தேவாலயத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி | தினகரன்


தேவாலயத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி

தாய், தந்தையரை இழந்த 05 சிறுவர்களின் கல்விச் செலவுகளையும் 'பைரஹா' பொறுப்பேற்பு

பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென, பைரஹா பார்ம்ஸ் நிறுவனம் 15 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. இதில் பத்து இலட்சம் ரூபாவுக்கான காசோலையை, சீனன் கோட்டை பள்ளிச் சங்க பிரதித் தலைவரும் பைரஹா பாம்ஸ் முகாமைத்துவ பணிப்பாளருமான யாகூத் நளீம்   மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளித்தார்.  

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்த யாக்கூத் நளீம் உயிர்நீத்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.

நாட்டின் வரலாற்றில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்ட சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களின் புரிந்துணர்வில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாதென்றும் குறிப்பிட்டார்.  

நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த பைரஹா பார்ம்ஸ் தனியார் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சமூகங்களுக்கு இடையிலான உறவுகைள பயங்கரவாாதத்தால் துண்டிக்க முடியாதெனத் தெரிவித்தார்.  

பைரஹா பார்ம்ஸ் உரிமையாளரான காலம் சென்ற எம்.ஐ.எம் நளீம் ஹாஜியாருடன் தனக்கிருந்த நீண்ட கால தொடர்பினை ஞாபகப்படுத்திய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நளீம் ஹாஜியாரின் இன, மத பேதமற்ற நற்சேவைகளை பேருவளையைச் சேர்ந்தவன் என்ற ரீதியில், தான் நன்கு தெரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

கட்டானை கத்தோலிக தேவாலயப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 5 இலட்சம் ரூபா நிதியை,யாகூத் நளீம் வேறொரு நிகழ்வில் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் தாக்குதல் சம்பவத்தில் தாய், தந்தையரை இழந்த கட்டான பகுதியைச் சேர்ந்த 5 பாடசாலை சிறார்களுக்கு அவர்களது கல்விப் பணி முடியும் வரை புலமைப்பரிசிலை பெற்றுக் கொடுக்கவும் பைரஹா பார்ம்ஸ் தனியார் நிர்வனம் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பைரஹா பார்ம்ஸ் நிறைவேற்று பணிப்பாளர் ரியால் யாகூப், விற்பனை சேவை பொது முகாமையாளர் க்ளவர் பெர்னாந்து ஆகியோரும் கொழும்பு பேராயருடன் இடம் பெற்ற இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.  

(பேருவளை விஷேட நிருபர்)


Add new comment

Or log in with...