மீண்டும் இரவு 10 மணி முதல் ஊடரங்கு சட்டம் அமுல்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து இன்றும் (27) இரவு 10.00 மணி முதல் நாளை (28) அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

சாய்ந்தமருதில் நேற்று (26) இரவு இடம்பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அமுல்படுத்தப்பட்ட, பொலிஸ ஊரடங்கு சட்டம், தொடர்ந்தும் மறு அறிவித்தல்வரை அமுலில் இருக்கும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 3.30 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை (23) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (22) இரவு 8.00 மணி முதல், நேற்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. மீண்டும் நேற்று (23) இரவு 9.00 மணி முதல், இன்று (24) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, கடந்த புதன்கிழமை (24) முதல் இரவு 10.00 மணி முதல், அதிகாலை 4.00 மணி வரை தொடர்ச்சியாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

\>

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தலில்,

பொலிஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அரசாங்க ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற காலப்பகுதியில், வீதியில், புகையிரத பாதையில், பூங்காக்கள், பொழுதுபோக்கு மைதானங்கள் அல்லது ஏதேனும் ஒரு பொது இடத்தில் இருத்தல் அல்லது அதன் ஊடாக பயணித்தல் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான இடங்களை பயன்படுத்துதல் அல்லது அதில் இருத்தல் அல்லது அதனூடாக பயணித்தல் போன்ற விடயங்களை மேற்கொள்வது தொடர்பில் அவசர தேவை ஏற்படும் நிலையில், ஏதேனும் ஒரு பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தமது தேவையை தெரிவித்து கோரிக்கை விடுக்கும் நிலையில், குறித்த காரணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி  ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை நோக்கி செல்லும் நபர்கள் தங்களது விமான சீட்டை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள், ஊடக அமைச்சினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் ஊரடங்கு சட்டம், உரிய முறையில் நடைமுறைப் படுத்தப் படுகின்றது என்பதை, அந்தந்த பொலிஸ் நிலையத்தின், பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் உதவிப் பொலிஸ்மா அதிபர்கள் உறுதிப்படுத்திக் கொள்வது அவர்களது பொறுப்பாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...