ்டலக்ஷமி தமிழ்க் கலண்டரில் கதிர்காமக் கொடியேற்றம் 02.07.2019 இல் நடைபெறும் என்றும் தீர்த்தோற்சவம் 18.07.2019 இல் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆங்கில கலண்டரில் கதிர்காம எசலபெரஹரா 16.07.2019 இல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கதிர்காமம். கொம் இணையத்தளத்தில் கதிர்காமக் கொடியேற்றம் 31.07.2019 இல் நடைபெறும் என்றும் தீர்த்தோற்சவம் 15.08.2019 இல் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எங்களை பொறுத்தவரை குழப்பமாகவுள்ளது. கடந்த காலத்தில் இப்படியானதொரு சர்ச்சை நிலவியபோது, அந்த வருடம்  ஒருமாத காலம் சொல்லொணாக் கஷ்டப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் இடைநடுவில் தாமதிக்க வேண்டி ஏற்பட்ட அவலநிலையை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, நாங்கள் முறைப்படி பாத யாத்திரையை உரிய தினத்தில் ஆரம்பிப்பதற்கு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, கதிர்காம உற்சவ காலத்தை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம் எனக் கேட்டிருந்தோம். ஆனால் பதில் வரவில்லை. அதுவும்  சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாண பாத யாத்திரிகர்களும் சற்று பின்வாங்கியுள்ளனர்.

மேற்குறித்த காரணங்களால் இம்முறை பாத யாத்திரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

எனினும், அக்கரைப்பற்று அல்லது திருக்கோவில் முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்வது பற்றி பலரும் விதந்துரைத்துள்ளனர். சாத்தியமானால் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்' என்றார்.

(சகா -காரைதீவு  குறூப்  நிருபர்)


Add new comment

Or log in with...