Home » டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் யாழ்.பல்கலை சமூகம்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் யாழ்.பல்கலை சமூகம்

by Prashahini
January 5, 2024 10:09 am 0 comment

நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரால் பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சிரமதானப் பணிகளினால் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் எவரும் அடையாளப்படுத்தப்படவில்லை என்று நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் டொனால்ட் சுகந்தராஜ் ஜெபரெட்ணம் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவர் டெங்கு தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் சகல விடுதிகளிலும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், வடக்கு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ,கேதீஸ்வரன் மற்றும் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் நேரடி நெறிப்படுத்தலின் கீழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் அதன் சுற்று வட்டாரங்களிலுள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களில் சிரமதானப் பணிகள் கடந்த செவ்வாயன்று (02) மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சிரமதானப் பணிகளில் பல்கலைக்கழத்தின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

சிரமதானப் பணியில் ஈடுபட்டவர்களால் நுளம்பு பெருகுவதற்கான பல இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.

இதன்போது சிரமதானப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான உதவிகளையும், சுத்திகரிப்பு மற்றும் கழிவகற்றல் பணிகளுக்கான ஆதரவையும் நல்லூர் பிரதேச சபையும், நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் வழங்கின.

தொடர்ந்து வரும் நாட்களில் பல்கலைக்கழகத்தின் விடுதிகள் மற்றும் பிரதான வளாகத்தினுள் அமந்துள்ள பீடங்களில் விசேட புகையூட்டல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் டொனால்ட் சுகந்தராஜ் ஜெபரெட்ணம் மேலும் தெரிவித்தார்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT